விளையாட்டு

ஐபிஎல் 2020 CSK vs KXIP: சிறு மாற்றம் கூட செய்யாமல் சென்னை பஞ்சாபை வென்றது எப்படி?

ஐபிஎல் 2020 தொடரின் நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

வெற்றிக்கு தேவை 179 ரன்கள் என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. இந்த சீசனில் இதுவரை சென்னை அணியின் பேட்டிங் பெரிதாக எடுபடவில்லை என்பதால் சென்னை அணியால் இந்த இலக்கை எளிதில் எட்டுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால்,, எந்தவித பதற்றமும் இன்றி பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து 18வது ஓவரிலேயே ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் வென்று முடித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதற்கு காரணம் ஷேன் வாட்சன் மற்றும் பாஃப் டு பிளெசீ.

பல ஆண்டுகளுக்குப் பின் மூன்று போட்டிகளில் தொடர்ந்து சென்னை தோற்றதால் இந்த போட்டியில் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கக்கூடும் என யூகங்கள் எழுந்தன.

ஐபிஎல்

ஆனால் தோனி நம்பிக்கையுடன் நாங்கள் அதே ப்ளேயிங் லெவன் உடன் விளையாடுகிறோம் என்றார்.

அவரது நம்பிக்கை பொய்க்காத வகையில் தொடக்க வீரர்கள் இருவரும் விளையாடிய அதிரடி ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறிவிட்டது.

முன்னதாகவே தொடர் தோல்வியை சந்தித்து வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நேற்று மூன்று வீரர்களை மாற்றி இருந்தது. ஆனால் அந்த நகர்வு பலனளிக்கவில்லை.

குறிப்பாக கிறிஸ் ஜோர்டான் வீசிய 3 ஓவர்களில் மட்டும் 42 ரன்கள் எடுத்தனர் சென்னை அணியினர். நேற்று கிறிஸ் ஜோர்டான் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

அந்த அணியின் டாப் ஆர்டர் சிறப்பாகவே விளையாடியது. குறிப்பாக கே.எல். ராகுல் பொறுப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

ஐபிஎல்

இவர் இறுதி ஓவர்களில் அதிரடி காட்டும் முன்பு ஷர்துல் தாக்கூர் மற்றும் கேப்டன் தோனி விரித்த வலையில் சிக்கி ஆட்டமிழந்தார்.

கடைசி கட்ட ஓவர்களில் சென்னை பந்துவீச்சாளர்கள் பஞ்சாப் அணியின் ரன்களைக் கட்டுப்படுத்தினர். இல்லையெனில் இன்னும் பஞ்சாப் கூடுதலாக 10-15 ரன்கள் எடுத்திருக்கும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வரலாற்றில் நேற்றைய தினம் வாட்சன் மற்றும் பாஃப் டு பிளெசீ குவித்த 181 ரன்களே தொடக்க வீரர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

2011ஆம் ஆண்டு முதல் விக்கெட்டுக்கு ஹஸ்ஸி – விஜய் இணை 159 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

ஐபிஎல்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் விளையாடிய வாட்சன் 53 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். டு பிளெசீ 53 பந்துகளில் 87 எடுத்து அசத்தினார்.

போட்டி முடிந்த பிறகு பேசிய டூப்லெஸிஸ், “நான் 30 – 40 ரன்கள் எடுத்து அவுட் ஆக விரும்பவில்லை. கடைசிவரை பேட்டிங் செய்ய விரும்பினேன். அது சாத்தியமானதுதான் இன்றைக்கு எனக்கு பெரிய விஷயம். தோனி மற்றும் பிளமிங் அணியை மாற்றாமல் இருந்தனர். அவர்களுக்கே இந்த பெருமை சேர வேண்டும். ஏனெனில் மற்ற அணிகளை போல மாற்றங்கள் மேற்கொள்ளாமல் வீரர்களை நம்புவது சென்னையின் தனி வழி,” என அவர் குறிப்பிட்டார்.

ஐபிஎல்

“சிறு சிறு விஷயங்களை சரியாக செய்தோம். எங்கள் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை வைத்தோம். வாட்சன் வலைப்பயிற்சியில் நன்றாகவே செயல்பட்டார். அவருக்கு கொஞ்சம் நேரம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். டு பிளெசீ தனது ஷாட்கள் மூலம் பந்துவீச்சாளர்களை குழப்பும் திறன் பெற்றவர். இருவரும் நன்றாக விளையாடினர்,” என்றார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

சென்னை அணி இனி ப்ளே-ஆஃப் சுற்றுக்கு செல்வதே சந்தேகமோ என விமர்சனங்கள் எழுந்த வேளையில் சென்னை அணியை தனக்கே உரிய பாணியில் மீண்டு வந்து வெற்றி பெற்று இருக்கிறது.

ஆனால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

Back to top button