சங்கக்காரவின் துடுப்பாட்டத்தை மீண்டும் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு சந்தர்ப்பம்!
இலங்கையின் முன்னாள் அணித் தலைவர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று 5 வருடங்கள் ஆன நிலையில் அவரது துடுப்பாட்டத்தை இலங்கை ரசிகர்களுக்கு மீண்டும் கண்டுகளிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
இங்கிலாந்து பிராந்திய கிரிக்கெட் நடப்புச் சம்பியன் எசெக்ஸ் அணிக்கும் எம்.சி.சி. அணிக்கும் இடையிலான நான்கு நாள் கிரிக்கெட் போட்டி காலி சர்வதேச விளையாட்டரங்கில் எதிர்வரும் மார்ச் 24ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறவுள்ள போட்டியில் எம்.சி.சி. அணியின் தலைவராக விளையாடவுள்ளார்.
மார்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்தின் தலைவர் பதவியை கடந்த வருடம் ஏற்ற குமார் சங்கக்கார, கிரிக்கெட் அணியின் தலைவராகவும் விளையாடவுள்ளமை சிறப்பம்சமாகும்.
கிரிக்கெட்டின் தாயகத்தை தன்னகத்தே கொண்ட மார்லிபோர்ன் கிரிக்கெட் கழகத்துக்கும் (எம்.சி.சி.) இங்கிலாந்து பிராந்திய நடப்புச் சம்பியனான எசெக்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இலங்கையில் நடைபெறுவது தொடர்பான ஊடக சந்திப்பு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையக கேட்போர்கூடத்தில் இன்று நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய குமார் சங்கக்கார,
‘இலங்கையில் கிரிக்கெட் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இப்போட்டியை இங்கு நடத்த எம்.சி.சி. விரும்பியது. இதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனமும் விருப்பத்தை வெளியிட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ளது. எனவேதான் அதே காலப்பகுதியில் இப்போட்டியை நடத்த தீர்மானித்தோம். அதுமட்டுமல்லாமல் எம்.சி.சி. வருடாந்த கூட்டத்தையும் இலங்கையில் மார்ச் 28 ஆம், 29ஆம் திகதிகளில் இலங்கையில் நடத்தவுள்ளோம்.
‘நான் கடைசியாக கிரிக்கெட் மட்டையைப் பிடித்து முன்றரை வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆகையால், எனது கைகள் மிருதுவாகிவிட்டன. துடுப்பாட்டப் பயிற்சிகளில் ஈடுபட்டபோது கைகளின் தோல்களும் உரிந்துவிட்டது. ஆகையால் முன்னரைப் போல் நான் விளையாடுவேன் என எதிர்பார்க்க முடியாது’ என்றார்.
2015 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விடைபெற்ற இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான சங்கக்கார மீண்டும் இலங்கை மண்ணில் விளையாடுவதை கண்டுகளிக்க இலங்கை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருப்பதுடன் அவர்களுக்கு இது பெருவிருந்தாகவும் அமையும்.