ஆன்மிகம்

Shivaratri : மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரியின் போது எப்படி விரதம் இருக்க வேண்டும்?

Shivaratri : மாசி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது மகா சிவராத்திரி தான். இது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.

இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

அந்தவகையில் தற்போது சிவராத்திரியின் போது எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்? இதனால் என்ன பயன் கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம்.

காயத்ரி மந்திர மகிமை

 

விரதம் இருக்கும் முறை

முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.

சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.

அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.

ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.

பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும். அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக , மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை நந்து வீடு திரும்பவேண்டும்.

வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.

இந்த நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.

சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறும். அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம்.

நன்மைகள்

சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம், பெறலாம் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும் என்பது நம்பிக்கை.

சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும்.

மகா சிவராத்திரியன்று முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். காசியில் வீடு பேரடைந்த பலன் கிடைக்கும். சகல செல்வங்களும் மகிழ்ச்சியும் வந்து சேரும் எனக் கூறப்படுகிறது.

செய்யக்கூடாதவை

பகலில் தூங்கக் கூடாது.

சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.

உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.

விக்கிப்பீடியாவில் இருந்து.

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல்.

சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

  1. நித்திய சிவராத்திரி
  2. மாத சிவராத்திரி
  3. பட்ச சிவராத்திரி
  4. யோக சிவராத்திரி
  5. மகா சிவராத்திரி

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.

விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள்

திருக்கேதீச்சரப் பதிகங்கள்
திருவண்ணாமலைப் பதிகங்கள்

பலன் தரும் பரிகாரங்கள்

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒரு நாள் முழுவதும்,ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

நான்கு யாம வழிபாட்டிற்குரிய திரவியங்கள்

முதல் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் – சோமாஸ்கந்தர்
  • அபிஷேகம் – பஞ்சகவ்யம்
  • அலங்காரம் – வில்வம்
  • அர்ச்சனை – தாமரை, அலரி
  • நிவேதனம் – பால் அன்னம்,சக்கரைபொங்கல்
  • பழம் – வில்வம்
  • பட்டு – செம்பட்டு
  • தோத்திரம் – இருக்கு வேதம் , சிவபுராணம்
  • மணம் – பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தணம்
  • புகை – சாம்பிராணி, சந்தணக்கட்டை
  • ஒளி– புட்பதீபம்

இரண்டாம் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் – தென்முகக் கடவுள்
  • அபிஷேகம் – பஞ்சாமிர்தம்
  • அலங்காரம் – குருந்தை
  • அர்ச்சனை – துளசி
  • நிவேதனம் – பாயசம், சர்க்கரைப் பொங்கல்
  • பழம் – பலா
  • பட்டு – மஞ்சள் பட்டு
  • தோத்திரம் – யசுர் வேதம் , கீர்த்தித் திருவகவல்
  • மணம் – அகில், சந்தனம்
  • புகை – சாம்பிராணி, குங்குமம்
  • ஒளி– நட்சத்திரதீபம்

மூன்றாம் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் – இலிங்கோற்பவர்
  • அபிஷேகம் – தேன், பாலோதகம்
  • அலங்காரம் – கிளுவை, விளா
  • அர்ச்சனை – மூன்று இதழ் வில்வம், சாதி மலர்
  • நிவேதனம் – எள் அன்னம்
  • பழம் – மாதுளம்
  • பட்டு – வெண் பட்டு
  • தோத்திரம் – சாம வேதம், திருவண்டப்பகுதி
  • மணம் – கஸ்தூரி சேர்ந்த சந்தணம்
  • புகை – மேகம், கருங் குங்கிலியம்
  • ஒளி– ஐதுமுக தீபம்

நான்காம் யாமம்

  • வழிபட வேண்டிய மூர்த்தம் – சந்திரசேகரர்(இடபரூபர்)
  • அபிஷேகம் – கருப்பஞ்சாறு, வாசனை நீர்
  • அலங்காரம் – கரு நொச்சி
  • அர்ச்சனை – நந்தியாவட்டை
  • நிவேதனம் – வெண்சாதம்
  • பழம் – நானாவித பழங்கள்
  • பட்டு – நீலப் பட்டு
  • தோத்திரம் – அதர்வண வேதம் , போற்றித்திருவகவல்
  • மணம் – புணுகு சேர்ந்த சந்தணம்
  • புகை – கர்ப்பூரம், இலவங்கம்
  • ஒளி– மூன்று முக தீபம்

Back to top button