செய்திகள்

அதிசார குருபெயர்ச்சி: 12 ராசிகளுக்குமான பலன்கள் பற்றி பார்ப்போம்

நவகிரகங்களில் செவ்வாய், புதன், சுக்கிரன், குரு, சனி போன்ற ஐந்து கிரகங்களும் சில நேரங்களில் வக்ரம் பெறுவார்கள்.
சனி, குரு சில நேரங்களில் அதிசாரமாக செல்வார்கள். மார்ச் 29ஆம் தேதி குருபகவான் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த இடப்பெயர்ச்சியினால் எந்த ராசிக்கு நன்மை, பாதிப்பு என பார்க்கலாம்.
நவகிரகங்கள் ராசிகளில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் ஒரு கிரகம் வேகமாக நகர்ந்து அடுத்த ராசிக்குச் செல்வதை அதிசாரம் என்று சொல்வார்கள்.
விருச்சிக ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குருபகவான் தனுசு ராசிக்கு வேகமாக சென்று விடுவது அதிசாரம் எனப்படுகிறது. குருவானவர் விருச்சிக ராசியில் ஏறத்தாழ ஓராண்டு காலம் சஞ்சரிக்க வேண்டும்.
ஆனால் அவர் விருச்சிகத்தில் இருந்து திடீரென தனுசு ராசிக்கு சென்று விட்டு பின்னர் பின்னோக்கி வக்ரமாக விருச்சிகத்திற்கு வருவார். குருபகவான் அதிசாரம், வக்ரம் அடையும் போது ராசிகளுக்கு சில பலன்களைத் தருவார்.
மேஷம்
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி குருபகவான் 29.03.2019 முதல் ஏப்ரல் 22ஆம் தேதி வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 9ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குருபகவான் அதிசாரமாக ஒன்பதாம் வீட்டிற்குப் போவதால் மதிப்பும் மரியாதையும் கூடும்.
அதிக நன்மைகள் நடைபெறும் காலம் இதுவாகும். வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் மதிப்பும் மரியாதையும் கூடும். ஒன்பதாம் இடம் தர்ம ஸ்தானம். இந்த இடத்தில் உள்ள கேது, சனியுடன் குருபகவான் இணைகிறார். இந்த கால கட்டத்தில் ஆன்மீக தலங்களுக்கு பயணம் செய்வீர்கள்.
அப்பாவினால் நன்மைகள் கூடும். குருபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. ராசிக்கு மூன்றாவது வீடு, ஐந்தாம் வீட்டின் மீது விழுவதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், பணப்பற்றாக்குறை, கவலைகள் வந்து செல்லும். குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்து எட்டாவது வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் சில பாதிப்புகள் ஏற்படும்.
என்னதான் முயற்சிகள் செய்தாலும் சில தடங்கள் ஏற்படும். உடல் நலமும் பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருக்கவும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீடு, நான்காவது வீடு, 12வது வீட்டினை பார்ப்பதால் பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும், வீடு, நிலம் வாங்குவீர்கள். அஜீரணக்கோளாறு ஏற்படும் என்பதால் உணவு விசயத்தில் கவனம் தேவை. வியாழக்கிழமைகளில் பசு நெய் வாங்கி தானம் செய்யலாம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஆறாவது வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்திற்கு செல்வதால் திருமண வாழ்க்கையில் நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சிலருக்கு திருமணம் கைகூடி வரும். உங்கள் ராசியை குருபகவான் பார்வையிடுவதால் தொழில் வியாபாரம் சிறப்படையும். பங்கு வர்த்தகத்தில் பலன் கிடைக்கும். அதிசாரத்தில் ராசிக்கு 7ஆம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்குக் கூடும். பணவரவு அதிகரிக்கும்.
கடகம்
குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டில் இருந்து ஆறாவது வீட்டில் சஞ்சரிப்பதால் கடக ராசிக்காரர்கள் சற்றே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய கால கட்டம்.
சில நேரங்களில் காயங்கள் ஏற்படலாம். மனதாலும் உடலாலும் சில அழுத்தங்கள் ஏற்படும். போட்டியாளர்கள், எதிர்களின் தொல்லைகள் அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடு, 12ஆம் வீடு, 10ஆம் வீட்டின் மீது விழுவதால் சில நன்மைகள் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு வரும். தொழிலில், பணி செய்யும் இடத்தில் புரமோசன் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ள குருபகவான் உங்கள் ராசியை ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். உடல் ஆரோக்கியத்துடன் உற்சாகத்துடனும் இருக்கும். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். பணி செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டை பார்க்கும் குருபகவானால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வருமானம் கூடும். ராசிக்கு ஒன்பதாம் வீட்டினை பார்க்கும் குருபகவானால் ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். அப்பாவினால் உதவி கிடைக்கும். மகளுக்கு திருமணம் கைகூடி வரும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு நான்காம் அதிபதியும் ஏழாம் அதிபதியுமான குருபகவான் இப்போது ராசிக்கு நான்காவது வீட்டில் அமர்கிறார். இது கன்னிக்கு சாதகமானதல்ல.
