செய்திகள்
Trending

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியது இந்தியா -Covaxin News In Tamil

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்குவதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய இந்தியாவின் தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியான வேணுகோபால் ஜி சோமனி, “தடுப்பூசிகள் 100 சதவீதம் பாதுகாப்பானது. மிகச் சிறிய அளவில் பாதுகாப்பு பிரச்சனை இருந்தால் கூட நாங்கள் மருந்தை அனுமதிக்கமாட்டோம். எல்லா தடுப்பூசிகளிலும் காய்ச்சல், வலி மற்றும் சில ஒவ்வாமைகள் இருக்கும். ஆனால், கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் ஆண்மைக் குறைபாட்டால் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பது முற்றிலும் தவறான தகவல்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இந்த இரண்டு தடுப்பூசிகளுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த தடுப்பூசிகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும் தேதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதன் மூலம், கொரோனா வைரஸ் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை, டி.சி.ஜி.ஐ அமைப்பு அனுமதித்திருப்பது ஒவ்வொரு இந்தியனையும் பெருமை அடைய செய்யும். சுயசார்பு இந்தியா என்ற கனவை நனவாக்க, நம் நாட்டின் அறிவியலாளர்கள் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை இது வெளிப்படுத்துகிறது” எனவும் அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்த நெருக்கடியான சூழலிலும் சிறப்பாக தங்கள் பணிகளை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள், விஞ்ஞானிகள், காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என எல்லா கொரோனா போராளிகளுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம். எப்போதும் உளமாற அவர்களுக்கு நன்றி கூறுவோம்” என பிரதமர் நரேந்திர மோதி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..

மத்திய அமைச்சர் பேட்டி

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் மேம்படுத்தி வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று (ஜனவரி 2) மாலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதியை கட்டுப்பாடுகளுடன் வழங்கலாம் என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே தடுப்பூசி மருந்து போடும் தேவைக்காக 50 மில்லியனுக்கும் அதிகமான தமது தடுப்பூசி மருந்து தயாரிப்பை சீரம் நிறுவனம் தயாராக வைத்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) நிபுணா் குழு சனிக்கிழமை பரிந்துரைத்திருந்தது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சனிக்கிழமை நடைபெற்ற சிடிஎஸ்சிஓ நிபுணா் குழு கூட்டத்தில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பல்வேறு நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதியளிப்பதற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு தயாரிப்பான கோவேக்ஸின் தடுப்பூசியை ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த இரண்டு தடுப்பூசிகள் தொடர்பான பரிந்துரைகள் மீது இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் இறுதி முடிவெடுத்துள்ளதால், விரைவில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை பொது பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்யப்படுவது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த அனுமதி இருந்தால்தான் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். மேலும், சீரம் நிறுவனத்திடம் தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பிற வெளிநாடுகளுக்கும் அதை விநியோகிக்க சட்ட அனுமதி கிடைக்கும்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நேற்று (ஜனவரி 2) நடைபெற்றது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “இந்த ஒத்திகையில் முதல் கட்டமாக 25 நபர்களுக்கு ஊசி போடுவதற்கான நடைமுறை சோதனை செய்யப்படும். உண்மையான ஊசி எதுவும் செலுத்தப்படமாட்டாது. 25 நபர்களுக்கு ஊசி செலுத்துவதற்கு என்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும், தடுப்பூசி செலுத்தும் மையங்களில் என்ன வசதிகள் தேவை என்பதை தெரிந்துகொள்வதற்காகவும், வசதிகளை மேம்படுத்துவதற்காகவும் இந்த ஒத்திகை பயன்படும்” என்று தெரிவித்திருந்தார்.

தடுப்பூசி

தடுப்பூசியை பொறுத்தவரை, இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியுள்ள கோவேக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. ஜைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஜைகோவ்-டி தடுப்பூசி, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை தொடங்க நேற்று அனுமதி கிடைத்துள்ளது.

மேலும், ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவின் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் விநியோகிக்க உள்ளது. இந்த தடுப்பூசியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

Source
BBC
Back to top button