சினிமா

விஜய் படங்கள் தமிழ்நாட்டில் அரசியல் பிரச்சனைகளில் சிக்குவது ஏன்?

விஜயின் படங்கள் அரசியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களின் படங்களில் இவ்வளவு பிரச்சனைகள் வந்ததில்லை. விஜய் படங்கள் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் குறித்துப் பார்க்கலாம்

புதிய கீதை

விஜய் நடிப்பில் 2003ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புதிய கீதை’. இந்தத் திரைப்படத்திற்கு முதலில் ‘கீதை’ என்றே தலைப்பு வைக்கப்பட்டது. கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த விஜய் நடிக்கும் படத்திற்கு எப்படி கீதை என தலைப்பு வைக்கலாம் எனக் கூறி இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ‘புதிய கீதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

காவலன்

விஜயின் 50ஆவது படமான ‘சுறா’ தோல்வியடைந்ததை அடுத்து தோல்விக்கு நஷ்டஈடு கேட்டு தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் ‘காவலன்’ படத்தை வெளியிட மாட்டோம் என்றார்கள்.

படத்தை வெளியிடக் கோரி ரசிகர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையில் விஜய் திரைப்பட உரிமையாளர்களை அழைத்து நஷ்டஈடு கொடுத்தார். அதற்கு பிறகுதான் ‘காவலன்’ திரையிடப்பட்டது.

துப்பாக்கி

இந்தப் படம் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. முதலில், படத்தின் தலைப்பை மாற்றக் கோரி ‘கள்ளத்துப்பாக்கி’ படக் குழுவினர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்தப் படத்தில் முஸ்லிம்களை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி படத்திற்கு தடைகோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தின.

‘சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிடுகிறேன்’ எனக் கூறி எஸ்.ஏ. சந்திரசேகர் இந்தப் படத்தின் சர்ச்சைக் காட்சிகளை நீக்கி படத்தை வெளியிட உறுதுணையாக இருந்தார். இப்படி அடுக்கடுக்கான பிரச்சனைகளை சரிசெய்து ‘துப்பாக்கி’ படம் வெளியிடப்பட்டது.

தலைவா

விஜக்குக்கு அரசியல் ஆர்வம் உள்ளது என்பது அவருடைய ரசிகர்களுக்கு புரிந்த காலகட்டம் இது. அரசியல் ரீதியாக விஜய் மக்கள் இயக்கம் செயல்பட ஆரம்பித்தபோது, ‘ டைம் டூ லீட்’ என்கிற டேக் லைனுடன் ‘தலைவா’ பட வெளியீட்டிற்கான அறிவிப்பு வந்தது.

இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. தலைவா படம் வெளியிடப்படும் திரையரங்குகளுக்கு படம் வெளியிடக்கூடாது என மிரட்டல்கள் வர ஆரம்பித்தன. இந்தப் பிரச்சனையை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் செல்ல படக்குழு திட்டமிட்டது. ஆனால், ஜெயலலிதா அவர்களை சந்திக்க வாய்ப்பு கொடுக்கவில்லை. இறுதியாக பல நாட்கள் கழித்து ‘டைம் டூ லீட்’ என்கிற வாசகம் நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது.

கத்தி

விவசாயிகள் பிரச்சனை. கதை திருட்டுப் புகார் என இந்தப் படத்திற்கு அடுத்தடுத்து பிரச்சனைகள். இலங்கை அரசுக்கு ஆதரவான லைக்கா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் எனக் கூறி இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என போராட்டங்கள் வெடித்தன. கத்தி படம் வரையில் யோசித்து அரசியல் வசனங்களை பேசி வந்த விஜய், கத்தி படத்திற்கு பின்னர் நேரடியாகவே அரசியல் பேசத் தொடங்கினார்.

புலி

புலி படம் வெளியிடுவதற்கு முந்தைய நாள் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதனால், பட வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

புலி படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டது. பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் பகல் காட்சி திரையிடப்பட்டது. ஆனாலும், புலி திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் தோல்வியடைந்தது.

தெறி

விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனை காரணமாக தெறி திரைப்பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. முக்கியமான பல இடங்களில் படம் வெளியாகாவிட்டாலும் பரவாயில்லை என படக்குழு படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட்டது.

