செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் நாளை முதல் தொடங்குகிறது பரிசோதனை

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் நாளை முதல் தொடங்குகிறது பரிசோதனை

இந்தியாவில் மனிதர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் சோதனை முயற்சியை எய்ம்ஸ் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

“உலகம் முழுவதிலும் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், தற்பொழுது இதற்கான தீர்வாக பல நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையும் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனம் (என்ஐவி) ஆகியவற்றுடன் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

இந்த தடுப்பு மருந்தை கொண்டு மனிதர்களிடத்தில் பரிசோதனை மேற்கொள்ள எய்ம்ஸ் நெறிமுறைக்குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நாளை முதல், இதற்கான முதல் கட்ட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மனிதர்களுக்கு கோவேக்சினை சோதனை முயற்சியாக செலுத்துவதில் தன்னார்வலர்கள் பங்கு பெறலாம். 18 முதல் 55 வயது நிரம்பிய தன்னார்வலர்கள் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பரிசோதனை மேற்கொள்ள உள்ள நபர்களுக்கு எந்த வித நோயும் இல்லாமல் பூரண உடல் நடத்துடன் இருக்க வேண்டும். இதற்கான பதிவு நடைமுறையும் நாளை முதல் நடைபெறும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் சஞ்ஜெய் ராய் தெரித்துள்ளார்” என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமருக்கு அழைப்பு

அயோத்தி

அயோத்தியில் அமைய உள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு வரும் ஆகஸ்ட் 3 அல்லது 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டுவதற்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறக்கட்டளையின் கூட்டம் லக்னௌவில் சனிக்கிழமை நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த அழைப்பு வெளியாகியுள்ளது. இது இந்த அறக்கட்டளையின் முதல் அதிகாரப்பூர்வ கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கூட்டத்துக்குப் பிறகு அந்த அறக்கட்டளையின் தலைவரின் செய்தி தொடர்பாளர் மகந்த் கமல் நயன்தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவதற்காக நட்சத்திரங்கள் மற்றும் கிரகநிலைகள் இயக்கங்களின் கணக்கீட்டு அடிப்படையில் ஆகஸ்ட் 3 மற்றும் 5-ஆம் தேதிகள் நல்ல நாள்களாக கணிக்கப்பட்டுள்ளன. அந்த இரு நாள்களில் ஏதேனும் ஒரு நாளில் பிரதமர் மோதி வருகை தந்து ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளோம்” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி இந்து (ஆங்கிலம்): சென்னையில் ஐந்து லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை

கொரோனா தொற்று பரிசோதனை

சென்னையில் இதுவரை ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கையைக் கடக்கும் இந்தியாவின் முதல் நகரம் சென்னைதான் என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ், “சென்னை மாநகரின் 15 மண்டலங்களில் வசிப்பவர்களைப் பரிசோதிக்க இதுவரை மாநில அரசு 200 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. மொத்தம் 400 கோடி ரூபாய் இதுவரை நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்பட்டுள்ளது. “இந்த மாதத்தில் நோய்த்தொற்று விகிதத்தை 5% ஆக குறைப்பதே எங்கள் நோக்கம். நோய்த்தொற்று விகிதம் 37 சதவீதத்திலிருந்து 12% வரை குறைந்துள்ளது” என்று அவர் கூறினார்.

சென்னையில் தற்போது ஒருநாளைக்கு சுமார் 13,000 பேருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

“இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் 8.5 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நகரம் முழுவதும் நடந்த 18,000 காய்ச்சல் முகாம்களில் 11 லட்சம் பங்கேற்றனர், அவர்களில் 60,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 80 சதவீதம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Back to top button