வாகன சோதனையில் சிக்கிய ஜாடிக்குள் அடைக்கப்பட்ட மனித மூளை மற்றும் பிற செய்திகள்
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் தபால்களுடன் நுழைந்த சரக்கு வாகனத்தை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியபோது, ஜாடி ஒன்றிற்குள் அடைக்கப்பட்டிருந்த மனித மூளை கிடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிச்சிகன் மற்றும் கனடாவின் ஒண்டாரியோ மாகாணங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் கடந்த வாரம் அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை நடத்தியபோதே இது தெரியவந்தது.

“பழமையான கற்பித்தல் மாதிரி” என்று குறிப்பிடப்பட்ட பெட்டகம் ஒன்றினுள் இந்த மனித மூளை கண்டெடுக்கப்பட்டது.
“இதுபோன்ற மாதிரிகளை அமெரிக்காவிற்குள் சட்டப்பூர்வமாக எடுத்து வருவதற்கு தேவையான எவ்வித ஆவணமும் இல்லாமல், அந்த ஜாடிக்குள் மனித மூளை சர்வ சாதாரணமாக அடைக்கப்பட்டிருந்தது,” என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவிற்குள் இதுபோன்ற வினோதமான விடயங்கள் கொண்டுவரப்படுவதும் அவை கண்டுபிடிக்கப்படுவதும் இது முதல் முறையல்ல.

2014ஆம் ஆண்டில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் சர்வதேச விமான நிலையத்தில் நைஜீரியாவிலிருந்து கலிஃபோர்னியாவுக்கு கொண்டுசெல்லப்பட்ட 67 நேரடி ராட்சச ஆப்பிரிக்க நத்தைகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட இந்த மெல்லுடலிகள் தீங்கு விளைவிக்கும் ஒட்டுண்ணிகளைக் கொண்டிருக்கக்கூடும் என்பதால் பின்னர் எரித்துக் கொல்லப்பட்டன.
2006ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அர்ஜென்டினாவிலிருந்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டைனோசர் முட்டைகள் உட்பட எட்டு டன் கொண்ட வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய புதைபடிவங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
திருப்பூர் விபத்து: உறவினர்களின் கண்ணீரால் நனைந்த மருத்துவமனை

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி அருகே நேற்று (பிப்ரவரி 20) அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு: தமிழக மீனவர் கண் பார்வை இழக்கும் ஆபத்து

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று முன்தினம் (19.02.2020) காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
கொரோனா வைரஸ்: சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழர்களின் நிலை என்ன?

சிங்கப்பூரில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதைக் கண்டறிய, உடல் வெப்பத்தை கணக்கிடும் கருவியைப் பொருத்த வேண்டும் என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலை, மாலை என இரு வேளைகளில் இந்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது.
கடந்த மாதத்தைவிட தற்போது சிங்கப்பூர் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அதீத பயம் சற்று குறைந்துள்ளதாக அங்கு கடந்த பத்தாண்டுகளாகப் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய் குறிப்பிடுகிறார்.
இந்தியன்-2 விபத்து: “பாதுகாப்பு குறித்து அவமானமாக உணர்கிறேன்”

இந்தியன்-2 படப்பிடிப்பின்போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் உயிரிழந்தது குறித்து கருத்துத் தெரிவித்த கமல்ஹாசன் இந்தத் தொழிலில் இருக்கவேண்டிய அளவு பாதுகாப்பு இல்லை என்றும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.
Sources BBC Tamil