செய்திகள்

தொழிற்பயிற்சித் துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டுமாறு ஜனாதிபதி பணிப்பு

தொழிற்பயிற்சித் துறையில் புத்தெழுச்சியை ஏற்படுத்தி, உயர் திறன்கொண்ட தொழிற்படையை உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

திறன்விருத்தி தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு, வெளிநாட்டு தொழிற்சந்தைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றிற்கேற்ற வகையில் பாடநெறிகளை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும். வறிய மக்களை வலுவூட்டும் சுயதொழில் சார்ந்த பயிற்சி சந்தர்ப்பங்களை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன் போது ஜனாதிபதி விளக்கினார்.

திறன்விருத்தி தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் பணிகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.

திறன்விருத்தி அமைச்சின் கீழ் பெரும் எண்ணிக்கையான பயிற்சி நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.அந்த அனைத்து நிறுவனங்களையும் ஒருமுகப்படுத்தி முறையான மற்றும் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சித்திட்டமொன்றை அமைக்க வேண்டியது அவசியமாகும்.

தொழிற்பயிற்சித்துறை பற்றி இளைஞர் தலைமுறையிடம் உளப்பாங்கு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். பாடநெறிகளை அறிமுகப்படுத்தும்போதும் பாடநெறிகளுக்கு பெயரிடும்போதும் தொழில் மதிப்பும் கவர்ச்சியுமிக்க வகையில் திட்டமிட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி  விளக்கினார்.

நாட்டின் முக்கிய துறையாக விவசாயத்துறை உள்ளது. அதற்கேற்ற வகையில் பொதுமானளவு கற்கை நெறிகள் இல்லாதிருப்பது பற்றி கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், மருத்துவ, பொறியியல் துறைகளைப்போன்று விவசாயத்துறையிலும் நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் நாட்டுக்கு அதிகம் தேவையாக உள்ளதென்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி , புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தும்போது அதன் குறைபாடுகளை தீர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் பெண்களுக்கு உரிய பயிற்சியை வழங்கி, தொழில் மதிப்புள்ள ஊழியர்களாக தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உலகில் அதிக கேள்வியுள்ள பயிற்றப்பட்ட தாதியர்களை தொழில்வாய்ப்புகளில் ஈடுபடுத்துவது குறித்தும் அதற்கான பயிற்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தொழிற்பயிற்சியை பெறும் இளைஞர், யுவதிகளுக்கு உடனடியாக தொழில்வாய்ப்புகள் வழங்கும் முறைமையொன்று குறித்தும் ஜனாதிபதி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

பிரஜைகளை இலக்காக்கொண்ட அரச சேவைக்காக உற்பத்தித்திறன் செயலகத்தின் பணிகள் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

அரச நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக முறையான திட்டமொன்று அவசியமாகுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மக்கள் வாழ்க்கையில் நேரடியாக தாக்கம் செலுத்தும் மக்கள் சேவையினை வழங்கும் சில நிறுவனங்களை இனங்கண்டு அவற்றின் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் குறித்து கண்டறியுமாறும் பணிப்புரை வழங்கப்பட்டது.

மக்களே எச்சரிக்கை ! உடனடியாக முறையிடுமாறு வேண்டுகோள் !

ராஜித்த சேனாரத்ன சற்று முன்னர் கைது..!

News Source : Virakesari.lk

Back to top button