கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் உருவாகும் தடுப்பு மருந்து எப்போது வரும்?
கொரோனா தடுப்பூசி பரிசோதனையில் வெற்றி பெற்றதாக பல நாடுகளில் இருந்து செய்திகள் வருகின்றன. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனையின் நிலைமை எப்படி இருக்கிறது? அது தடுப்பூசியாக வருமா? சொட்டு மருந்தாக வருமா?
கொரோனா சிக்கலில் மாட்டி மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது உலகம். பல திசைகளில் இருந்தும் தடுப்பூசிகள் கைகொடுக்க ஓடி வந்துகொண்டிருக்கின்றன.
எது முதலில் களத்துக்கு வந்து கை கொடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.
ஆக்ஸ்ஃபோர்டு – அஸ்ட்ராஜெனேகா, ஃபைசர், மாடர்னா, ஸ்புட்னிக் V ஆகிய கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் வெற்றியை அறிவித்துள்ளன.
ஆனால், உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமான இந்தியா, தானே ஆராய்ச்சி செய்து உருவாக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது சந்தைக்கு வரும்? அந்த பரிசோதனை எப்படி உள்ளது?
இந்தியத் தடுப்பூசியான கோவேக்சின் ஹைதராபாத்தில் இருந்து செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்படுகிறது. இந்த தடுப்பூசியின் 3ம் கட்ட கிளினிகல் பரிசோதனையில் உற்சாகமான அறிகுறிகள் தென்படுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ண எல்லா கூறுகிறார்.
ஆங்கிலத்தில் கிளினிகல் பரிசோதனை என்று சொல்லப்படுவது, ஆராய்ச்சிக்கூட சோதனைகள் முடிந்து நோயாளிகளுக்கு மருந்தை செலுத்தி சோதிப்பதைக் குறிக்கும். (இதை தமிழில் நாம் பண்டுவப் பரிசோதனை என்று வேண்டுமானால் கூறலாம்).
“இந்தியாவில் கிளினிகல் பரிசோதனை மேற்கொள்வது கடினமான பணிகளில் ஒன்று. மருந்தை போட்டுக்கொள்ள முன்வந்த தன்னார்வலர்களை நான் பாராட்டவேண்டும். ஏனெனில், இந்தியாவில் தடுப்பூசியின் திறனை சோதனையை நடத்தும் வெகுசில முன்னோடி நிறுவனங்களில் எங்களுடையதும் ஒன்று.
இது முடிய கொஞ்சம் காலம் பிடிக்கும். ஆனால், உலக அளவிலான விதிமுறைகளை நாங்கள் பின்பற்றியே செய்கிறோம்” என்று பிபிசியிடம் தெரிவித்தார் கிருஷ்ண எல்லா.
தடுப்பூசி திறன் சோதனைக்காக தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆள்கள் மத்தியில் நோய்த் தாக்கத்தின் விகிதம் குறைவாக இருக்கும்.
எல்லா தடுப்பூசி பரிசோதனையிலும் இது நடக்கும். ஆனால், ஒவ்வொரு தடுப்பூசியின் சோதனையிலும், இப்படி நோய்த் தாக்கும் விகிதம் எந்த அளவு குறைகிறது என்பது மாறுபடும். தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள் திரளின் இனம், மரபணு தன்மைகளுக்கு ஏற்பவும் ஒரு தடுப்பூசியின் நோய்த் தடுக்கும் திறன் மாறுபடும்.
அதனால்தான், பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் தடுப்பூசி பரிசோதனையை பல்வேறு நாடுகளின் மக்கள் மத்தியிலும் மேற்கொள்கின்றன.
எடுத்துக்காட்டாக இந்தியாவில், டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரி என்ற மருந்து நிறுவனம் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கான கிளினிகல் பரிசோதனையை இந்தியாவில் மேற்கொண்டுள்ளது.
