கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்
கொவிட் – 19 தொற்றினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மேலும் சில மருத்துவமனைகளில் இடவசதிகளை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைவான, பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 22 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இதுவரை 3 ஆயிரத்து 63 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களில் 31 வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.
கொவிட் – 19 தொற்று பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு பணியகத்தின் தலைவரான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர்களில் 27 பேர் இராணுவ தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலும், 3 பேர் கடற்படையினரின் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், ஒருவர் விமான படையினரின் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளான வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வந்ததாலும், அவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த இலங்கையர்களுக்கும் இந்த கொவிட் 19 தொற்று ஏற்பட்டிருந்தது.
அத்துடன், வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்த 11 ஆயிரத்து 842 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனரா என காவற்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக இராணுவத்தளபதி லெப்டினன் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் – 19 தொற்று காரணமாக 72 நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 11 ஆம் திகதி கொவிட் 19 தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்.
மார்ச் 12 ஆம் திகதி 2 பேரும், 13 ஆம் திகதி 2 பேரும், 14 ஆம் திகதி 5 பேர், 15 ஆம் திகதி 8 பேரும், 16 ஆம் திகதி 10 பேரும் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 17 ஆம் திகதி 13 பேரும், 18 ஆம் திகதி 11 பேரும், 19 ஆம் திகதி 13 பேரும், 20 ஆம் திகதி 6 பேரும் கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கம்பஹாவில் 18 பேரும், கொழும்பில் 17 பேரும், புத்தளம் 12 பேரும், குருநாகலில் 4 பேரும், களுத்துறையில் 4 பேரும், இரத்தினபுரியில் 3 பேரும், மட்டக்களப்பு, பதுளை, கேகாலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேநேரம், வைரஸ் தொற்றுக்கு உள்ளான 3 வெளிநாட்டவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.