வாட்சாப் புதிய பிரைவசி கொள்கை அப்டேட்: எச்சரிக்கும் வல்லுநர்கள் – Whatsapp new privacy policy 2021 explained in tamil
வாட்சாப் செயலி புதிதாக ஒரு பிரைவசி கொள்கை அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்டேட்டை வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வாட்சப் கணக்கு டெலிட் ஆகிவிடும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி பேசும் வல்லுநர்கள் இந்தியாவில் பயனர்களின் பிரைவசியை வலுவாக வலியுறுத்தும் வகையில் எந்த வித சட்டங்களும், தொழில்நுட்ப சட்டங்களும் இல்லை என எச்சரிக்கிறார்கள்.
இந்தியா போன்ற அதிக இளைஞர்களைக் கொண்ட நாட்டில், சுமார் 40 கோடி பேர் வாட்சாப் செயலியைப் பயன்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் வாட்சாப் நிறுவனம் தன் செயலியில் பணப்பரிமாற்றச் சேவைகளைக் கூட கொண்டு வந்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது ஜனவரி 4-ம் தேதி புதிதாக ஒரு பிரைவசி கொள்கை அப்டேட்டைக் கொண்டு வந்திருக்கிறது வாட்சப்.
இந்த புதிய தனியுரிமைக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் முக்கிய விஷயங்கள் என்ன? (Whatsapp new privacy policy 2021 explained in tamil)
ஃபேஸ்புக் குழும நிறுவனத்துக்கு, வாட்சப் பயன்படுத்துவோரின் தரவுகளைக் கொடுப்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது இந்தக் கொள்கை.
வாட்சாப் பயன்படுத்துவோரின் ஐபி முகவரி, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மட்டுமின்றி மற்ற மூன்றாம் நபர்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இனி வாட்சாப் ஒரு பயன்பாட்டாளரின் பேட்டரி அளவு, சிக்னல் வலிமை, அவர்கள் பயன்படுத்தும் செயலியின் பதிப்பு (வெர்ஷன்), மொழி, நேர மண்டலம், செல்போன் எண், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் பெயர் விவரம் போன்றவை சேகரிக்கப்படும் என்கிறது இந்தக் கொள்கை.
ஒரு வாட்சாப் பயனர் ‘In-App Delete’ வசதியைப் பயன்படுத்தாமல், வெறுமனே வாட்சப்பை டெலிட் செய்தால், அவருடைய தரவுகள் வாட்சாப்பிடமே இருக்கும். அதாவது வாட்சாப்பை அவர் தன் மொபைலில் இருந்து மட்டுமே டெலிட் செய்ததாகப் பொருள்.
வாட்சாப் நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் டேட்டா சென்டர்கள் அமெரிக்காவில் இருப்பதால், தேவைப்பட்டால் இந்தியர்களின் தரவுகள் அமெரிக்காவுக்கும் பரிமாற்றம் செய்யப்படும். தேவைப்பட்டால் வாட்சாப் & ஃபேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகங்கள் எங்கெல்லாம் இருக்குமோ அங்கெல்லாம் கூட தரவுகள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்.
வாட்சாப்பில் லொகேஷன் வசதியைப் பயன்படுத்தவில்லை என்றால் கூட, ஐபி முகவரி, செல்போன் எண், நாடு, நகரம் போன்ற விவரங்கள் வாட்சப் நிறுவனத்திடம் இருக்கும்.
ஒருவேளை வாட்சப் வணிக கணக்கு வைத்திருக்கிறார்கள் என்றால், ஃபேஸ்புக்கைத் தாண்டி அவர்களின் தரவுகள் இன்னும் அதிகம் பேருக்கு வணிக நோக்கில் பகிரப்படும்.
வாட்சப் பணப்பரிமாற்றச் சேவையை பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர்களிடம் இன்னும் சில கூடுதல் தகவல்கள் திரட்டப்படும். உதாரணமாக வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பணப்பரிமாற்ற விவரங்கள் திரட்டப்படும்
இந்த பிரைவசி பாலிசி அப்டேட்டால் சாமானியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்கிறது வாட்சாப் தரப்பு.
இது குறித்து வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள்?
“வாட்சாப் சேவை இந்தியாவில் அதிகம் வரத் தொடங்கிய போது, தரவுகள் ஃபேஸ்புக்குக்கே கொடுக்கப்படாது, தனியாகவே வைத்திருக்கப்படும் என்றார்கள். இப்போது திரட்டும் தரவுகள் மெல்ல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் என்கிறார்கள். பிறகு இது வணிக நோக்கங்களுக்காக மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்கப்படலாம். ஒரு கட்டத்தில் வாட்சப்பில் கூட விளம்பரம் வரும் சூழல் உருவாகும்” என்கிறார் தொழில்நுட்பத் துறை நிபுணர் மற்றும் கணியம் அறக்கட்டளையைச் சேர்ந்த த.ஸ்ரீநிவாசன்.