பிரிட்டனில் உருவாகும் ஆக்ஸ்ஃபோர்ட் – ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கான கிளினிகல் பரிசோதனையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் இந்தியாவில் மேற்கொண்டுள்ளது.
மேற்கொண்ட தடுப்பூசிகள் இந்திய மக்களின் மரபணு, இனவழிப் பின்னணியில் எப்படி வேலை செய்கிறது என்பதை இந்தியர்களுக்கு அளித்து இந்த நிறுவனங்கள் பரிசோதிக்கும்.
உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசியை எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்வதும், சேகரித்து வைப்பதற்கான குளிர்ப்பதன வசதி குறைவும் இந்தியா சந்திக்கும் இன்னொரு பிரச்சனை.
இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வைக் கண்டறிவதில் தங்கள் பாரத் பயோடெக் நிறுவனம் ஓரடி முன்னால் இருப்பதாக கூறுகிறார் கிருஷ்ண எல்லா.
“ஊசியாகப் போடுவது மிக கடினம் என்று நாங்கள் பார்க்கிறோம். இதற்காக நாங்கள் ஒரு மாற்றுத் திட்டத்தை உருவாக்க முயல்கிறோம். ஊசியாகப் போடுவதற்குப் பதிலாக மூக்கில் சொட்டு மருந்தாகப் போடக்கூடியவகையில் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கப் பார்க்கிறோம். இப்படிச் செய்தால் அதை ஒரு அங்கன்வாடிப் பணியாளர் மூலம் கூட மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துவிட முடியும்” என்று பிபிசியிடம் கூறினார் கிருஷ்ண எல்லா.
மூக்கில் ஸ்பிரே செய்யும் வகையிலான தடுப்பு மருந்து ஒன்றினை சீனா கூட பரிசோதனை செய்துவருவதாக செய்திகள் வந்துள்ளன. ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து கூட்டு முயற்சியாக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விதமான தடுப்பு சொட்டுமருந்துகள் வந்தால், அதை மக்கள் அவர்களாகவே கூட போட்டுக்கொள்வார்கள். சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்குப் பயிற்சி அளிக்கவேண்டிய சுமை மிகப்பெரிய அளவில் குறையும்.
இந்தியத் தடுப்பு மருந்து மலிவானதாக இருக்குமா?
“இந்தியாவில் உற்பத்திச் செலவு குறைவு. இதனால் ஏற்படும் ஆதாயத்தை நுகர்வோர் பெற முடியும். எடுத்துக்காட்டாக ரோட்டா வைரஸ் தடுப்பூசியை மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. உலக அளவில் அந்த தடுப்பூசி டோஸ் ஒன்றின் விலை 65 டாலராக இருந்தது. அந்த விலையை குறைத்துக் குறைத்து நாம்தான் ஒரு டாலராக ஆக்கினோம். எனவே, கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியையும் அதிகரித்தால் விலை குறையும்” என்கிறார் கிருஷ்ண எல்லா.
கோவேக்சின் மட்டுமில்லாமல், இந்தியாவில் இன்னொரு கொரோனா தடுப்பூசியும் உருவாக்கப்பட்டு வருகிறது. அகமதாபாத்தில் இருந்து இயங்கும் ஜைடஸ் கேடில்லா என்ற நிறுவனம் அந்த தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.
“நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம். பரிசோதனைகள் நடக்கின்றன. அவற்றை நாங்கள் மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். மேற்கொண்டு தகவல்களை இந்த நிலையில் நாங்கள் தர முடியாது” என்று பிபிசியிடம் தெரிவித்தார் இந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் டாக்டர் ஷார்வில் பட்டேல்.
பாரத் பயோடெக், ஜைடஸ் கேடில்லா இரண்டுமே தங்கள் மருந்து எப்போது வரும் என்று காலக்கெடுவைத் தெரிவிக்க விரும்வில்லை. ஆனால், இரு நிறுவனங்களுமே அடுத்த ஆண்டு உலகத் தடுப்பூசி சந்தையில் தாங்களும் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றன.