Ever given suez canal live updates :- சூயஸ் கால்வாய் கப்பல்: 80% மீட்புப்பணி முடிந்தாலும் அடுத்தடுத்து தொடரும் சிக்கல்கள்
எகிப்தின் சூயஸ் கால்வாயில் தரை தட்டி நின்ற எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பலை, மிதக்கும் நிலைக்கு கொண்டு வருவதில் வெற்றி பெற்ற நிபுணர்கள், அதை கரை பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதன் போக்குவரத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகள் அவ்வளவு இயல்பான பணியாக இருக்காது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
400 மீட்டர் நீளம் (1,300 அடி) கொண்ட அந்த கப்பல், தற்போதைய நிலைவரை, 80 சதவீத அளவுக்கே மிதக்கும் நிலைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக சூயஸ் கால்வாய் ஆணைம் தெரிவித்துள்ளது. அனேகமாக இந்த கப்பல் திங்கட்கிழமை நாளின் பிற்பகுதி நிறைவிலேயே நகரத் தொடங்கலாம் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
ஆனால், கப்பலை இயல்பு நிலைக்கு திரும்ப வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் தலைமை அதிகாரி, அந்த பணிகள் அவ்வளவு சுலபமானதாக இருக்காது என்று எச்சரித்துள்ளார்.
உலகின் அதிமுக்கிய கடல் வாணிப பாதைகளில் ஒன்று சூயஸ் கால்வாய். அதன் குறுக்கே தரை தட்டி நின்ற கப்பல் காரணமாக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அந்த வழியாக நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களில் சரக்குகளை கொண்டு செல்லும் கப்பல்களின் சேவை தடைபட்டது. பல கப்பல்கள் ஆப்பிரிக்கா வழியாக ஆசியா நாடுகளுக்கு செல்லும் வகையில் அவற்றின் பாதையை மாற்றிக் கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளாகின.
இந்த நிலையில், எவர் கிவன் கப்பல் பகுதியளவு மட்டுமே மீட்கப்பட்டிருப்பது, தடைபட்ட சூயல் கால்வாயில் சரக்குகளுடன் நிலைகொண்டிருந்த மற்ற கப்பல்களின் நடமாட்டத்துக்கு வழிவகுத்திருப்பது மீட்புக்குழுவினருக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது. ஆனாலும், தரை தட்டிய எவர் கிவன் கப்பலை அடுத்து அந்த இடத்தில் இருந்து நகர வைப்பது மிகப்பெரிய சவாலாக மீட்புக்குழுவினருக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் இருக்கும்.
எவர் கிவன் கப்பலை மிதக்கும் நிலைக்கு கொண்டு வர சூயஸ் கால்வாய் ஆணையமும் ஸ்மித் சால்வேஜ் என்ற டச்சு நிறுவனம் இழுவை படகுகள் உதவியுடன் கப்பலின் பின்பகுதியை நீர்ப்பகுதிக்கு கொண்டு வரும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றுள்ளன. இந்த இழுவை படகுகளுக்கு உதவியாக அகழ்வுக்கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டன. அவை அங்கிருந்த மணல், கப்பலின் நங்கூரம் சிக்கியிருந்த மணல் பகுதியை அகற்றும் பணியில் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கின.
கரையில் இருந்து நான்கு மீட்டர் தூரத்தில் சிக்கியிருந்த கப்பலின் பின்புற பகுதி, இப்போது 102 மீட்டர் தூரத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டிருப்பதால், எவர் கிவன் கப்பல் முழுமையாக மிதக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. இருந்தாலும், கடல் அலை உயரத் தொடங்கும்போதுதான் கப்பலை நகர வைக்கும் முயற்சியை தொடங்க முடியும். அந்த தருணத்துக்காக காத்திருக்கிறது. இதற்கு அனேகமாக உள்ளூர் நேரப்படி 11.30 மணிவரை ஆகலாம் என்கிறது சூயஸ் கால்வாய் ஆணையம்.
எவர் கப்பல் மற்றும் இழுவை படகுகளின் நிலைமை
சூயஸ் கால்வாய் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடல் அலை 2 மீட்டர் அளவுக்கு உயரும்போது, எவர் கிவன் கப்பலை முழுமையாக கடலின் மையப்பகுதிக்கு நகர்த்த முடியும். அதன் பிறகு அலை ஓட்டத்துக்கு ஏற்ப கப்பலை இயக்க முடியும்.
அங்கிருந்து கால்வாயின் அகலமான பகுதிக்கு கப்பல் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்ட பிறகே, சூயஸ் கால்வாயில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும். இன்றைய தினம்வரை சூயஸ் கால்வாய் பகுதியில் எவர் கிவன் கப்பலின் இருப்பு காரணமாக, 367 கப்பல்கள் அந்த வழியாக பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஒஸாமா ரேபி, எகிப்திய அரசு தொலைக்காட்சியிடம் பேசும்போது, திங்கட்கிழமை பிற்பகலுக்கு பிறகு கால்வாய் பகுதியில் போக்குவரத்து சீரடையும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் ஒரு நொடியைக் கூட வீணாக்க தாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்மித் சால்வேஜ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் பெர்டோஸ்கி டச்சு வானொலிக்கு அளித்த பேட்டியில், எவர் கிவன் கப்பல் மிதக்கும் நிலைக்கு வந்திருப்பது மகிழ்ச்சி தரும் செய்திதான் என்றாலும், அதை வைத்து மட்டும் எல்லாம் முடிந்து விட்டது என்று கூறி விட முடியாது என கூறியுள்ளார்.
