ஆன்மிகம்

செவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது?

செவ்வாய் பகவான் ஜூன் 22 முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை அவர் கடகத்தில் சஞ்சரிப்பார்.
கடகத்தில் நீசமடையும் செவ்வாய் மகரகத்தில் உச்சமடைகிறார்.
மிதுனத்தில் ராகு உடன் இணைந்து சனியின் நேரடி பார்வையில் இருந்த செவ்வாய் பகவான் இனி கடகம் ராசியில் சஞ்சரிக்கப்போகிறார்.
மேஷம்
செவ்வாய் உங்கள் ராசி அதிபதி. உங்கள் ராசி அதிபதி நான்காம் வீட்டில் அமர்கிறார். அதுவும் நீசமடைவதால் அவரின் சக்தி குறைந்து காணப்படுகிறது.
இந்த காலத்தில் அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். உங்க உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்க. காரணம் கடகம் தண்ணீர் ராசி.
தண்ணீர் ராசியில் நெருப்பு கிரகம் நீசம் பெற்ற நிலையில் அமர்வதால் உங்க உடம்புக்கு சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும். ஆஸ்துமா, ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்கவும்.
அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வீடு, நிலம் தொடர்பான பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும்.
உடல் உபாதைகள் ஏற்படும். மனதில் சஞ்சலம் பிறக்கும். கடன் தொல்லைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த கால கட்டத்தில் லட்சுமி நரசிம்மரை வணங்கி வர மனக்குழப்பங்களும், போராட்டங்களும் நீங்கும். ஹனுமன் சாலீசா படியுங்கள்.
ரிஷபம்
உங்க விரைய ஸ்தான அதிபதி, களத்திர ஸ்தான அதிபதி செவ்வாய் மூன்றாம் வீட்டில் அமர்கிறார். மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருக்க முயற்சிகள் வெற்றியடையும்.
தைரியம் கூடும். எங்கிருந்தாவது பணம் கொட்டும். பங்குச்சந்தைகள் மூலம் லாபம், மறைமுகமான வருமானம் கிடைக்கும் கால கட்டம் இதுவாகும். வருமானம் அதிகரித்து பாக்கெட்டில் பணம் நிறைய மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
வீடு, வாகனம், நிலம் வாங்க ஏற்ற கால கட்டம் என்பதால் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவும். உங்கள் மனைவி, காதலியின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.
தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கையிலும் காதல் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிறுபயணங்கள் நன்மையை ஏற்படுத்தும்.
மிதுனம்
இதுநாள் வரை உங்கள் ராசியில் இருந்த செவ்வாய் ராசிக்கு தனம் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் அமர்கிறார். பேசும் பேச்சுக்களில் கவனம் தேவை. பங்குச்சந்தை முதலீடுகளில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
குடும்ப உறுப்பினர்களிடமும், அலுவலகத்திலும் கோபமான பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். உறவுகளிடம் சின்னச் சின்ன சண்டைகள், சச்சரவுகள் ஏற்படும்.
கலக்கமும், கலவரமும் அதிகரிக்கும். பணம், நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். யாரிடமும் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
கண்களில் பாதிப்பு வரலாம் கவனமாக இருக்கவும். அதிக செலவுகளைப் பார்த்து அஞ்ச வேண்டாம் திருப்பரங்குன்றம் முருகனுக்கு செவ்வாய்கிழமைகளில் பாலபிஷேகம் செய்ய நன்மைகள் நல்லதே நடக்கும். செவ்வாய்கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் படிக்கவும்.
கடகம்
கடகம் ராசிக்காரக்காரர்களே உங்கள் ராசியில் செவ்வாய் நீசம் பெற்று அமர்வது சிறப்பானதல்ல. உடல் நலத்தில் சிக்கல்கள் வரும் நோய்கள் தலைதூக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அதே போல வேலையிலும் பளு கூடும். அதைப்பற்றி கவலைப்படாமல் வேலையில் கவனம் செலுத்தவும்.
அலுவலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வேலையில் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் வருவது சகஜம்தான் டென்சனாகாமல் இருப்பது நல்லது.
செவ்வாய்கிழமைகளில் பயணத்தை தவிர்ப்பது நல்லது. பழனிமலை ஆண்டவரை படியேறி தரிசனம் செய்ய தீமைகள் விலகி நன்மைகள் அதிகம் நடைபெறும்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். நமச்சிவாய மந்திரத்தை தினசரியும் படித்து வர பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்
செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். விரைய செலவுகள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றிக்கொள்ளுங்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும். உடல்நலப்பிரச்சினைகள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். இந்த காலகட்டத்தில் ரத்த தானம் செய்யுங்கள் மிகப்பெரிய பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகள் சொல்வதை கேட்டு செய்யுங்கள் எதிர்வாதம் செய்ய வேண்டாம். வீடு, நிலம், வண்டி வாகனம் வாங்கலாம் என்று இந்த நேரத்தில் முடிவு எதுவும் எடுக்க வேண்டாம் அது சிக்கலில் முடியும்.
எதிரிகளிடம் பத்திரமாக இருக்கவும் சிரித்து பேசி கவிழ்த்து விடுவார்கள் கவனம். செவ்வாய்கிழமைகளில் விரதம் இருக்க பாதிப்புகள் குறையும்.
கன்னி
லாப ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது நன்மை தரக்கூடியது. பேசும் பேச்சில் நிதானம் தேவை. பேச்சில் கோபம் வேண்டாம். பணவருமானம் அதிகரிக்கும்.
இறக்குமதி ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். ரத்தக்கொதிப்பு இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை சிகிச்சை தேவை. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று பாடக்கூடிய கால கட்டமாகும்.
உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் துறைகளில் பணி செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும்.
செவ்வாய்கிழமைகளில் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிக்கலாம். செவ்வாய்கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து முருகனை வணங்க பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
துலாம்
தொழில் உத்யோக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்வது சிறப்பம்சம். உங்கள் செயல்களே உங்களுக்கு நன்மையையும் தீமையையும் தீர்மானிக்கும்.
உங்களின் சிறப்பான பணிகளால் உத்யோக உயர்வை பெற்றுத்தரும். செய்யும் வேலையில் கவனம் தேவை. உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடப்பது நன்மையை தரும்.
பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். கூடவே செலவும் அதிகரிக்கும் என்பதால் சிக்கனமாக இருக்கவும். தம்பதியர் இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும்.
தேவையற்ற அட்வைஸ்களை தவிர்க்கவும். கோபம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ஆலய வழிபாடு மன அமைதியை தரும். பழனி மலைமேல் இருக்கும் முருகனை வழிபட மேலும் நன்மைகள் கிடைக்கும். ஹனுமன் சாலிசா படிக்கவும்.
விருச்சிகம்
செவ்வாய் உங்கள் ராசிநாதன். உங்கள் ராசி அதிபதி கொஞ்சகாலம் கடகம் ராசியில் நீசம் பெற்று ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார்.
இந்த கால கட்டம் உங்க ராசிக்கு அதிக நன்மைகளை ஏற்படுத்தாது. இத்தனை நாளாக என்ன நன்மை நடந்தது இனி நடக்க என்று நீங்க கேட்பது புரிகிறது. காரணம் ஏழரைசனியின் கால கட்டம் உங்களை அப்படி படுத்தி எடுத்து விட்டது. இனி கவலை வேண்டாம்.
இந்த கஷ்டத்தையும் கடந்து விடுவீர்கள். வெளிநாடு போக வேண்டும் என்று நினைத்திருப்பவர்கள் தயவு செய்து ஒத்திப்போடுங்கள். பயணம் அத்தனை நன்மையை தராது எனவே இந்த கால கட்டத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ளுங்கள் பாதிப்புகள் குறையும்.
