கொரோனா வைரஸ்: இந்தியாவில் முதல் பலி
கொரோனா வைரஸ்: இந்தியாவில் முதல் பலி
கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 76 வயது முதியவர் உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமுலு தமது டுவிட்டர் பக்கத்தில், கோவிட்-19 வைரஸ் சந்தேக அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற கலபுரகியை சேர்ந்த 76 வயது நபர் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி பிற நடைமுறைகளை மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடகா அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
76 வயது முதியவர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உயிரிழந்த நபர் செளதி அரேபியாவுக்கு கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதிவரை சென்றிருந்ததாகவும், உயர் அழுத்தம் மற்றும் ஆஸ்துமா பாதிப்பு அவருக்கு இருந்ததாக குறிப்பிட்டு அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
என்ன நடந்தது?
கடந்த மாதம் ஹைதராபாத் திரும்பிய அவர், அங்கிருந்து கலபுரகி சென்றதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருந்ததால் அவரது இல்லத்திலேயே மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டதாகவும், அதன் பிறகும் நிலைமை மோசமடைந்ததால் கடந்த 9-ஆம் தேதி அவர் கலபுர்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாதிரிகளை பரிசோதிக்க நடவடிக்கை
மிதமான வைரல் நிமோனியாவால் அவர் பாதிக்கப்பட்டதாக பரிசோதனை செய்த தனியார் மருத்துவமனை, அவருக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி சந்தேகம் இருப்பதாக கூறியதை அடுத்து, அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கலபுரகியில் உள்ள ஆய்வுக்கூடத்தால் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து பெங்களூரில் உள்ள விஆர்டிஎல் எனப்படும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், பரிசோதனை முடிவுகள் வெளியாகும் முன்பே, நோயாளியை அவரது உறவினர்கள் அங்கிருந்து விடுவித்து, ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
இதையடுத்து கலபுரகி மாவட்ட சுகாதார அதிகாரி, ஹைதராபாத் சென்று சம்பந்தப்பட்ட நோயாளியை குல்பர்கா மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் உள்ள தனிமை வார்டில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒத்துழைக்க மறுப்பு
ஆனால் அதை ஏற்க மறுத்த அவரது உறவினர்கள் அங்கேயே சிகிச்சை தொடர்ந்தனர். பிறகு அங்கிருந்து கடந்த 10-ஆம் தேதி விடுவிக்கப்பட்ட அவரை, கலபுரகியில் உள்ள ஜிம்ஸ் மருத்துவ நிறுவனத்துக்கு கொண்டு வந்தபோது, வரும் வழியிலேயே அந்த முதியவரின் உயிர் பிரிந்ததாக நடந்த நிகழ்வுகளை தமது செய்திக்குறிப்பு மூலம் இந்திய சுகாதாரத்துறை விவரித்துள்ளது.
முன்னதாக, கர்நாடகாவில் நான்கு பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருந்ததை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியிருந்தது. டெல்லியில் 6, உத்தர பிரதேசத்தில் 10, மகராஷ்டிராவில் 11, லடாக்கில் 3 என இதுவரை இந்தியாவில் இன்றைய நிலவரப்படி மொத்தம் 74 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 110 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு இதுவரை 4200 பேர் உயிரிழந்துள்ளனர்.