இரானில் விமான விபத்து: நொறுங்கி விழுந்த உக்ரைன் விமானம், பயணித்த 176 பேரும் பலி
உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங்-737 விமானம் ஒன்று இரானில் நொறுங்கி விழுந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 176 பேர் பயணம் செய்தனர்.
இந்த விமானத்தில்167 பயணிகளும் ஒன்பது விமானப் பணியாளர்களும் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
169 பேர் இந்த விமானத்தில் பறக்க டிக்கெட் வாங்கியிருந்தனர், அவர்களில் இருவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று இரான் செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விமானம், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் காமெனி விமானநிலையத்தில் இருந்து கிளம்பி சென்ற உடனே இந்த விபத்து நடந்துள்ளதாக ஃபார்ஸ் அரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது.
விமான நிலையத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் நொறுங்கிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்புதவி பணியாளர்கள் இறந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர்.

பயணம் செய்தவர்கள் எந்த நாட்டவர்கள்?
உயிரிழந்தவர்களில் 82 பேர் இரான் நாட்டவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள், ஒன்பது விமான ஊழியர்கள் உள்பட 11 உக்ரைன் நாட்டவர்கள் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பத்து சுவீடன் நாட்டவர்கள், நான்கு ஆப்கானியர்கள், மூன்று பிரிட்டானியர்கள் மற்றும் மூன்று ஜெர்மானியர்களும் இறந்தவர்களில் அடக்கம்.
விபத்துக்கான காரணம் என்ன?
விமானம் கடுமையாக சிதைந்துள்ளதால் பூமியில் விழுந்தபோது வேகமாக மோதியிருக்கலாம் அல்லது, பறந்துகொண்டிருக்கும்போதே ஏதாவது நிகழ்ந்திருக்கலாம் என்று விமானப் பயண பாதுகாப்பு நிபுணர் டாட் கர்டிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த விமானம் எந்த வகையான கோளாறுகளையும் கொண்டிருந்ததாக அமெரிக்க அல்லது ஐரோப்பிய விமானப் பயண கண்காணிப்பு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
வெளித்தோற்றத்தை வைத்துப் பார்க்கும்போது அது நன்றாக பராமரிக்கப்பட்ட விமானமாகவே தோன்றுகிறது என்கிறார் கர்டிஸ்.
உலகெங்கும் ஆயிரக்கணக்கான போயிங் 737 – 800 ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. அவை பல கோடி பயணங்களையும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இந்த வகை விமானங்கள் விபத்துக்கு உள்ளாவது இது 10வது சம்பவம் என்று அவர் தெரிவித்தார்.
இரான், உக்ரைன், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்வார்கள். ஆனால் அவர்கள் எப்படி ஒன்றாக செயல்படுவார்கள் என்று தெரியவில்லை என்று டாட் கர்டிஸ் தெரிவித்தார்.
ஏ.ஆர். ரஹ்மான் (ARR): ஜிங்கிள்ஸ் முதல் ஆஸ்கார் வரை – பிறந்தநாள் சிறப்பு பகிர்வு
Sources : BBC