செய்திகள்

2019 தமிழ் வருடப் பிறப்பு பலன்கள்: மேஷ ராசி நேயர்களுக்கு இனிய காலம்

(அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை) 14.4.2019 முதல் 13.4.2020 வரை
மேஷ ராசி நேயர்களே,
தமிழ் புத்தாண்டு பிறக்கும் பொழுதே குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கின்றார். உங்கள் ராசியிலேயே பஞ்சம ஸ்தானாதிபதி சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கின்றார். உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் இருக்கின்றார். எனவே இந்த ஆண்டு உங்களுக்கு இனிய ஆண்டாக அமையப் போகின்றது. மேலும் சுக ஸ்தானத்தில் சந்திரன் சொந்த வீட்டில் சஞ்சரித்து சகடயோக அமைப்போடு கிரகங்கள் சாதக நிலையில் இருக்கின்றன.
[post_ads]


வருடத் தொடக்கத்தில் 9-ம் இடத்தில் குரு, சனி, கேது ஆகிய மூன்று கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்குபவர் சனிபகவான். அவர் பிதுர்ரார்ஜித ஸ்தானத்தில் குரு வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது நல்ல பலன்களையே வழங்குவார்.
செல்வ வளம் சிறப்பாக இருக்கும். சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு முன்னேற்றம் கூடுதலாக இருக்கலாம். ஆயில்யம் நட்சத்திரத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. அந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான புதன் உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர். அவர் ஆண்டின் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். மேலும் 12-ம் இடத்தில் மறைந்தும் இருக்கின்றார். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும்.
6-க்குஅதிபதி நீச்சம் பெற்று 12-ல் இருப்பதால் விபரீத ராஜயோக அடிப் படையில் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர் தனலாபங்களும் இடையிடையே வந்து சேரும். உதாசீனப்படுத்திய உறவினர்கள் உங்களைத்தேடி வருவர்.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும், மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசியில் பதிகின்றது. ஜென்ம ராசியில் குரு பார்வை பதியும் பொழுது நன்மைகள் ஏராளமாக நடைபெறும். வாழ்க்கைப் பாதையில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். நண்பர்களும், உறவினர்களும் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். காலம் காலமாகக் கல்யாணம் பேசியும் விட்டுப் போகின்றதே, வந்த வரன்கள் வாயிலோடு நிற்காமல் சிந்தை மகிழ எப்பொழுதுதான் இல்லறம் அமைய வழிபிறக்கும், என்றெல்லாம் சிந்தித்தவர்களுக்கு இப்பொழுது புதிய பாதை புலப்படப் போகின்றது.
[post_ads_2]
எல்லாவற்றிற்கும் மேலாக ஆரோக்கியத் தொல்லையால் அடிக்கடி அவதிப்பட்டு வந்த நீங்கள் இப்பொழுது ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுவீர்கள். இதுவரை ரண சிகிச்சை செய்தால் தான் குணமாகும் என்று சொல்லிய மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாகும் என்பார்கள்.
குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். கொடிகட்டிப் பறந்த பிரச்சினைகள் இப்பொழுது படிப்படியாக மாறும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட இப்பொழுது நல்ல வாய்ப்புகள் அடுக்கடுக்காக வந்து சேரும்.
சொத்துக்களை கிரயம் செய்வதில் இருந்த தடைகள் அகலும். வீடு, இடம் வாங்கும் யோகமும் உண்டு. இதயம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். புத்திர பாக்கியத்திற்கு பரிகாரங்கள் செய்தும் இன்னும் பலன் கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு இப்பொழுது சந்தோஷப்படும் விதத்தில் புத்திர பாக்கியங்கள் அமையும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல பதவிகளைப் பெறும் வாய்ப்பு வந்து சேரும்.
குருவின் பார்வை 3-ம் இடத்தில் பதிவதால் முன்னேற்றத்தின் முதல் படிக்கு செல்ல புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதரர்கள் பகை மாறிப் பாசம் காட்டுவர். அவர்களுடைய ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண இயலும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தை பெறுவீர்கள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளையும், சுபகாரியங்களையும் நீங்களே முன்னின்று நடத்தக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
தந்தை வழி சொத்துக்கள் மற்றும் முன்னோர் வழிச் சொத்துக்களில் பாகப்பிரிவினை சம்பந்தமாக முயற்சி செய்தவர்கள் இப்பொழுது எதிர்பார்த்த நற்பலன்களைக் காண்பர். மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும். தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். அவர்கள் கடல் தாண்டிச் சென்றுபடிக்க விரும்பினால் அதற்கான முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். திருமண வயதடைந்த பிள்ளை களாக இருந்தால் அதற்கான வரன்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் களுக்கு நல்ல வரன்கள் வந்து மகிழ்ச்சியை வரவழைத்துக்கொடுக்கும். புத்தி சாதுர்யத்தால் பல புது முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சொத்துத் தகராறுகள் அகலும். வெளி நாட்டு வணிகத்திலும் ஆதாயம் கிடைக்கும்.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் விருச்சிக ராசிக்கு வருகின்றார். இதில் 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். இக் காலத்தில் குருவின் பார்வை 2, 4, 12 ஆகிய மூன்று இடங்களிலும் பதிகின்றது.
எனவே வாக்கு, தனம், குடும்பம், உறவினர்களின் உறவு, இடமாற்றங்கள் போன்றவற்றில் எல்லாம் பார்வை பலத்தால் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிணக்குகள் அகலும். பிடிவாத குணத்தோடு உங்களை விட்டுச்சென்ற சொந்தங்கள் மீண்டும் வந்து சேருவர்.

