நெஞ்சம் மறப்பதில்லை: திரை விமர்சனம் – Nenjam Marappathillai Movie Review
நடிகர்கள்: எஸ்.ஜே. சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா; இசை: யுவன் ஷங்கர் ராஜா; ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா; இயக்கம்: செல்வராகவன்.
2015 – 2016ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பேய்கள் கோலோச்சி வந்தன. ஒரு படத்தில் முன்னணி கலைஞர்களோ, டெக்னீஷியன்களோ இருக்கிறார்களா என்று பார்ப்பதைவிட, பேய் இருக்கிறதா என்று பார்த்து ரசிகர்கள் திரையரங்கைச் சூழ்ந்த காலம் அது. அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி இப்போது வெளியாகியிருக்கிறது.
ராமசாமி என்ற ராம்ஸே (எஸ்.ஜே. சூர்யா) மிகப் பெரிய பணக்காரன். அவனுடைய மனைவி ஸ்வேதா (நந்திதா). இவர்களுடயை குழந்தை ரிஷி. இந்தக் குழந்தையைப் பார்த்துக்கொள்ள வரும் மரியம் (ரெஜினா) என்ற இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்றுவிடுகிறான் ராம்ஸே. மரியமின் ஆவி எப்படிப் பழிவாங்குகிறது என்பது மீதிக் கதை.
‘ஒரு வழக்கமான பேய்க் கதை; திரைக்கதையில் பிரமாதப்படுத்திவிட்டார்’ என்று சொல்ல ஆசைதான். ஆனால், திரைக்கதையும் வழக்கம்போலத்தான் இருக்கிறது. தன்னை துன்புறுத்திக் கொன்றவனை தூக்கிப்போட்டு, மிதித்து பழிவாங்குகிறது பேய் என ஒரே நேர்கோட்டில் கதையைச் சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
செல்வராகவனின் பெரும்பாலான படங்கள் எந்த ஊரில் நடக்கிறதென்றே தெரியாது. இந்தப் படமும் அப்படித்தான். படம் துவங்கி சிறிது நேரத்தில், படத்தை மிஷ்கின் இயக்கியிருக்கிறாரோ என்று பீதியடையச் செய்யும்படி சில காட்சிகள் வருகின்றன. பிறகு, சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு தன் பாணியிலேயே படு சாதாரணமாக கொண்டுசெல்கிறார் செல்வராகவன்.
குடிகாரக் கணவன், இரவில் பணிப்பெண்ணின் அறைக்குள் சென்று தகராறு செய்கிறான். ஆனால், எல்லாவற்றிற்கும் சைக்கோத்தனமாக நடந்துகொள்ளும் மனைவி, கணவன் சொல்லும் எல்.கேஜி. பொய்களை நம்பி, பணிப்பெண்ணைத் திட்டுகிறாள். ஒரு காட்சியில், கண் தெரியாத ஒரு முதியவர் வந்து, மரியத்திற்கு பழைய மீன் குழம்பில் பிசைந்த சோற்றைத் தருகிறார். அந்த பழைய மீன் குழப்பில்தான் ஏதோ மர்மம் இருக்கிறது என்று காத்திருந்தால், அப்படி ஒரு மர்மமும்இல்லை. எதற்காக இந்தக் காட்சி?
கணவன் பாலியல் வல்லுறவு செய்து, பணிப்பெண்ணைக் கொன்ற பிறகு கதாநாயகி நடந்துகொள்ளும்விதம் எந்த லாஜிக்கிற்குள்ளும் அடங்கவில்லை. பேய் பழிவாங்கும் காட்சிகளை பேய்கள் பார்த்தால் சிரித்துவிடும். அவ்வளவு சாதாரணமாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அடிப்படையாக ஒரு பிரச்னை இருக்கிறது. ஒரு பேய்க் கதை என்றால் அமானுஷ்யமான சக்திகளோடு அந்தப் பேய் நடந்துகொள்ளும். அதைப் பார்த்து அந்தக் கதையின் பாத்திரங்கள் மிரண்டுபோகும். படம் பார்ப்பவர்களும் பேய் என்ன செய்யப்போகிறதோ என்று காத்திருப்பார்கள். இந்தப் படத்தில் பேய்க்கு ஒரு சக்தியும் இல்லை. கடைசியில் விஷால் போல பறந்து பறந்து சண்டை போட்டு, கதாநாயகனை பழிவாங்குகிறது. அப்படி பறந்து பறந்து சண்டை போட, பேய் எதற்கு? விஷாலோ, விஜயகாந்தோ அதைச் செய்துவிடுவார்களே!
இவ்வளவையும் தாண்டி படத்தின் சில காட்சிகள் பார்க்கும்படி இருப்பதற்குக் காரணம், எஸ்.ஜே. சூர்யா. முதல் காட்சி துவங்கி க்ளைமாக்ஸ் ஆரம்பிப்பதுவரை பின்னியெடுத்திருக்கிறார் மனிதர். ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு விதமான மேனரிஸம். அவர் திரையில் வரும் காட்சிகள் மட்டும் ரசிக்க வைக்கின்றன.
நந்திதா ஸ்வேதாவின் நடிப்பு இயல்பானதாகவே இல்லை. பாதி நேரம், வேறு எதையோ நினைத்தபடி நடித்துக்கொடுத்ததைப் போல இருக்கிறது. ரெஜினாவின் நடிப்பு ஓகே. பணியாட்களாக வருபவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இரண்டு பாடல்கள் ரசிக்கவைக்கின்றன. ஒளிப்பதிவு, திரைக்கதைக்கு இணையாக சுமாராக இருக்கிறது.