ஆன்மிகம்

சனி பெயர்ச்சி 2022 : ஏழரை சனி யார் யாருக்கு?  ஆபத்தை தடுக்கும் பரிகாரம்

சனி பகவான் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறாரோ அந்த ராசிக்கு முன் மற்றும் பின் உள்ள ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும் என்பது ஜோதிட விதி.

ஏப்ரல் 29ம் தேதி சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாக செல்ல உள்ளார்.

இவர் ஜூலை 12ம் தேதி வக்ர பெயர்ச்சியாக மீண்டும் மகர ராசிக்கே வந்தடைவார்.

கால சக்கரத்தில் 11ம் ராசியாக இருக்கும் கும்ப ராசிக்கு சனி பகவான் அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார்.

அதனால் கும்ப ராசிக்கு பின் உள்ள 10ம் ராசியான மகரத்திற்கும், 12ம் ராசியான மீனத்திற்கும் ஏழரை சனி நடக்கும்.

  • மீன ராசி – ஏழரை சனி தொடங்குகிறது (விரய சனி – ஏழரை சனியின் முதல் நிலை)
  • கும்ப ராசி – ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கப்போகிறது (ஜென்ம சனி – ஏழரை சனியின் இரண்டாம் நிலை)
  • மகர ராசி – பாத சனி, வாக்கு சனி (உங்கள் ராசியிலிருந்து சனி விலகப்போகிறது)

ஏழரை சனி எப்படிப்பட்ட பலன் தரும்? 

ஏழரை சனி காலத்தில் ஒருவர் தன்னுடைய வேலையை சரியாக, நேர்மையாகச் செய்தால் அவருக்கு   பெரிய பாதகமோ, கஷ்டமோ ஏற்படாது.

ஒருவருக்கு அசுப கிரகங்களின் தசா, புத்தி நடந்தால் அவருக்கு ஏழரை சனி காலத்தில் அவர் என்ன செய்தாலும் அது பெரிய வெற்றியையோ, லாபத்தையோ தராத நிலையே இருக்கும்.

வாழ்க்கையில் ஒரு நிலை தன்மை இல்லாமல், ஏற்ற இறக்கத்துடனேயே இருக்கும். நாம் நினைப்பதை விட அதிகம் செலவாகக்கூடிய காலமாக இருக்கும்.

செலவைக் கட்டுப்படுத்த இயலாத நிலை இருக்கும். இருப்பினும் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்களைத் தாங்கக்கூடிய, எளிதாக எடுத்துக் கொண்டு முன்னேறக்கூடிய மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏழரை சனி காலத்தில் சிலர் பெரியளவு பொருள், பண இழப்பைச் சந்திக்காவிட்டாலும், அந்த நபருக்கு ஆரோக்கிய கோளாறு, மன கவலை, மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

எளிமையாக முடிக்க வேண்டிய விஷயங்களில் கூட கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.

​சனியின் கெடுபலன் தாக்கம் பெறும் ராசிகள்  

  • ஏழரை சனி நடக்கக்கூடிய மகரம், கும்பம், மீன ராசிகள் சனியின் தாக்கத்தால் கெடுபலனைப் பெறுவார்கள்.
  • அதோடு, கடக ராசி – அஷ்டம சனி
  • சிம்ம ராசி – கண்ட சனி
  • விருச்சிகம் – அர்த்தாஷ்டமச் சனி
  • கன்னி – ரோக சனி ஆரம்பமாக உள்ளது.

மின்னல் வேக பலன் தரும் பரிகாரம்

ஏழரை சனி காலத்தில் ஆலயங்களில் நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் கலந்து கொள்ளலாம்.

திருக்கோவில்களில் உழவாரப் பணிகளை மேற்கொள்ளலாம்.

குல தெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் செய்வது அவசியம்.

அனுமன் வழிபாடு தொடர்ந்து செய்து வர உங்கள் பிரச்னை தீர்ந்து மன நிம்மதி ஏற்படும்.

Back to top button