கணவன் மனைவி இடையே சில சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும். உணர்வுப்பூர்வமான பேச்சுக்களால் சில பாதிப்புகள் வரும். பணப்பற்றாக்குறை ஏற்படும். சில நோய்கள் எட்டிப்பார்க்கும். பாதிப்புகள் குறைய ஏழை பிராமணர் ஒருவருக்கு தானம் அளிக்கலாம். பசுவிற்கு சப்பாத்தி தானமாக தரலாம்.
துலாம்
குரு பகவான் உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் அமர்கிறார். உடல் உழைப்பு அதிகரிக்கும். செய்யும் வேலைகளில் சின்னச் சின்ன தடங்கல் ஏற்படும். சோம்பேறித்தனத்தை கைவிடுங்கள்.
வீண் பழி ஏற்பட்டு மனதை பாதிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டையும், பதினொன்றாம் வீட்டையும் பார்க்கிறார் குருபகவான். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் நடைபெறும். வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு பாசிப்பயறு தானமாக கொடுக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே… உங்கள் ஜென்ம ராசியில் இருந்த குருபகவான் இரண்டாம் வீடான தன ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவது நன்மை தரும் அமைப்பாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும், தம்பதியர் ரொமான்டிக்காக சிறு பயணம் செல்வீர்கள். திருமண முயற்சிகள் சிலருக்கு கை கூடி வரும். வீடு கட்டும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே… உங்கள் ராசி நாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருகிறார். ஏற்கனவே உங்கள் ராசியில் சனிபகவான், கேது ஆகியோர் குடியேறியிருக்க, இப்போது அதிசாரமாக குருபகவானும் சஞ்சரிக்கிறார்.
ஜென்ம குரு பொருளாதார ரீதியாக சில சங்கடங்களை ஏற்படுத்துவார். எவ்வளவுதான் பணம் வந்தாலும் செலவு கையை கடிக்கும். பொருளாதார நெருக்கடியை சந்திக்க தயாராகுங்கள். சில காலம்தான் கவலை வேண்டாம். ராசிக்கு 5ஆம் வீடு, ஏழாம் வீடு, ஒன்பதாம் வீட்டை பார்க்கும் குருபகவானால் திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
மகரம்
மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்கிறார் குருபகவான். இன்பமும், துன்பமும் இணைந்த காலகட்டம் இதுவாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.
ஆன்மீக தரிசனம் மன அமைதியைத் தரும். பாக்கெட்டில் மஞ்சள் நிற கர்ச்சிப் பயன்படுத்த மேலும் நன்மைகள் நடைபெறும். செலவுகளை கட்டுப்படுத்த சிக்கனத்தை கடைபிடியுங்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும்.
கும்பம்
கும்பம் ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் குருபகவான் அமர்வது நன்மை தரும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணபலமும் அதிகமாகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அமைதியும் ஆனந்தமும் குடியேறும். புதிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். அரசமரத்திற்கு தினசரி தண்ணீர் ஊற்ற நன்மைகள் நடைபெறும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே… உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 10வது வீடான கர்ம ஸ்தானத்தில் குடியேறுகிறார். நீண்ட நாள் உடல் பாதிப்பில் இருந்து உங்களின் அம்மா குணமடைவார். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண முதலீடுகளை கவனமாக கையாளுங்கள்.
குருபகவான் ராசிக்கு இரண்டாம் வீடு நான்காம் வீடு, மற்றும் ஆறாம் வீடுகளின் மீத விழுகிறது. கடன்கள் அடைபடும். எதிரிகள் தொல்லை ஒழியும். பணவருமானம் அதிகமாக இருந்தாலும் சொத்துக்களை வாங்கும்போது கவனம் தேவை.
அதிசார குருபெயர்ச்சி: 12 ராசிகளுக்குமான பலன்கள் பற்றி பார்ப்போம் 1

Back to top button