ஏனையவை

தலைமுடி உதிர்வதை தடுப்பது எப்படி? நரை முடியை கருப்பாக்க என்ன வழி? – Hair Care Tips

ஒருவரின் தலைமுடி அவரின் அழகை மட்டுமல்லாது, உடல் நலத்தையும் வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது.

தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும், அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன போன்ற பிபிசி தமிழின் கேள்விகளுக்கு பதில் தந்தார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

முன்பெல்லாம் இளநரை என்பது 15-20 வயதில் வந்த நிலை மாறி, குழந்தைகளுக்கு இளநரை வருவது அதிகரித்துள்ளது என்கிறார் அவர்.

தலை முடி நரைத்தல் மற்றும் உதிர்தல் ஆகியவை குறித்து அவர் கூறிய முக்கியத் தகவல்களை தொகுத்து வழங்குகிறோம்.

உங்கள் வாழ்வியல் மாற்றங்களும் முடியை நரைக்க வைக்கும். நரைத்த முடி என்பது நீங்கள் போதிய ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளவில்லை என்பதன் அறிகுறி.

விட்டமின் பி காம்ப்ளெக்ஸ் இல்லாத உணவுகளை உண்ணுதல், மரபணு என நரை முடி உண்டாகப் பல காரணங்கள் உண்டு.

ஸ்ட்ரெயிட்டனிங் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தும் ரசாயனங்கள், மட்டமான மற்றும் தரமில்லாத ஷாம்பு, அதிக அளவில் பொடுகு ஆகியவையும் நரைத்த முடி வரக் காரணமாகும்.

வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்தான் முடிக்கு கரு நிறத்தைத் தருகிறது. விட்டமின் பி காம்ளெக்ஸ் மற்றும் அனைத்து வகையான ஊட்டச்சத்து அடங்கிய உணவு, எண்ணெய் தேய்த்து பராமரிப்பு செய்தல் ஆகியவை நரை முடி வருவதைத் தடுக்கும்.

இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவுவதுடன் முடி உதிர்வதையும் தடுக்கும்.

அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிக மிக அவசியம். விட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும்.

hair care tips

எண்ணெய் தேய்ப்பதற்கும் முடி உதிர்வது நிற்கும் என்பதற்கும் நேரடித் தொடர்பு கிடையாது. ஆனால், முடியைப் பராமரிக்க எண்ணெய் தேய்ப்பது அவசியம். அது முடி உதிர்வைத் தடுக்கும்.

விற்பனை செய்யப்படும் ஏதோ ஒரு கிரீம், ஆயில் ஆகியவற்றை தடவுவதால் முடி உதிர்வது, நரைப்பது தடுக்கப்படும் என்பது ஓரளவே உண்மை. பல வண்ணங்களில், ஊட்டம் மிகுந்த உணவுகளே முடிக்கு மிகவும் அவசியம்.

வெவ்வேறு வண்ணம் உள்ள உணவுகளை வழக்கமாக உண்பதற்காக அட்டவணை ஒன்றைத் தயார் செய்துகொள்வது நல்லது.

Source
BBC
Back to top button