வருமான உயர்வுக்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்ற பழமொழிப்படி வீட்டையும் விரிவு செய்து கட்டமுடியவில்லையே, கல்யாண முயற்சியிலும் குறுக்கீடுகள் இருக்கின்றதே என்று கவலைப்பட்டவர்கள் இப்பொழுது சந்தோஷ வாய்ப்பு களை சந்திக்கப்போகிறார்கள்.
கட்டிய வீட்டைப் பழுதுபார்க்கும் சூழ்நிலை அல்லது வீட்டை விரிவு செய்து கட்டும் முயற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் பிள்ளைகள், உடன்பிறப்புகள் அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.
புதிய வாகனம் வாங்கும் முயற்சிக்கு ஏதேனும் சலுகைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அதுவும் கைகூடும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், கட்டிடத் திறப்புவிழாக்கள், கடைதிறப்பு விழாக்கள், பெற்றோர்களின் மணிவிழாக்கள் போன்ற சுபநிகழ்வுகள் உருவாகி வீடு களைகட்டத் தொடங்கும். மூட்டுவலி, முதுகுவலி, காதுவலி, கழுத்துவலி என்று வலிகளால் அவதிப்பட்டவர்கள் இப்பொழுது எளிய பரிகாரங்களை செய்தும், புதிய மருத்துவர்களைப் பார்த்தும் ஆரோக்கியத்தினைச் சீராக்கிக் கொள்வீர்கள்.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனிபகவான் 9-ம் இடத்தில் தனுசு ராசியிலேயே சஞ்சரிக்கின்றார். இடையில் 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியில் வக்ரம் பெறுகின்றார். இந்தச் சனி ஆதிக்கத்தின் விளைவாக கொடுக்கல் வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும்.
கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்க புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவோடு பெருமைக்குரிய சம்பவங்கள் நிறைய நடைபெறும். நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.
சனியின் பார்வை 6-ம் இடத்தில் பதிவதால் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம். பணி நிரந்தரமாகவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். தொழில் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதால் சகபணியாளர்களின் ஒத்துழைப்பும், பதவி உயர்வும் கிடைக்கலாம். சனியின் வக்ர காலத்தில் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்காமலிருக்க சிறப்பு வழி பாடுகளைச் செய்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் ராகுவும், 9-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கின்றார்கள். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். தொழிலில் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் களின் ஒத்துழைப்போடு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு எண்ணியபடியே சென்று வருவீர்கள். தூர தேசத்திலிருந்து வரும் அழைப்புகளைப் பற்றிச் சிந்திப்பீர்கள். கைநழுவிய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
உங்கள் ராசிநாதன் செவ்வாயாக இருப்பதால் இக்காலத்தில் திசாபுத்தி பலம் இழந்தவர் களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் சில தடைகள் ஏற்படலாம். உறவினர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையில் முடியலாம். இக்காலத்தில் உங்களுக்கு மனோதைரியம் அதிகம் தேவை. பிறரது சூழ்ச்சிக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது
நல்லது. எந்த நிலையிலும் பொறுமை தேவை. குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும். சுயஜாதகப்படி திசாபுத்திக்கேற்ற சிறப்பு வழிபாடும் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க வழிகாட்டும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆசைகள் நிறைவேறும் ஆண்டாகவே இந்த ஆண்டு அமையப்போகின்றது. ஓசைப்படாமலேயே சில நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். வருடத் தொடக்கத்தில் குரு பார்வை இருப்பதால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். மனக் கசப்புகள் மாறும். தாயின் உடல்நலம் சீராகும். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்புச் செய்வர்.
ஊர் மெச்சும் அளவிற்கு நல்ல பெயர் கிடைக்கும். குழந்தைகளின் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் திறமை பளிச்சிடுவதைக் கண்டு மேலதிகாரிகள் ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் வழங்க முன்வருவர். சனி செவ்வாய் பார்வை காலத்திலும், செவ்வாய் நீச்சம் பெறும் நேரத்திலும் யோகபலம் பெற்றநாளில் சிறப்பு பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. குலதெய்வ வழிபாடும், சஷ்டி விரதமிருந்து சண்முகநாதரை வழிபடுவதன் மூலமும் சந்தோஷம் நிலைக்கும்.
வருடம் முழுவதும் வசந்தகாலமாக வழிபாடு
ஆனைமுகப் பெருமானையும், அனுமனையும் வழிபட்டு வாருங்கள். கணபதி கவசம் பாடி வழிபட்டால் மனஅமைதியும் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சியும் குடிகொள்ளும்.
2019 தமிழ் வருடப் பிறப்பு பலன்கள்: மேஷ ராசி நேயர்களுக்கு இனிய காலம் 1

– Daily Thanthi

Back to top button