கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு – Coronavirus in india
இந்தியாவில் கொரோனா வைரஸ் (coronavirus in india) பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் உள்ள உத்தம் நகர் பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளர் சஞ்சீவ குமார் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இவர் தாய்லாந்து மற்றும் மலேசியாவுக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.
Sanjeeva Kumar, Special Secretary (Health), Union Health Ministry: One more #COVID19 case in Delhi (resident of Uttam Nagar) has been confirmed, taking the total number of positive cases in the country to 31. The patient has a travel history from Thailand & Malaysia.
சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில், கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும்வரை, அதிக அளவில் மக்கள் கூடும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் அல்லது ஒத்திவைக்கலாம் என்று அறிவுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளது. இது போன்ற கூட்டங்கள் நடக்கும்பட்சத்தில், இம்மாதிரியான கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கு எம்மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை அரசு வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடு
சென்னை விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உடனடி சிகிச்சை அளிக்க பிரத்தியேக ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், 100 நபர்கள் கொண்ட மருத்துவக் குழுவை அமைத்து தினமும் 57 விமானங்களில் வரும் பயணிகளிடம் கொரோனா தொற்று உள்ளதா என சோதனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
சீனா மட்டுமல்லாது, இரான், இத்தாலி என கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பல நாடுகளில் இருந்து தினமும் சுமார் 8,500 நபர்கள் சென்னை வருகிறார்கள் என்பதால், சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ”கொரோனா தொற்று ஏற்பட்ட நபரை கொண்டுசெல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்தை முழுவதுமாக சுத்திகரிப்பு (ஸ்டெர்லைஸ்) செய்துதான் அடுத்தமுறை பயன்படுத்தமுடியும். இதனால் பிரத்தியேக ஆம்புலன்ஸ் ஒன்றை தயாராக வைத்துள்ளோம். விமான நிலையத்தில் இதுவரை சுமார் 1,00,111 நபர்களுக்கு சோதனை செய்துள்ளோம். அதில் 1,243 நபர்களை நேரடியாக சோதித்து, பின்னர் அவர்கள் வீடுகளுக்குச் சென்றாலும், தொடர்ந்து அவர்களை கண்காணித்தோம். தற்போதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிபடுத்தியுள்ளோம். 54 நபர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து சோதனை செய்தோம். யாருக்கும் பாதிப்பு இல்லை,” என்றார்.
கொரோனா பற்றிய விழிப்புணர்வு அதிகம் தேவை என்றும் வதந்திகள் பரவுவது கட்டுப்படுத்தப்படவேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ”சீனாவில் 100 பேருக்கு பாதிப்பு இருந்தால் இரண்டு பேர் மரணம் அடைகிறார்கள் என சீனா அரசின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் 100 சதவீதத்தில் இறந்தவர்கள் இரண்டு சதவீதம். அதனால், கொரோனா பாதிப்பு குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். அதேநேரம், அதிக விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், கல்யாண மண்டபங்கள் என மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடும் இடங்களில் சுகாதாரமாக இருப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன,” என்கிறார் அமைச்சர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு: டெல்லியில் இரு பள்ளிகள் மூடல் – கடற்படை நிகழ்வு ரத்து
”கை கழுவுவது, கைகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் என்பதை அறிவுறுத்துகிறோம்.
மூன்று அறிகுறிகளை பார்க்கவேண்டும். தொடர் இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்லவேண்டும். தனியார் மருத்துவமனைகளும் கொரோனா வார்டு ஒன்றை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தேவையான எண்ணிக்கையில் இருப்பு உள்ளது என்றும் பாதிப்பை தடுக்க முககவசம் போதுமான அளவில் உள்ளன என்றும் தெரிவித்தார். தமிழக அரசின் இலவச மருத்துவ உதவி எண் 104-இல் தினமும் சுமார் 100 நபர்கள் கொரோனா பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்கின்றனர் என்றார்.
கொரோனா பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வதந்திகளை தடுக்கவும் மதுரைமாவட்ட காவல்துறையின் முகநூல் பக்கத்தில் மீம்ஸ் வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.