‘தில்லியில் திமுக ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க எதிர்ப்பு’
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் தில்லி ஜந்தர் மந்தரில் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி நாடாளுமன்ற சாலை காவல் சரக துணை ஆணையர் அலுவலகத்தில் வழக்குரைஞரும், தேமுதிகவின் தில்லி செயலருமான ஜி.எஸ்.மணி மனு அளித்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: திமுக உள்ளிட்ட கட்சிகள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்ற வகையில், இப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, அரசியல் தலைவர்கள் வீட்டு சிறைபிடிப்பு, இன்டர்நெட் சேவை ரத்து, சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு, பயங்கரவாத செயல் முறியடிப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
ஆகவே, அது தொடர்பான விவகாரங்களில் போராட்டம் நடத்துவது உச்சநீதிமன்ற நீதி வழங்கும் நடைமுறைகளுக்கு எதிரானது. மேலும், இப்போராட்டம் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலும், மக்களிடையே பிரிவினைவாதத்தை ஊக்குவித்து வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை நாடு முழுவதும் உருவாக்கும் வகையிலும், எதிரி நாடுகளான பாகிஸ்தான், சீனா போன்றவற்றை ஊக்குவிக்கின்ற வகையிலும் இந்த ஆர்ப்பாட்டம் இருக்கும் என்பதால், இப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜி.எஸ்.மணி கூறுகையில், உயர் அதிகாரிகள் கலந்து ஆலோசித்து இப்போராட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக முடிவெடுப்பதாக காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றார்.
காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை தில்லி ஜந்தர் மந்தரில் அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.