விபத்தில் சிக்காமல் தவிர்க்க ரத்த தானம் செய்யுங்கள். கையில் இருந்த பணம் கரையக்கூடும் என்பதால் கவனமாக செலவு செய்யவும். முதுகு பிரச்சினைகள் வரலாம். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். உடல் நலப்பிரச்சினைகள் தீரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
தனுசு
செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். எட்டாம் வீட்டில் அமரும் செவ்வாயினால் எதைக்கண்டாலும் பயம் உண்டாகும். தேவையற்ற கோபமும் எரிச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் மீதே கோபப்பட்டு சண்டைக்கு செல்வீர்கள்.
சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். வண்டி வாகனங்களில் செல்லும் போது ஜாக்கிரதையாக இருக்கவும். நெருப்பு காயம் ஏற்படலாம் என்பதால் ஜாக்கிரதையாக இருக்கவும்.
சிரமமான கால கட்டம்தான் என்றாலும் பரிகாரம் செய்தால் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். வயிறு பிரச்சினைகள் வரும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
பாஸ்ட் ஃபுட், காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள். முருகன் கோவிலுக்கு செல்லுங்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் பகவானை வணங்கலாம் வெள்ளிக்கிழமை துர்க்கையை வணங்கலாம்.
மகரம்
செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் உச்சமடைபவர். நீசம் பெற்று கடகத்தில் புதனோடு அமர்ந்துள்ளார். களத்திரஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பதால் வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் பலரின் செயல்கள் எரிச்சலை தரும். வேலைப்பளு அதிகரிக்கும். கண்களில் எரிச்சலுடன் கூடிய வலி வந்து நீங்கும். உடல் சூட்டினால் வயிறு வலி வரும்.
செவ்வாய் ராசிக்கு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் திருமண விசயங்கள் கை கூடி வரும். வீட்டில் தம்பதியரிடையே பிரச்சினைகள் ஏற்படும்.
ஒரே வாகனத்தில் இருவரும் சேர்ந்து செல்வதை தவிர்க்கவும். கணவன் மனைவி சண்டை சச்சரவை தவிர்க்கவும். கோபம், எரிச்சல் தீர சோலைமலை முருகனை தரிசனம் செய்யுங்கள்.
கும்பம்
உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்வது நற்பலன்களை தரும். இது அற்புதமான கால கட்டம். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.
தனவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ராசி அதிபதி சனிபகவானுக்கு அவர் பகை கிரகம் என்றாலும் ஆறில் செவ்வாய் அமர்வதால் எதிரிகள் உங்களை விட்டு விலகுவார்கள். உங்களுக்கு மேன்மையும் யோகமும் கிடைக்கும்.
வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். புதிய உத்தியோகம் மாற வாய்ப்பு உள்ளது. சிலர் புதிய தொழில்களை தொடங்குவார்கள்.
பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். கடலோரத்தில் எழுந்தருளியிருக்கும் திருச்செந்தூர் முருகனை வியாழக்கிழமைகளில் வணங்க எண்ணற்ற நன்மைகள் நடைபெறும்.
மீனம்
உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் இருக்க பிள்ளைகளால் தொல்லைகள் ஏற்படும். உடல் உபாதைகளும் எதிர்ப்புகளும் ஏற்படும் என்றாலும் அதனை சமாளிக்கும் தைரியம் பிறக்கும். அதிக செலவுகளினால் அவதிகள் ஏற்படும்.
வழக்கு விவகாரங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வயிறு தொடர்பான பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

செவ்வாய் பெயர்ச்சி 2019: எந்த ராசிக்கு திடீர் தனலாபம் கிடைக்க போகுது? 1

வெளி உணவுகளை சாப்பிட வேண்டாம். கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். பிரச்சினைகள் தீர கணபதியை வணங்கவும். பாதிப்புகளில் இருந்து தப்பிக்க சுவாமிமலை முருகனை சரணடையுங்கள்.

Back to top button