சினிமா
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஒளிபரப்பாகும் வால் கேம் ஷோ குறித்த 10 தகவல்கள்
பிக் பாஸ் முடிந்துவிட்டது இனி என்ன செய்வது என்று புரியாமல் இருந்த தொலைக்காட்சி நேயர்களுக்கு புதியதாக ஒரு கேம் ஷோவை அறிமுகப்படுத்தியுள்ளது விஜய் தொலைக்காட்சி.
தி வால் என்னும் நிகழ்ச்சிதான் அது. நேற்று சனிக்கிழமையன்று ஒளிபரப்பைத் தொடங்கிய இந்த நிகழ்ச்சி குறித்து இதோ 10 சுவாரஸ்ய தகவல்கள்
- இந்த நிகழ்ச்சி இதே பெயரில் பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, தாய்லாந்து, வியட்நாம், ஜெர்மனி, பிரேசில், அர்ஜெண்டினா, டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ரஷ்யா என 27 நாடுகளில் இது ஒளிபரப்பப்பட்டுள்ளது.
- அமெரிக்காவில் இது ஸ்பானிஷ் மொழியில் இந்த வருடம் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து நாடுகளிலும் தி வால் என்ற பெயரிலேயே ஒளிபரப்பு செய்யப்பட்டது.
- 28ஆவது நாடாக இந்தியாவில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது.
- அமெரிக்காவின் என்பிசி சேனலில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியை க்றிஸ் ஹாட்விக் தொகுத்து வழங்கினார்.
- என்பிசியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் சராசரியாக 6.77 மில்லியன் பேர் பார்த்தனர் என அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் எண்டமோல் ஷைன் தெரிவித்திருந்தது.
- பிரேசில், டென்மார்க், ஃபின்லாந்து, இஸ்ரேல், ரோமானியா, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய இருநாடுகளிலும் இந்த நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டது.
- பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் இந்த நிகழ்ச்சி நம்பர் ஒன் இடத்தை பிடித்த கேம் ஷோ என்று கூறப்பட்டது. பிரான்ஸில் இந்த நிகழ்ச்சி 4.35 மில்லியன் நேயர்களால் பார்க்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
- சுமார் 40 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், திட்டம், அறிவு, மற்றும் அதிர்ஷ்டம் ஆகிய மூன்றையும் பொருத்து ஒருவரின் பரிசுத் தொகை நிர்ணயிக்கப்படும். இது பெயருக்கு ஏற்றாற்போல் வால் அதாவது ஒரு சுவரை மையமாக வைத்து விளையாடப்படுகிறது. இதில் இருவர் ஒரு குழுவாக விளையாட வேண்டும்.
- அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் 12மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை பரிசாக அறிவிக்கப்பட்டது. தமிழில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரண்டரை கோடி வரை பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
- என்பிசி சேனலில் சீசன் ஒன்னில் ஒளிபரப்பு செய்யப்பட்ட 10 எபிசோடுகள் மற்றும் சீசன் இரண்டில் ஒளிபரப்பு செய்யப்பட்ட 20 எபிசோடுகளில் மொத்தம் 10 குழு எந்த தொகையும் வெற்றி பெறாமல் சென்றுள்ளனர். அதிகபட்சமாகக் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட எபிசோடில் அப்பா மற்றும் மகளான புரூக் மற்றும் கிர்க் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பரிசாக வென்றனர்.