“ராஜீவ் கொலை வழக்கு: ஆளுநரிடம் விளக்கம் எதுவும் கேட்க முடியாது”
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு கடந்த 2018, செப்டம்பர் 9ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானத்துக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து, தீர்மானத்துக்கு விரைவாக ஆளுநரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசுக்கு உத்தர விடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி.சரவணன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, நியமன பதவியில் உள்ள ஆளுநரிடம் அனுப்பிய தீர்மானத்துக்கு ஏன் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை என ஜனநாயக ரீதியில் கேள்வி கேட்க முடியும். அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது” என வாதிட்டார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் வாதிடும்போது, ”அரசியலமைப்புச் சட்டம் ஆளுநருக்கென தனிப்பட்ட அதிகாரத்தை வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது.
மேலும் தீர்மானமோ, கடிதமோ எதுவாக இருந்தாலும் மாநில அரசால் ஆளுநருக்கு அனுப்பி வைக்க மட்டுமே முடியும். அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து ஆளுநரிடம் கேள்வியோ, விளக்கமோ மாநில அரசால் கேட்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளனர்.