ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை அணுக பாகிஸ்தான் முடிவு
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக தாங்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடப் போவதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று இந்திய நிர்வாகத்துட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இந்தியா அறிவிப்பு வெளிட்டபின்னர், பாகிஸ்தான் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளது.
இந்தியாவின் அறிவிப்புக்கு எதிர்வினையாக அந்நாட்டுடனான வணிக மற்றும் போக்குவரத்து தொடர்புகளை பாகிஸ்தான் துண்டித்தது. மேலும் பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதரை அது வெளியேற்றியது.
பல தசாப்தங்களாக மோதலின் மையமாக இருந்துவரும் காஷ்மீருக்கு முழுமையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், இரு நாடுகளின் நிர்வாகங்களின் ஆட்சிக்கு கீழ் இரு பகுதிகளாக காஷ்மீர் இருந்து வருகிறது.
”காஷ்மீர் சர்ச்சை குறித்து முறையிட சர்வதேச நீதிமன்றத்தை நாட நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஏஆர்ஒய் நியூஸ் டிவி செய்தி செவாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
”அனைத்து வகையான சட்ட நுணுக்கங்களையும் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீரில் நடப்பதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாகிஸ்தான் தொடுக்கவுள்ள வழக்கு மையப்படுத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக குற்றம்சாட்டப்படுவதை இந்தியா மறுத்து வருகிறது.
இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோதியிடம் தொலைபேசியில் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனையை இரு நாடுகளும் தங்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை பாரிஸில் சந்திக்கவுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் காஷ்மீர் பிரச்சனை குறித்து மோதியுடன் விவாதிக்கவுள்ளதாக ஒரு பிரான்ஸ் அரசு அதிகாரி செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன?
இதனிடையே, இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் கடந்த இரண்டு வாரங்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவைகள் பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் குறிப்பிட்ட அளவு லேண்ட்லைன் சேவைகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அரசு, மீண்டும் பள்ளிகளை திறந்துள்ளது. அதேபோல் பெரிய கூட்டங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடையையும் தளர்த்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கை பராமரிக்க சில முன்னெச்சரிக்கை தடுப்புக்காவல் நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துள்ளதாக இந்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் லேண்ட்லைன் சேவைகள் செயல்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கடந்த 16-ஆம் தேதியன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டங்களின் காரணமாக ஸ்ரீநகரில் மூடப்பட்ட பள்ளிகளில் 200 தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன என்று அரசு நிர்வாகிகள் கூறுகின்றனர்
அந்த பள்ளிகளை பத்திரிகையாளர்கள் பார்வையிட்டனர். அவற்றில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் யாரும் இல்லை.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தாங்கள் அஞ்சுவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
மேலும் காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.