செய்திகள்

2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் :கடக ராசிக்காரர்களே! விபரீத ராஜயோகம்..வீடுதேடி வருகின்றதாம்

விகாரி தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது.
அந்தவகையில் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து ரிஷப ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
(புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய)
கடக ராசி நேயர்களே,
விகாரி வருடம் பிறக்கும் பொழுது உங்கள் ராசியிலேயே பிறக்கின்றது. உங்கள் ராசிநாதன் சந்திரனுக்கு 6-ம் இடத்தில் குரு, சனி, கேது ஆகிய முப்பெரும் கிரகங்களும் சஞ்சரிக்கின்றன. சனி பகவான் உங்கள் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியாவார்.
அஷ்டமாதிபதியாக விளங்கும் சனி பகவான் 6-ல் சஞ்சரிக்கும் பொழுது 6-க்கு அதிபதியான குருவும் இணைந்திருப்பதால் வருடத் தொடக்கத்திலேயே விபரீத ராஜயோகம் செயல்படப் போகின்றது. இல்லம் நோக்கி இனிய செய்திகள் வந்து கொண்டேயிருக்கும்.
12-க்கு அதிபதியான புதனும் நீச்சம் பெறுகின்றார். எனவே பணவரவிற்கு பஞ்சமிருக்காது. எதை எந்த நேரத்தில் எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகின்றீர்களோ, அதை அந்த நேரத்தில் அப்படியே செய்து முடிக்கும் அளவற்ற ஆற்றலும் உங்களுக்கு பிறக்கும்.
சென்ற ஆண்டு வருமானத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு வருமானம் கூடுதலாக கிடைக்கும். உத்தியோக ஸ்தானத்தில் வீற்றிருக்கும் சனியால் ஜீவன ஸ்தானம் பலப்படுகின்றது. எனவே வியாபாரத்தை விருத்தி செய்ய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும்.
குரு பகவான் 9-ம் இடத்திற்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியாவார். எதிரிகளின் தொல்லை அதிகரித்தாலும் கூட உங்களைப் பார்த்தால் அவர்கள் சரணடைந்து விடுவர்.
தன்னிச்சையாக நீங்கள் எடுத்த சில முடிவுகள் உங்களுக்கு எதிர்ப்புகளை உருவாக்கும். இருப்பினும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெற்றவர்களின் நட்பால் பகையை நட்பாக்கிக் கொள்ளப்பாடுபடுவீர்கள்.
சென்ற ஆண்டில் தலைக்கு மேல் இருந்த கடன் சுமை இப்பொழுது படிப்படியாகக் குறையும். வீடு கட்டுவதற்கோ, அல்லது தொழிலை விரிவு செய்யவோ, நீங்கள் கடன் வாங்கியிருந்தால் அது இப்பொழுது வட்டியுடன் சேர்ந்து பெரியளவில் விஸ்வரூபமெடுத்துக் காட்சி தரலாம்.
ஏதேனும் ஒரு முன்னோர் சொத்துக்களை விற்று, அதில் வரும் லாபத்தைக்கொண்டு கடனைத் திருப்பிச் செலுத்தி நிம்மதிப்பெருமூச்சு விடும் வாய்ப்பும் ஒருசிலருக்கு உண்டு.
தனுசு குருவின் சஞ்சாரம்
(14.4.2019 முதல் 17.5.2019 வரையிலும் மீண்டும் 28.10.2019 முதல் 13.4.2020 வரையிலும்)
இக்காலத்தில் குருவினுடைய பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. வாக்கு, தனம், குடும்பம், தொழில், கர்மம், செயல், எதிர்கால முன்னேற்றம், வாகன யோகம், வெளிநாட்டுப் பயணம், இடமாற்றம், அரசபதவி, பிள்ளைகளின் முன்னேற்றம், சுபவிரயங்கள், அரசுவழிச்சலுகைகள் போன்றவைகளை அறிந்து கொள்ளும் இடத்தில் எல்லாம் குருவின் பார்வை பதிகின்றது. அது யோகம்தான்.
குரு இருக்குமிடத்தைக் காட்டிலும், பார்க்குமிடத்திற்குத் தான் பலன் அதிகம். எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும், பற்றாக்குறை பட்ஜெட்டால் அவதிப்பட்டாலும் குருவின் பார்வை பலம் இருந்தால் அதிலிருந்து விடுபடும் வாய்ப்புத் தானாக வந்து சேரும்.
கல்யாணமானாலும் சரி, கடைதிறப்பு விழாவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் குருபகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். அந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தை 9-ம் பார்வையாகப் பார்ப்பதால் ஒளிமயமான எதிர் காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கப்போகின்றது. படிப்படியாக முன்னேற்றம் வந்து சேரும்.
குருவின் பார்வை பலத்தால் பல நன்மைகள் வந்து சேரப்போகின்றது. இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கல்யாண வயது வந்த பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணத்தை பேசிமுடித்து மங்கல ஓசை மனையில்கேட்க வழிவகுத்துக் கொள்வீர்கள். தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.
பல இடங்களிலிருந்து வரன்கள் வந்து பரிசீலனை செய்து பார்த்ததில் எதுவும் பொருந்தவில்லையே என்று ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு ஆக்கப் பூர்வமான தகவல் இப்பொழுது வரப்போகின்றது.