மெர்சல்

டைட்டில் முதல் சென்சார் சான்றிதழ் பெறுவது வரையில் இந்தத் திரைப்படத்திற்கு தொடர்ந்து பிரச்சனைதான். மெர்சல் படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்த்தனர்.

மேலும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி வரி குறித்த வசனம் தொடங்கி பல காட்சிகளை நீக்கச் சொல்லி பாரதிய ஜனதா கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில் ஜிஎஸ்டி வரி குறித்த வசனம் தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து பாஜகவின் ஹெச். ராஜா ‘ஜோசப் விஜய்’ எனத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் படம் வெற்றி பெற்றதற்கு இந்த சர்ச்சையும் ஒரு காரணம் என்று சொல்லப்பட்டது.

சர்கார்

சர்கார் படத்தின் கதை தன்னுடைய கதையின் தழுவல் எனக் கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்தப் பிரச்சனையைத் தொடர்ந்து படத்தில் வருண் ராஜேந்திரன் பெயரைப் பயன்படுத்துவதாகக் கூறி ஏ.ஆர்.முருகதாஸ் அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைத் தொடர்ந்து இந்தப் பட வெளியீட்டு விழாவில் அரசியல் ரீதியாக பல விஷயங்களை விஜய் பேசியது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிகில்

இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, ”எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்,” என எதிர்மறையாக அரசியல் தலைவர்களை விமர்சனம் செய்தார்.

அவருடைய பேச்சுக்கு அதிமுக தரப்பில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் இந்தப் பட இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த ரசிகர்கள் மீது போலீசார் தாக்குதல்கள் நடத்தினர்.

இந்தப் படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டையின் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்ற காட்சி வெளியிடப்பட்டது. அந்தக் காட்சியை கண்டித்து வியாபாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தியது ஒருபுறம் இருக்க, பாஜக மற்றும் அதிமுகவினர் அவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

பல்வேறு எதிர்ப்பை மீறி படம் திரையிடப்பட்டது. தற்போது அந்தப் படத்தின் வசூல் தொடர்பாக விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதும் அரசியல் சூழ்ச்சியோ என விஜய் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து விஜய் படங்கள் ஏன் சர்ச்சையாகிறது என்பது குறித்து சினிமா விமர்சகர் சாரா சுப்பிரமணியனிடம் பேசியது பிபிசி தமிழ்.

“ரஜினிகாந்த் பாட்ஷாவில் தொடங்கி அவருடைய படங்களில் அரசியல் ரீதியாக சில கமெண்ட்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக அரசியலுக்கு வரப் போவதாக செய்தி வந்து கொண்டே இருந்தது. ரஜினியின் அடுத்த வெர்ஷன்தான் விஜய்.”

“ரஜினி எப்படி தனக்கு கிடைத்த ‘மாஸை’ அடிப்படையாக வைத்து அதனை அரசியல் ரீதியாக எப்படி எடுத்துச் செல்லலாம் என்கிற வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறாரோ, அந்த யுக்தியைத்தான் தற்போது விஜயும் பின்பற்றுகிறார். அதனாலேயே தெளிவான அரசியல் ரீதியான ஸ்டேட்மெண்ட் விஜயிடம் இருந்து இன்னும் வரவில்லை.”

“விஜயகாந்த் சினிமாவில் நடிக்கும்போதும் சரி, சினிமாவிலிருந்து அரசியலுக்குள் நுழையும்போதும் சரி அவரிடம் தெளிவான அரசியல் பார்வை இருந்தது. எப்பொழுதும் விஜயைப் பொறுத்தவரையில் இயல்பாகவோ செயற்கையாகவோ சர்ச்சைகள் வந்துவிடும். விஜய் தரப்பிலிருந்து எதிர்பார்த்தும் சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. ஏனெனில், அப்பொழுதுதான் ‘மாஸை’ தக்க வைத்துக் கொள்ள முடியும். இவர் அரசியல்வாதியாகிவிட்டால் இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமென அதை பெரிய அச்சுறுத்தலாக நினைக்கிறார்கள். அதனாலேயே இவரை காலி செய்ய என்னென்ன வழிகள் உள்ளதோ அதை பின்பற்றுகிறார்கள். எப்பொழுதும் நீர்த்துப் போகாத சர்ச்சையாகவே இது இருக்கும். இரண்டு தரப்புமே சர்ச்சையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்,” என்றார் சாரா சுப்பிரமணியன்.

Back to top button