கப்பலின் முன்பகுதியில் சிக்கியிருக்கும் மணல், சேறு, களிமண்ணை உயர் அழுத்த குழாய் உதவியுடன் தண்ணீரைய்ப் பீய்ச்சி அகற்ற வேண்டும். அந்த முயற்சி தோல்வி அடைந்தால், எவர் கிவன் கப்பலில் உள்ள கன்டெய்னர்களை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று பீட்டர் பெர்டோஸ்கி கூறினார்.
மிகவும் அடர்த்தியான ஆற்று மணலுடன் சேர்ந்த களிமண்ணில் மிக, மிக ஆழமாக கப்பலின் முன்பகுதி சிக்கியிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதுவரை என்ன நடந்தது?
தைவான் நாட்டைச் சேர்ந்த எவர் கிரீன் மரைன் நிறுவனத்திற்கு சொந்தமான எவர் கிவன் கப்பல்,கடந்த வியாழக்கிழமை சூயஸ் கால்வாயின் தென்கோடி முனையின் குறுக்கே சிக்கிக் கொண்டது.சுமார் 1,300 அடி நீளம் கொண்ட அந்த கப்பல் சூயஸ் கால்வாயை அடைத்துக் கொண்டதால் போக்குவரத்துக்கு வழியின்றி சூயஸ் கால்வாய் முடங்கும் அபாயம் ஏற்பட்டது.இன்று திங்கட்கிழமை கப்பலின் பின்பகுதி கால்வாயின் மேற்கு கரையிலிருந்து வெற்றிகரமாக நகர்த்தப்பட்டுள்ளதாகவும்,ஆனால் கால்வாயின் மேற்கு கரையை இடித்துக் கொண்டு நிற்கும் கப்பலின் முன் பகுதியை இன்னும் அப்படியே உள்ளதாகவும் கப்பல் கண்காணிப்பு மென்பொருள் காட்டுகிறது.கப்பலைச் சுற்றி தொடர்ந்து இழுவைப் படகுகள் நின்று கொண்டிருக்கின்றன.இந்த இழுவை படகுகள் கயிறுகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ எவர் கிவன் கப்பலை விடுவிக்க முயற்சித்து வருகின்றன.மற்றொரு பக்கம் கப்பலின் முன்பகுதிக்கு அடியில் உள்ள மணலையும்,களிமண்ணையும் தோண்டி எடுக்கும் பணியில் மண் அள்ளும் கப்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கப்பலை நிர்வகித்து வரும் பிஎஸ்எம் என்ற நிறுவனம்,கூடுதலாக பிரத்யேக மணல் அள்ளும் கப்பல் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பலினால் ஒவ்வொரு மணி நேரமும் 2,000 கியூபிக் மீட்டர் மணலை வெளியேற்ற முடியும் என தெரிவித்துள்ளது. ஒருவேளை கப்பலின் முன் பகுதியை மீட்கும் நடவடிக்கைகள் கடினமானால், அடுத்த கட்ட நடவடிக்கையாக கப்பலில் உள்ள எரிபொருளையும்,சரக்கு கப்பல்களையும் அகற்ற வேண்டி இருக்கும்.கப்பலிலிருந்து எரிபொருளை அகற்றுவது உதவியாக இருக்கும் என்றாலும், கப்பலின் எடையை குறைப்பதில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
20,000 கண்டெய்னர்களை கொண்டு செல்லும் திறன் கொண்ட எவர் கிவன் கப்பலில் தற்போது 18,000க்கும் மேற்பட்ட கண்டெய்னர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இத்தனை கண்டெய்னர்களை இடம் மாற்றுவது என்பது சவால் மிகுந்த காரியம்.இது மட்டுமல்லாமல், மீட்பு பணிக்கு தேவையான சரியான கிரேன் எந்திரங்களை கப்பல்களுக்கு அருகே கொண்டு வந்து நிலை நிறுத்துவது அடுத்த சவால்.இதில் ஏதாவது தவறு நிகழ்ந்தால், கிரேன் மூலம் கப்பல் சேதமடையலாம். அல்லது கப்பலில் சமநிலையின்மையை ஏற்படலாம்.கப்பலின் முன் பக்கத்தை மீட்பதற்கான முயற்சி அடுத்த ஐந்து மணி நேரத்தில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், எவர் கிவன் கப்பல் முழுமையாக மிதக்கத் தொடங்கி, சூயஸ் கால்வாய் சகஜ நிலைக்கு திரும்பும்.
Source BBC