செய்திகள்

ப.சிதம்பரம் முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவரைத்தேடி வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள்

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த இரண்டு முன் ஜாமீன் மனுக்களையும் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் அவரது உதவியாளரிடம் தகவல் விசாரித்துச் சென்றனர். சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டுக்கு வந்தது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இட்ட டிவிட்டர் பதிவு:

முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது வழக்குரைஞர் மொஹித் மாத்தூர் உயர் நீதிமன்றத்தில் 3 நாள் அவகாசம் கேட்டார்.

அது பற்றி பரிசீலிப்பதாகக் கூறிய நீதிபதி சுனில் கௌர் நீதிமன்ற அறையில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மனு

இதற்கிடையே, தாம் கைது செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று கோரி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். சிதம்பரத்தின் வழக்குரைஞர் கபில் சிபல் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றப் பதிவாளரிடம் கோரியுள்ளார்.

2007-ம் ஆண்டு சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற நிறுவனம் வெளிநாட்டில் இருந்து 305 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (FIPB) அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக 2017ம் ஆண்டு சி.பி.ஐ. ஒரு வழக்குப் பதிவு செய்தது.

முதலீடு பெற்ற நிறுவனத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ப.சிதம்பரத்தின் மகன் கட்டுப்படுத்துவதால், அவரது தலையீட்டின்பேரிலேயே வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரிய அனுமதி அளிக்கப்பட்டதாக நம்புவதற்கு தங்களுக்கு காரணம் இருப்பதாக அமலாக்கப் பிரிவு நீதிமன்றத்தில் வாதிட்டது.

Back to top button