செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி – Tamilnadu School Closed

நிவர் புயல் காரைக்கால் – புதுச்சேரி இடையே அருகே புதன்கிழமை மாலை கரையை கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை கருத்தில் கொண்டு புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இந்த விடுமுறையை நீட்டிப்பது பற்றி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் மாலை 4 மணியளவில் பேசிய முதல்வர் தெரிவித்தார்.

நிவர் புயலை எதிர்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தொடர்ந்து உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

புயல் தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் புதுவை முதல்வர் நாராயணசாமியிடம் பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

இதற்கிடையே, நிவர் புயல் தென்மேற்கு வங்க கடலில் மூன்று மணி நேரமாக நிலை கொண்டிருந்த புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் தற்போது நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், இன்று மாலை 6 மணியளவில் தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் பற்றிய சமீபத்திய தகவல்களை வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நாளை மாலை அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், இந்த புயல் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வரை மழை தொடரும் என்றும் கூறினார்.

சென்னை, புறநகர் பகுதிகளில் மழை எச்சரிக்கை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும் என்றார். திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுவையில் மிக பலத்த மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

புயல் கரையை கடக்கும் நேரத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும், அதிக கனமழை ஏற்படும் என்றும் பாலச்சந்திரன் கூறினார். காற்றின் வேகம் சுமார் 100 முதல் 120கிமீ வேகத்தில் வீசும் என்றும் அவர் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிவர் புயலை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நிவர் புயல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டிஐஜி சத்யப்பிரியா, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஹர்மந்தர் சிங் கேட்டறிந்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் அண்ணாதுரை கூறியதாவது, “விழுப்புரம் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்படும் பகுதிகளாக 122 இடங்கள் கண்டறிந்துள்ளது. பொதுமக்களுக்கு உதவி தேவைப் படுவோருக்கு கட்டுப்பாட்டு அறைகள் 5 அமைக்கப்பட்டது.

அதில் மூன்று மினி கட்டுப்பாட்டு அறைகளாக திண்டிவனம், வானூர், மரக்காணம் பகுதியில் செயல்படுகிறது. மேலும் விழுப்புரத்தில் உள்ள 30 காவல் நிலையங்களைச் சார்ந்த காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மூன்று குழுக்களாக திண்டிவனம், வானூர், மரக்காணம் பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபடத் தயாராக உள்ளனர்,” என்றார்.அதே போன்று 12 மீனவ கிராமங்களில் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 10 குடிநீர் டேங்கர்கள் மூலம் குடிநீர் வழங்கவும், ஏரி குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. புயல் வீசும் போது பொதுமக்கள் வெளியே வரக் கூடாது என்பதைத் தெரிவிக்க ஒலிபெரிக்குகள் மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Back to top button