லட்சுமி கடாட்சம் பெறுவது எப்படி?
பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.
லட்சுமிதேவியின் கடாட்சம் இருந்தால் புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மைகள், துணிவு, செல்வம், தான்யம், சுக போகம், அறிவு, அழகு, பெருமை, அறம், நற்குடி, நீண்ட வாழ்வு ஆகிய 16 பேறுகளை பெறலாம்.பெண் தெய்வங்களுள் லட்சுமியின் இடம் உயர்ந்தது. அவள் சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பூவுலகில் ராஜ்ஜிய லட்சுமி, வீடுகளில் கிரக லட்சுமி என்று அழைக்கப்படுகிறாள். உலகையும், உடலையும் துறந்த ஞானிகள் கூட மோட்ச லட்சுமியின் அருள் கடாட்சத்தை விரும்புகிறார்கள்.
கலகம் செய்பவர், குரோதமாகப் பேசுபவர், பொய் சொல்பவர், சந்தியா காலத்தில் சாப்பிடுபவர், முடி, கரி, எலும்பு இவைகளைக் காலால் மிதிப்பவர், கால் அலம்பாமல் வீட்டுக்குள் வருகிறவர், தாய், தந்தைக்கு பணிவிடை செய்யாதவர், ஸ்வகர்மாவை விட்டவர், நகத்தைப் பல்லால் கடிப்பவர் ஆகியோர்களிடம் லட்சுமி தங்கமாட்டாள்.
லட்சுமி என்றால் சகல செல்வங்கள் வரும் வழி என்று பொருள். அதாவது அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பதெல்லாம் லட்சுமியே. இவற்றைப் பெற்றுள்ள பாக்கியசாலியே லட்சுமி கடாட்சம் உள்ளவன் என்றழைக்கப்படுவான். மகாலட்சுமி தன் கடைக்கண்களை காட்டினாள் என்றால் இவ்வுலகில் எல்லாவகை செல்வங்களும் நமக்கு வந்துசேரும். அதற்கு நாம் அவளை அனுதினமும் மனமுருகி பக்தியுடன் பூஜை செய்ய வேண்டும். ஆனால் லட்சுமி நிலையற்றவள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். லட்சுமிஎங்கும் நிரந்தரமாக தங்கி இருக்கமாட்டாள்.
லட்சுமி தேவி நிரந்தரமாக இருக்க என்ன செய்யலாம்?
சத்தியம், தானம், விரதம், தவம், பராக்கிரமம், தர்மம் இவற்றில் தேவி குடிகொண்டிருக்கிறாள். அவளை மனதார வழிபட்டு வந்தால் என்றும் நீங்காமல் இருப்பாள். அதனால் அனைத்தையும் தாங்கும் பூமியில், மக்களுக்கு உயிர் கொடுத்து வாழவைக்கும் நீரில், யாகம் முதலியவைகளுக்கு ஆதாரமாகியுள்ள அக்னியில், உண்மை பேசும் மனிதரிடமும் லட்சுமி தேவி அவள் அனுமதியுடன் நான்கு பாகமாகி நிலைபெற்றிருக்கிறாள்.
*வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும். மஞ்சள் பூசியும் நீராட வேண்டும். பெண்கள் கிழிந்து தைத்த,
நைந்துபோன ஆடைகளை உடுத்தக்கூடாது. நல்ல ஆடைகளை சுத்தமாக துவைத்து உலர்த்தி கட்டிக் கொள்ள வேண்டும்.
*குழந்தைகளைத் திட்டுவது, உறவினர்களை ஏசுவது, அக்கம் பக்கத்து வீட்டார்களுடன் சண்டை செய்வது, கணவனை வசைமாரிப்பொழிவது போன்ற அமங்கலமான வார்த்தைப் பிரயோகங்கள் லட்சுமியின் வரவை தடைப்படுத்தும் காரணிகளாகும்.
*பெண்கள் எப்போதும் வீட்டில் மங்களகரமான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் தினசரி விளக்குவைத்த பிறகு தலைவாறுதல், பேன் பார்த்தல், நகம் வெட்டுதல், ஊசி நூல்களால் பழைய துணிகளை தைத்தல் போன்ற செயல்கள் கூடாது.
*தினசரி சுவாமி சுலோகங்கள் பாராயணம் செய்தல், வீட்டில் உள்ள சுவாமி படங்களுக்கு பூஜை செய்தல், அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருதல் ஆகியவை லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
*விசேஷ தினங்களில் நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு வெற்றிலைப்பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், புஷ்பம், ரவிக்கைத்துண்டு, ரூபாய் தட்சணை வைத்துக்கொடுக்க வேண்டும்.இவ்வாறாக உள்ள பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அஷ்டலட்சுமிகளையும் அழைத்து அமரச்செய்து வீட்டை சகல பாக்கியங்களுடனும் செழித்தோங்கச் செய்வார்கள்.