எனை நோக்கி பாயும் தோட்டா : சினிமா விமர்சனம்
முக்கியமான இயக்குநர், முன்னணி நடிகர் நடித்திருந்தும் எடுத்து முடிக்கப்பட்டு, நீண்ட காலத்திற்குப் பிறகு வெளியாகியிருக்கும் படம், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.
நடிகர்கள் | தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார், செந்தில் வீராசாமி, சுனைனா, வேலராமமூர்த்தி |
இசை | தர்புகா சிவா |
இயக்கம் | கௌதம் வாசுதேவ் மேனன். |
பொள்ளாச்சியைச் சேர்ந்த பணக்கார வீட்டுப் பையனான ரகு (தனுஷ்), சென்னையில் ஒரு கல்லூரியில் படிக்கும்போது அங்கே படப்பிடிப்பிற்காக வரும் நடிகை லேகாவைச் (மேகா ஆகாஷ்) சந்திக்கிறான். இருவரும் காதலிக்கிறார்கள்.
ஆனால், லேகாவை வளர்த்த குபேரன் (செந்தில் வீராசாமி), அவளைத் தொடர்ந்து நடிக்க வைத்து, பணம் சம்பாதிக்க விரும்புகிறான். லேகாவை மும்பைக்கும் அழைத்துச் சென்றுவிடுகிறான்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, மும்பையிலிருந்து ரகுவை அழைக்கும் லேகா, ரகுவின் சகோதரன் திரு (சசிகுமார்) ஆபத்தில் இருப்பதாகச் சொல்கிறாள். மும்பைக்குச் செல்கிறான் ரகு. ரகு ஏன் மும்பைக்குச் செல்கிறான், லேகாவுக்கும் திருவுக்கும் என்ன தொடர்பு என்பதையெல்லாம் பல சண்டைகள் கொலைகளுக்குப் பிறகு சொல்கிறார் இயக்குநர்.
கிட்டத்தட்ட, சிம்பு நடித்து 2016ல் வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் இரட்டைப் பிறவி போல இருக்கிறது எனை நோக்கி பாயும் தோட்டா.
கதாநாயகனை நோக்கிப் பாயும் தோட்டாவிலிருந்து ஃப்ளாஷ் பேக்கில் செல்கிறது கதை. முதலில் கதாநாயகியுடனான காதல், அதிலிருந்து துவங்கும் பிரச்சனைகள் என்று மெல்ல மெல்லப் பின்னோக்கிச் செல்கிறது கதை.
பிறகு திடீரென, ‘நான் – லீனியர்’ பாணியில் முன்னமும் பின்னுமாக நகர்கிறது. படத்தின் உருவாக்கம், பாடல் காட்சிகள், வசனங்கள் என எல்லாவற்றிலும் கௌதம் மேனனின் முத்திரை இருக்கிறது.
ஆனால், படத்தில் உள்ள சில பிரச்சனைகளை படத்தை ரசிக்க விடாமல் செய்கின்றன. தனுஷ், வில்லனாக வரும் செந்தில் வீராசாமி தவிர மற்றவர்கள் எல்லோருமே ஏனோதானோவென நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியாக வரும் மேகா ஆகாஷ் பல காட்சிகளில் சொதப்புகிறார். பல படங்களில் கிராமத்துக் கதாபாத்திரங்களில் வந்து மனம்கவர்ந்த வேல ராமமூர்த்தி, இந்தப் படத்தில் ஃபில்டர் காபி விளம்பரத்தில் வருபவரைப் போல பட்டும்படாமல், பட்டுச் சட்டை கசங்காமல் வந்து செல்கிறார்.
கதை, திரைக்கதையிலும் ஏகப்பட்ட சொதப்பல்கள். இரண்டு முறை துப்பாக்கியால் சுடப்பட்டும் அதிர்ஷ்டவசமாக கதாநாயகன் உயிர் பிழைப்பது, வீட்டை விட்டு பல வருடங்களுக்கு முன்பு வெளியேறிய அண்ணன், தம்பி காதலிக்கும் பெண்ணை சரியான நேரத்தில் வந்து காப்பாற்றுவது, ஐபிஎஸ் அதிகாரியான மகன் இறந்ததுகூட தெரியாமல் தாய் – தந்தையர் இருப்பது, மும்பையின் காவல் துறையின் உயர் அதிகாரிகள், பெரிய நடிகர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை கதாநாயகன் தன் அடிதடியால் கையாண்டு வெற்றிபெறுவது என நம்புவதற்கே கடினமான பல காட்சிகள் இருக்கின்றன படத்தில். சசிகுமார் எதற்காகத்தான் வீட்டைவிட்டு வெளியில் வந்தார் என்பதில் தெளிவே இல்லை.
தவிர, முதல் காட்சியிலிருந்து படம் முடியும்வரை பின்னணியில் கதாநாயகனின் குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு கட்டத்தில் வானொலியில் ஒலிச் சித்திரங்களைக் கேட்பது போன்ற எண்ணம் வந்துவிடுகிறது.
பல பாடல்கள் நன்றாக இருக்கின்றன என்றாலும் இது போன்ற சிக்கலான ஒரு த்ரில்லரில் இத்தனை பாடல்கள் எதற்காக?
படத்தில் ஒரு கட்டத்தில் கதாநாயகியை நான்கு வருடங்கள் பிரிந்திருந்து மீண்டும் சேரும்போது பல பிரச்சனைகளைச் சந்திப்பார் கதாநாயகன். தேவையில்லாமல் நான்கு வருடங்களுக்குப் பிறகு வந்துவிட்டோமோ என்று நினைப்பார்.
படத்தின் பல தருணங்களில் ரசிகர்களுக்கும் அந்த எண்ணம் வருகிறது.