செய்திகள்

தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று

new coronavirus in india

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் புதிய வகை இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. – New Coronavirus In India

இந்தியாவில் ஆறு பேருக்கு இந்தத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்கள் ஆறு பேரும் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள்.

இந்த நிலையில், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 17 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸின் புதிய திரிபின் பாதிப்பு உள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இவர்களில் மூவருக்கு பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் ஆய்வகத்திலும், இருவருக்கு ஹைதராபாத்தில் உள்ள சென்டர் ஃபார் செல்லுலர் அண்ட் மாலிக்யூலர் பயாலஜி ஆய்வகத்திலும், ஒருவருக்கு புனேவிலும் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி ஆய்வகத்திலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய கொரோனா வைரஸ் திரிபைவிட, 70% சுலபமாகப் பரவக்கூடிய புதிய திரிபு பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், அது தடுப்பூசி ஆராய்ச்சியில் பெரிய பாதிப்பை உண்டாக்காது.

வேகமாகப் பரவும் தன்மைதான் இந்த திரிபு உண்டாக்கும் கவலை. ஆனால், வழக்கமான சமூக விலகல் மூலம் இதைத் தவிர்க்கலாம்; தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ள தடுப்பூசிகள் மூலமே இதை எதிர்கொள்ளலாம்.

ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி மூலமே இந்த புதிய திரிபுக்கும் எதிரான நோய் எதிர்ப்புத் திறனைப் பெற முடியும் என்று மருத்துவ அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

“இளைஞர்களை எளிதில் தாக்கும்”

மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்
படக்குறிப்பு,மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் புதிய வகை திரிபு, பழைய வைரஸ் போல இல்லாமல் 40 வயதுடையவர்களையும் வேகமாகவும் வலுவாகவும் தாக்கி வருவதாக லண்டன் கிங்ஸ் மருத்துவமனை மருத்துவர் ரிஸ்வியா மன்சூர் தெரிவித்துள்ளார்.

“இந்த புதிய கொரோனா திரிபு வேகமாக பரவும் தன்மை வாய்ந்ததாக அறியப்படுகிறது. இந்த திரிபு வலிமையானதாக உள்ளது. பொதுவாக வைரஸ் என்பது மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இந்த புதிய திரிபு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வேகமாகவும் வலுவாகவும் பரவுகிறது. அதனால்தான் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் புதிய நோயாளிகளின் சேர்க்கையை சமாளிக்கும் அளவுக்கு போதுமான மருத்துவ ஊழியர்கள் இல்லை. மூன்று பேர் பார்க்கும் வேலையை ஒருவரே செய்ய வேண்டிய நிலை நிலவுகிறது.”

“10 நோயாளிகளை கையாளும்போது எதிர்கொள்ளும் வைரஸ் ஆபத்துகளை விட, அதிக எண்ணிக்கையிலான வைரஸ் பாதித்த நோயாளிகளை ஒரே நேரத்தில் அணுகுவதால் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா புதிய திரிபு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது. அனேகமாக ஒரு வாரத்திலோ, இரண்டு வாரங்களிலோ எங்களைப் போன்ற மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும் புதிய திரிபு பாதிப்பு நேர்ந்து தனிமைப்படுத்தப்படும் நிலை வரலாம்.” என்கிறார் மருத்துவர் ரிஸ்வியா.

Source : BBC

Back to top button