பலியானவர்களின் எண்ணிக்கை 813 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை, 2003ல் பரவிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை மிஞ்சியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் மையப் புள்ளியாக உள்ள சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 780 என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் இதுவரை இந்த நோய்க்கு 803 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சீனப் பெருநிலப் பரப்பிலும், ஹாங்காங்கிலும் இறந்தவர்கள்தான்.
2003-ம் ஆண்டு சுமார் இரண்டு டஜன் நாடுகளில் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய் தாக்கியதால் 774 பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது உலக அளவில் 34,800 பேருக்கு இந்த புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கை சீனாவிலேயே நிகழ்ந்துள்ளது.
இந்த புதிய நோய்ப் பரவலை உலக சுகாதார அவசர நிலை என்று கடந்த மாதம் அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.
ஹுபேய் மாகாணத்தில் சனிக்கிழமை மட்டும் 81 பேர் இறந்ததாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோயால் 802 பேர் சீனாவிலும், ஹாங்காங்கிலும் இறந்துள்ளனர். ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்துள்ளார்.
2019-என்கோவ் என்று சுருக்கமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த நோவல் கொரோனா வைரஸ், முதல் முதலாக ஹுபேய் மாகாணத் தலைநகரான வுஹானில் கண்டறியப்பட்டது. பரந்த இந்த நகரம் கடந்த சில வாரங்களாக முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. முற்றிலும் சீலிடப்பட்ட நிலையிலும் உள்ளது.
சீனப் பெருநிலப் பரப்பில் இருந்து ஹாங்காங் வரும் யாராக இருந்தாலும் அவர்கள் இரண்டு வாரம் தனிமையில் வைக்கப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வெளியூரில் இருந்து ஹாங்காங் வருகிறவர்கள் விடுதி அறைகளிலோ, அரசு மையங்களிலோ தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளிலேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்தப் புதிய விதிகளை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அப்படி மீறுகிறவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஹாங்காங்கில் 26 பேருக்கு இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வுஹான் நகரில் உள்ள ஜின்யின்டன் மருத்துவமனையில் 60 வயது அமெரிக்க குடிமகன் ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தார். இவர்தான் இந்த நோயால் உயிரிழக்கும் முதல் சீனர் அல்லாத நபர்.
பிரான்ஸ் நாட்டில் ஓட் சவ்வா பிராந்தியத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதை அந்நாடு சனிக்கிழமை உறுதி செய்தது. இவர்களில் ஒருவர் 9 வயது சிறுவன். இதையும் சேர்த்து இதுவரை பிரான்சில் 11 பேருக்கு இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக நோய் கண்டறியப்பட்ட 5 பேருமே பிரிட்டிஷ் குடிமக்கள் என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சர் ஆக்னஸ் புஜின் தெரிவித்துள்ளார்.