ராகுல் காந்தி: “என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன்”
எனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது உருக்கமாகப் பேசினார்.
தமிழ்நாட்டில் 1991ஆம் ஆண்டு மே மாதம் ராகுல் காந்தியின் தந்தையும் இந்திய முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் கொலை செய்ததாக நடந்த வழக்கில் சாந்தன், நளினி, முருகன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் ஆயுள் சிறை தண்டனை காலம் முடிந்த பிறகும் சிறையில் உள்ளனர்.
அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பரவலாக கோரிக்கைகள் வலுத்து வரும் வேளையில், தமிழ்நாட்டில் ஆளும் அதிமுக அரசும், எதிர்கட்சியான திமுகவும் அந்த கோரிக்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. ஆனாலும், இது தொடர்பாக குடியரசு தலைவரே இறுதி முடிவு எடுப்பார் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
இந்தப் பின்னணியில், புதுச்சேரி வந்துள்ள ராகுல் காந்தி தனது தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக தெரிவித்திருப்பது முக்கியத்துவதைத் பெற்றிருக்கிறது.
புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க புதன்கிழமை புதுச்சேரி வந்தார். முதல் கட்ட பயணமாக புதுச்சேரி சோலை நகர் கடலோர மீனவ கிராமத்திற்குச் சென்ற அவர், அங்குள்ள மீனவ பெண்கள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, “உங்கள் கருத்துகளைக் கேட்பதற்காகவே வந்துள்ளேன். மத்திய பா.ஜ.க அரசு 3 விவசாய சட்டங்களை நிறைவேற்றியதால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு, அவர்களை போலத்தான் நீங்களும். மீனவ மக்களை கடலில் விவசாயம் செய்பவர்களாகப் பார்க்கிறேன்,” என்று கூறினார்.
“மத்தியில் மீனவர்களுக்கு அமைச்சகம் தனியாக இல்லை, விவசாயிகளுக்கு ஒரு பிரச்னை என்றால் அதைச் சொல்வதற்கு விவசாய துறை அமைச்சகம் உள்ளது. ஆனால் மீனவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அவர்கள் யாரிடம் சொல்லவர்கள்? ஆகவே, மத்தியில் ஒரு மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக இருந்தால், உங்களுடைய பிரச்னைகளை எல்லாம் அவரிடத்தில் சொல்ல முடியும்.”
“விவசாயிகளுக்கு சலுகைகள் வழங்குவது போல் மீனவ சமுதாயத்திற்கும் சலுகைகள் வழங்க வேண்டும். மீனவர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு வழங்க வேண்டும், மீன் பிடிக்க உபயோகிக்கப்படும் உபகரணங்கள் நவீனப்படுத்தப்பட்டதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
இப்போது இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு சிறு வியாபாரிகளை நசுக்குகிறார்கள். பெரு வியாபாரிகளை வாழ வைக்கின்றனர். எங்கள் காங்கிரஸின் கொள்கை சிறு நடுத்தர வியாபாரிகளை அதிகப்படுத்தினால் தான் நாட்டில் வளர்ச்சி ஏற்படும்,” என்றார் அவர்.
தொடர்ந்து மீனவ பெண்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தியிடம் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் இடம் பெற உதவுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு பதிலளித்த அவர், இது பற்றி முழுமையாக படித்துத் தெரிந்த பிறகு பதில் அளிப்பதாக தெரிவித்தார்.
மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை ராகுல்காந்தியிடம் கூறி வந்த நிலையில், அப்போது மீனவ பெண் ஒருவர் நிவர் புயலின் போது முதலமைச்சர் நாராயணசாமி மீனவர்களைச் சந்திக்கவில்லை என ராகுல் காந்தியிடம் புகார் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து புச்சேரியில் பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்த அவரிடம் ஒரு மாணவி ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது தொடர்பான கேள்வியை எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ராகுல், “எனக்கு அது கடுமையான நேரமாக இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்குப் புரியும். எனது தந்தையை இழந்தது என் நெஞ்சை பிளந்தது போல் இருந்தது. அது மிகப்பெரிய வலியைத் தந்தது. ஆனால், என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமோ வெறுப்போ இல்லை,” என்று தெரிவித்தார்.