மேலும் “ஏற்கனவே நாம் அனைவரும் இண்டர்நெட் பபுள் என்றழைக்கப்படும் ஒரு வித வளையத்துக்குள் தான் இருக்கிறோம். இந்த தரவுகள் வெளிப்படையாகத் திரட்டப்படுவதால் இனி இந்த வளையம் இன்னும் வலுவாகும். தனி நபரைக் குறிவைத்து கொடுக்கப்படும் விளம்பரங்கள் இன்னும் அதிகரிக்கலாம்.
அவ்வளவு ஏன் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் நடந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா சம்பவம் போன்றவை இந்தியாவில் கூட நடக்கலாம். இதை எல்லாம் கட்டுப்படுத்த, இந்தியாவில் தெளிவான தொழில்நுட்பச் சட்டங்கள் அல்லது தனியுரிமை சட்டங்கள் இல்லை. ஐரோப்பிய யூனியனில் ஜி.டி.பி.ஆர் என்கிற டேட்டா பிரைவசி சட்டங்கள் இருந்தாலும் அவை இன்னும் தெளிவடையாமல் உள்ளன. ஆக இந்தியாவில் இப்படிப்பட்ட பாதுகாப்புச் சட்டங்கள் வர இன்னும் கால தாமதம் ஆகலாம். அதற்குள் வாட்சாப் போன்ற நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களை வலுப்படுத்திக் கொள்ளும்” என்கிறார் ஸ்ரீநிவாஸ்.
இது விதி மீறல்
வாட்சப் லா (Whatsapp Law) என்கிற புத்தகத்தை எழுதியிருக்கும் தொழில்நுட்பத் துறை வல்லுநர் பவன் துக்கல் இது ஒரு விதி மீறல் என்கிறார்.
வாட்சாப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை அப்டேட் வெறுமனே இந்தியர்களின் தனியுரிமையை மீறும் விஷயமல்ல, அது இந்திய அரசு வகுத்திருக்கும் சட்டங்களையும் மீறுகிறது.
1. தகவல் தொழில்நுட்ப இடைநிலை வழிகாட்டுதல் விதிகள் (Information Technology Intermediate Guidelines Rules) 2011
2. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் முக்கிய தனிப்பட்ட தரவு விதிகள் 2011 (Information Technology Reasonable Security Practices and Procedures and Sensitive Personal Data of Information Rules) ஆகிய இரு விதிகளை வாட்சாப்பின் புதிய பிரைவசி அப்டேட் மீறுகிறது என்கிறார் பவன் துக்கல்.
இந்தியா தனக்கு எத்தனை முக்கியமான பெரிய நாடு என்பதை வாட்சாப் அறியும். அதோடு சைபர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விவகாரங்கள் தொடர்பாக இந்தியாவில் பலமான சட்டங்கள் இல்லை என்பதையும் அவர்கள் அறிவார்கள் என்கிறார் பவன்.
தொழில்நுட்பச் சட்டம் 2000-ம் தான் இந்தியாவின் சைபர் பாதுகாப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு, தனியுரிமை போன்ற விஷயங்களைக் கொஞ்சம் கண்காணிக்கிறது. ஆனால் அதுவும் வாட்சாப் போன்ற பெரிய நிறுவனங்களுக்கு எதிராக அத்தனை பலமாக இல்லை என்கிறார் பவன்.
தனியுரிமை – ஓர் அடிப்படை உரிமை
கடந்த 2017-ம் ஆண்டு, முன்னாள் நீதிபதி புட்டசுவாமி வழக்கில், தனியுரிமை என்பது ஒவ்வொரு இந்தியனின் அடிப்படை உரிமை என் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதோடு தனியுரிமையை அரசமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவுடன் இணைத்தது உச்ச நீதிமன்றம். இதை நாம் மறந்திருக்கமாட்டோம்.
அதே நேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, வாட்சாப் வழியாக இஸ்ரேலிய நிறுவனமான பக்சாஸ் பல்வேறு இந்தியர்களை உளவு பார்த்ததையும், 2016-ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனம் செய்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரத்தையும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் பொதுக் கொள்கைத் தலைவராக இருந்த அங்கி தாஸ் பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகளையும் இங்கு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஒரு பொருளை விலை கொடுக்காமல் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த பொருளுக்கு கொடுக்கும் விலை நீங்கள் தான் என ஒரு வாசகமுண்டு. வாட்சப்பின் கொள்கை அப்டேட்களைப் பார்க்கும் போது அது தான் நினைவுக்கு வருகிறது.
இந்தியாவில் தனி நபர்களின் தரவு பாதுகாப்பு தொடர்பான சட்டம் கிடப்பில் இருக்கிறது. இந்த சட்டம் கிடப்பில் இருக்கும் போதே, வாட்சாப் தன் புதிய கொள்கை அப்டேட்களைக் கொண்டு வர விரும்புகிறது. இந்த சட்டம் வருவதற்கு முன் வாட்சாப்பின் கொள்கை முடிவுகளை அமல்படுத்திவிட்டால், அதன் பின் இந்த சட்டம் வாட்சாப்பை பெரிதாக கட்டுப்படுத்தாது என்கிறார் உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் மற்றும் சைபர் சட்ட வல்லுநர் முனைவர் கர்னிகா சேத்.