பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை
முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஓருவர் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 11.08.2019 அன்று குடும்பஸ்தர் ஒருவர் 04 இளைஞர்களால் நாவற்காட்டு பகுதியில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலிற்கு உள்ளான குடும்பஸ்தர் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதலிற்கு உள்ளான நபர் பாமர குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கூலித்தொழில் புரிந்து தமது குடும்பத்தை நடாத்தி வருபர் ஆவார்.
இத்தாக்குதல் தொடர்பில் முல்லைத்தீவு தலைமைப் பொலிஸ் நிலையைத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தாக்குதலை மேற்கொண்டவர்களிற்கும் பொலிசாரிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காரணமாக எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்காது தவிர்த்து வந்துள்ளனர்.
10 நாட்களிற்கு மேலாகியும் பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ளாததனால் ஏமாற்றமடைந்த குடும்பத்தினர் இவ்விடயத்தை 18.08.2019 அன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா காரியாலயத்தின் விசாரணை அதிகாரியும் சட்டத்தரணியுமான வசந்தராஜாவின் கவனத்திற்கு கொண்டுவந்ததுடன் குடும்ப உறுப்பினர்கள் பொலிசாரின் அசமந்தமான செயற்பாட்டையும் அவர்களது பக்கச்சார்பான நடவடிக்கை தொடர்பில் முறையிட்டுள்ளனர்.
விரைந்து செயற்பட்ட ஆணைக்குழுவின் அதிகாரி முல்லைத்தீவு தலைமைப்பொலிஸ் நிலையத்தின் சிறு குற்றப்பகுதி பொறுப்பதிகாரியினை தொடர்பு கொண்டு குறித்த தாக்குதல் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் ஏன் ஏற்பட்ட தாமதம் ,சந்தேக நபர்களை கைது செய்யாமை, நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லாமை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் உடனடியாக இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய 4 சந்தேக நபர்களையும் 19.08.2019 அன்று கைது செய்யப்பட்டு நேற்று 20.08.2019 முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 03.09.2019 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குறித்த செயற்பாடு பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.