விளையாட்டு

கொரோனா அச்சம் எதிரொலி: ஏப்ரல் 15 வரை ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு

ஐபிஎல் போட்டிகளை ஏப்ரல் 15ஆம் தேதி வரை தள்ளிவைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் புதிய ஐபிஎல் அட்டவணை எதையும் பிசிசிஐ வெளியிடவில்லை. 

இது தொடர்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், இளைஞர்கள் மேம்பாட்டு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் சம்மந்தப்பட்ட மத்திய மற்றும் மாநில துறைகளுடன் இணைந்து பணிபுரிந்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது பங்கு தாரர்கள் மற்றும் பொது மக்களின் சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொள்கிறது. மேலும் ஐபிஎல்லுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு பாதுகாப்பான கிரிக்கெட் அனுபவத்தை வழங்குவதில் பிசிசிஐ அக்கறை கொண்டுள்ளது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29 முதல் மே 26 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்டெல்லியில் ஐ.பி.எல் உட்பட எந்தவொரு விளையாட்டு நிகழ்வுகளுக்கும் அனுமதி அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று (வெள்ளிக்கிழமை) கூறியுள்ளார். மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க இவ்வாறான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

Back to top button