இன்று வழங்கப்படவிருந்த ரூ 1000 சம்பள உயர்வு இல்லை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று முதல் 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க எதிர்பார்த்திருந்த போதிலும் கம்பனிகளுடன் சில விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாததால் இழுபறி நிலையில் உள்ளது. எவ்வாறாயினும் அடுத்த வாரமளவில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 ரூபா நாளாந்த சம்பளம் இன்று முதல் வழங்கப்படும் என்று அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வந்த போதிலும், கம்பனிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தன.
இந்நிலையில் அரசாங்கம் அறிவித்த படி 1000 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கப்படுமா என்று வினவிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அடிப்படை சம்பளம் 1000 ரூபா என்பது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. எனினும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அடிப்படை சம்பளமாக இல்லாவிட்டாலும் நாளாந்த சம்பளமாக 1000 ரூபாவினை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இது தொடர்பில் பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பல பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும் 1000 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கு கம்பனிகள் அரசாங்கத்திடம் பல நிபந்தனைகளை முன்வைத்தன. அவற்றில் சிலவற்றை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் உள்ளன.
எவ்வாறிருப்பினும் இந்த முயற்சியை நாம் கைவிடப் போவதில்லை. திட்டமிட்ட படி இன்றிலிருந்து 1000 ரூபாவை வழங்க முடியாமை கவலையளிக்கிறது. எனினும் எதிர்வரும் ஒரு வார கால பகுதிக்குள் மீண்டும் கம்பனிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து சம்பள அதிகரிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
Sources : Virakesari