செய்திகள்

கொரோனா வைரஸ்: தென் கொரிய வாழ் இலங்கையர்களின் நிலை என்ன?

தென் கொரியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கோவிட் – 19) காரணமாக அங்குள்ள பெருமளவிலான இலங்கையர்கள் அச்ச நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களில் பெருமளவிலான பணியாளர்கள் தென் கொரியாவிலேயே உள்ளனர்.

சுமார் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் அங்கு வாழ்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

தென் கொரியாவின் டேகு நகரில் அதிகரித்துவரும் கோவிட் – 19 வைரஸ் தாக்கம் காரணமாக, அங்கு வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது.

சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்களின் பிரகாரம், தென் கொரியாவிலுள்ள எந்தவொரு இலங்கையர்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என அமைச்சு தெரிவிக்கின்றது.

தென்கொரியாவில் அச்சநிலைமையை எதிர்நோக்கியுள்ள 20,000திற்கும் அதிகமான இலங்கையர்கள்.
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

தென்கொரியாவில் இருபது ஆயிரத்திற்கும் அதிகமான இலங்கையர்களில், டேகு நகரில் மாத்திரம் 915 இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் சோல் நகரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொலைபேசி இலக்கங்கள்:

தூதரகத்தின் பொதுவான தொலைபேசி இலக்கங்கள்:

(0082)-2-735-2966, (0082)-2-735-2967, (0082)-2-794-2968

செல்வி. சசங்கா நிகபிட்டிய, முதலாம் செயலாளர் – (0082)-10-7222-1352

திரு. செனரத் யாப்பா, ஆலோசகர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) – (0082)-10-3389-2227

செல்வி. நிலந்தி பெலவத்தகே, இரண்டாம் செயலாளர் – (0082)-10-4084-0855

செல்வி. சமந்தா சேநாயக்க, மூன்றாம் செயலாளர் (வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி) – (0082)-10-7499-2966

இதுதொடர்பாக, தென் கொரியாவின் பூசன் நகரில் பணிபுரியும் இலங்கையை சேர்ந்த விஜேஸ்கண்ணாவிடம் பிபிசி தமிழ் பேசியது.

விஜேஸ்கண்ணா
Image caption விஜேஸ்கண்ணா

தென்கொரியாவில் பரவிவரும் கோவிட் – 19 வைரஸ் காரணமாக தாம் அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த வைரஸ் பரவல் தொடர்பில் தமக்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அச்ச நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமொன்றிற்கு இலங்கை அதிகாரிகள் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) அழைப்பு விடுத்துள்ளதாகவும், அந்த கலந்துரையாடலின் பின்னரே எதிர்வரும் காலத்தில் எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், தென் கொரியாவில் வாழும் தாம் பாரிய அச்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளதாக விஜேஸ்கண்ணா கூறுகிறார்.

டயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள இலங்கையர்களின் நிலைமை

ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள இரண்டு இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.

கப்பல் நிறுவனத்துடன் டோக்கியோவிலுள்ள இலங்கை தூதரகம் நெருக்கமாக ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் அச்சநிலைமையை எதிர்நோக்கியுள்ள 20,000திற்கும் அதிகமான இலங்கையர்கள்.
படத்தின் காப்புரிமை GETTY IMAGES

குறித்த இரண்டு இலங்கையர்களும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் உள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது.

டயமண்ட் ப்ரின்சஸ் கப்பலிலுள்ள 454 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பாதிக்கப்பட்டவர்கள் ஜப்பான் – கனகவா மாகாணத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழுமையாக குணமடைந்த நோயாளி

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி முழுமையாக குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான பெண்ணொருவர் கடந்த மாதம் 27ஆம் தேதி இலங்கையில் முதல் தடவையாக அடையாளம் காணப்பட்டார்.

20,000திற்கும் அதிகமான இலங்கையர்கள்

சீனாவிலிருந்து சுற்றுலா பயணத்திற்காக வருகை தந்த பெண்ணொருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண், கொழும்பு புறநகர் பகுதியிலுள்ள ஐ.டி.எச். தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் பூரண குணமடைந்திருந்தார்.

குறித்த பெண் கடந்த 19ஆம் தேதி பூரண குணமடைந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி, சீனா திரும்பினார்.

சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட இலங்கையர்கள்

சீனாவில் கொரோனா தொற்று அச்ச நிலைமை காரணமாக அங்கிருந்து விசேட விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்ட இலங்கையர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தியத்தலாவை இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட விசேட வைத்தியசாலையில் அவர்கள் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இலங்கைக்குள் கொரோனா வைரஸ் அச்ச நிலைமை தனிந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

Sources BBC Tamil

Back to top button