பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து மே 2 இல் இறுதித் தீர்மானம் – ஜி.எல் பீரிஸ் -School Reopening date srilanka
சடுதியாக பரவலடைந்துள்ள கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற்கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதி தீர்மானம் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படும். அனைத்து பல்கலைக்கழகளையும் மே மாதம் 10 ஆம் திகதி திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் இன்னும் ஒரு வார காலத்திற்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர்மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அரசாங்கம் சிறந்த திட்டங்களை இதுவரையில் முன்னெடுத்துள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் தேசிய பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. பாடசாலைகளில் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு குறித்து விசேட சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்ட நிலையில் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நிறைவு பெற்றன.
கடந்த 19 ஆம் திகதி முதல் இரண்டாம்தவனை கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது. கொவிட் -19 வைரஸ் தாக்கம் சடுதியாக அதிகரித்த காரணத்தினால் நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சுகாதார தரப்பினர் விடுத்த கோரிக்கைகளுக்க அமையவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாணவர்களின் சுகாதார பாதுகாப்பு குறித்து அரசாங்கம் முன்னுரிமை வழங்கும் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தற்காலிகமாக ஏற்படும் தடைகள் கூட அவர்களின் எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைத்து தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும். நாட்டின் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலைகளில் இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இறுதி தீர்மானம் எதிர்வரும் இரண்டாம் திகதி எடுக்கப்படும். பாடசாலைகளில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றுவது குறித்து புதிய திட்டம் வகுக்கப்படும்.
நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் கடந்த 27 ஆம் திகதி அதாவது நேற்று முன்தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டது கொவிட் தாக்கத்தினால் அத்தீர்மானமும் பிற்போடப்பட்டது. அனைத்து பல்கலைக்கழகங்களையும் மே மாதம் 10 ஆம் திகதி திறக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு இடம் பெற்ற கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை ஒரு வார காலத்திற்குள் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செயற்பாட்டு பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவர்கள் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதால் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது . பல்கலைக்கழகத்திற்கு செல்ல தகுதீயுள்ள மாணவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.
நாட்டில் நேற்று 1,466 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்
அப்பல்லோ 11 விண்வெளி வீரரான மைக்கேல் கொலின்ஸ் (Michael Collins) காலமானார்