வில் ஸ்மித் ஆஸ்கர் அகாடமியில் இருந்து விலகல்: “நான் காயப்படுத்தியோர் பட்டியல் நீளமானது”
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார்.
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி செய்து பேசினார். அந்த நகைச்சுவையைக் கேட்ட வில் ஸ்மித், மேடையில் ஏறி கிறிஸ் ராக்கை அறைந்தார்.
வில் ஸ்மித் தன் மனைவி ஜடா பிங்கெட்டின் மொட்டை தலை குறித்து கேலியாக பேசியதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் அறைந்ததாக வில் ஸ்மித் தெரிவித்திருந்தார்.
50 வயதாகும் ஜடா பிங்கெட், அலோபீசியா என்ற முடி உதிர்தல் நோயால் பாதிக்கப்பட்டு வருபவர். இதை 2018இல் ஒரு நிகழ்ச்சியில் அவரே வெளிப்படுத்தியிருந்தார்.
இது குறித்து ஆஸ்கர் அகாடமி வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ் ராக்கை அறைந்த பின் நிகழ்ச்சியைவிட்டு வெளியேற வில் ஸ்மித்திடம் கோரினோம், ஆனால் அவர் மறுத்துவிட்டார். நாங்கள் சூழலை வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டது.
வில் ஸ்மித்திற்கு எதிராக “ஒழுங்கு விசாரணை” தொடங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து ஸ்மித் விலகியுள்ளார்.
இதுதொடர்பாக, வில் ஸ்மித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “94-வது அகாடமி விருது விழாவில் என்னுடைய நடவடிக்கை அதிர்ச்சிகரமானது, வலிமிகுந்தது, மன்னிக்க முடியாதது” என தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் காயப்படுத்தியவர்களின் பட்டியல் நீளமானது, கிறிஸ், அவருடைய மனைவி, என்னுடைய அன்புக்குரிய நண்பர்கள், நிகழ்ச்சியில் இருந்தவர்கள், உலகளாவிய பார்வையாளர்கள் ஆகியோரை நான் காயப்படுத்தியுள்ளேன்,” என தெரிவித்துள்ளார்.
“அகாடமி மீதான நம்பிக்கையை நான் சிதைத்துள்ளேன். தங்களின் சிறந்த பணிக்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் விருது வென்றவர்கள் கொண்டாடுவதற்கான வாய்ப்பை நான் பறித்துவிட்டேன். என் மனம் நொறுங்கிவிட்டது,” எனவும் கூறியுள்ளார்.
“அவர்களுடைய சாதனைகள் கவனம் பெற வேண்டும்” என தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“மாற்றங்கள் நிகழ காலம் எடுக்கும், காரணங்களை மீறி வன்முறையை மீண்டும் நான் அனுமதிக்காததை உறுதி செய்யும் வேலையைச் செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்” என அவர் முடிவாக தெரிவித்துள்ளார்.
அவரது விலகலை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ள ஆஸ்கர் அகாடமியின் தலைவர் டேவிட் ரூபின், அவர் மீதான “ஒழுங்கு விசாரணை” தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை பாஸ்டனில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிறிஸ் ராக், “என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள நான் இன்னும் முயற்சிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வில் ஸ்மித்துக்கு எதிராக குற்ற வழக்குப்பதிவு செய்ய போவதில்லை என முடிவெடுத்திருப்பதாகவும், தகவல் வெளியாகியுள்ளது.
Source : BBC Tamil