10-ம் இடத்தைக் குரு பார்ப்பதால் முத்தான தொழிலும் வாய்க்கும், முன்னேற்றமும் அதிகரிக்கும் என்பது ஜோதிட நியதி. அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது 10-ம் இடத்தில் குருவின் பார்வை பதிவதால் இதுவரை தொழில் அமையவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு புதிய தொழில் அமையும்.
கூட்டாளிகள் வந்திணைந்து பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொடுக்க முன்வருவர். கேட்ட உதவிகள் வங்கிகளிலும், வள்ளல்களிடமும் கிடைக்கும்.
அரசுப்பணிக்கு முயற்சித்தவர் களுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். கர்ம ஸ்தானம் என 10-ம் இடம் கருதப்படுவதால் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.
பெற்றோர்களின் உடல் நலத்தில் ஏதேனும் சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் அது பெரியளவில் வளர்ச்சியடைய விடாமல் ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை களைப் பெறுவது நல்லது.
குருவின் பார்வை 12-ம் இடத்தில் பதிவதால் இடமாற்றம், ஊர்மாற்றம் கேட்காமலேயே ஒருசிலருக்கு கிடைக்கும்.
பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். இதுவரை தங்கள் கருத்துக் களுக்கு ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்து வருவர். தந்தை வழியில் மட்டுமல்லாமல் தாங்கள் வாங்கிய சொத்துக்களிலேயே இருந்த வில்லங்கங்கள் இப்பொழுது விலகும்.
உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு சகபணியாளர்கள் வெளிநாடு சென்றது போல் தாங்கள் செல்ல முடியவில்லையே என்ற கவலை இனி மாறும். வெளிநாட்டிலிருந்து கேட்ட சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி இப்பொழுது அழைப்புகள் வந்து சேரலாம். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரமிது.
விருச்சிக குருவின் சஞ்சாரம்
(18.5.2019 முதல் 28.10.2019 வரை)
இக்காலத்தில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் சஞ்சரிக்கின்றார். குறிப்பாக 7.8.2019 வரை வக்ர இயக்கத்திலும் பிறகு வக்ர நிவர்த்தியாகி விருச்சிகத்திற்குள்ளேயே உலா வருகின்றார்.
உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது 1, 9, 11 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உள்ளத்தில் இருந்த கலக்கம் அகலும். தெள்ளத்தெளிவாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.
அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். கொடுத்த வாக்குறுதி களைக் காப்பாற்றுவீர்கள்.
பெயர், புகழ் உயரக்கூடிய நேரமிது. தொழிலில் பெரிய அளவு முதலீடு செய்து லாபம் சம்பாதிப்பதில் அக்கரை காட்டுவீர்கள். பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டுப் புதிய பங்குதாரர்களை இணைத்துக் கொள்ள முன்வருவீர்கள்.
உத்தியோகத்தில் இருந்த கெடுபிடிகள் அகலும். இதுவரை உங்கள் கருத்துக்களுக்கு ஒத்துவராத மேலதிகாரிகளின் இப்பொழுது குணம் மாறுவர்.
நீங்கள் கேட்ட சலுகைகளை கேட்ட மாத்திரத்திலேயே கொடுப்பர். அசதி, அவநம்பிக்கை அனைத்தும் விலகும். தந்தை வழியில் ஏற்பட்ட தகராறுகள், பங்காளிப் பகை மாறும். சொத்துக்கள் வாங்க, விற்க உகந்த நேரமிது.
சனியின் சஞ்சார நிலை
ஆண்டு முழுவதும் சனி பகவான் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கின்றார். 8.5.2019 முதல் 3.9.2019 வரை தனுசு ராசியிலேயே வக்ரம் பெறுகின்றார்.
6-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வை 3, 8, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சகோதர வர்க்கத்தினர்களின் மனமாற்றங்கள் ஏற்படலாம். உங்களோடு ஒத்துவராத சகோதரர்கள் இப்பொழுது ஒத்துவருவர். இழப்புகளை ஈடுசெய்ய தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
வெளிநாட்டில் தங்கிப் பணி புரிய வேண்டுமென்று விரும்பியவர் களுக்கு அங்கு தங்குவதற்கான உரிமம் இதுவரை கிடைக்காதிருந்தால் இப்பொழுது அது கிடைக்கும்.
பார்த்தவர் வியக்குமளவு வீடு கட்டும் யோகம் உண்டு. உடன்பிறப்புகளின் இல்லத் திருமண விழாக்களை முன்நின்று நடத்திவைப்பீர்கள். சனியின் வக்ர காலத்தில் வாழ்க்கைத் துணையோடு பிரச்சினைகள் ஏற்படாதிருக்க சுய ஜாதக அடிப்படையில் பரிகாரங் களைச் செய்து கொள்வது நல்லது.
ராகு-கேதுக்களின் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் வருடம் முழுவதும் சஞ்சரிக்கின்றார்கள். இதன் விளைவாக வியாபாரத்தில் சில புதிய மாற்றங்களை செய்ய முன்வருவீர்கள். உலுக்கியெடுத்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மாறும்.
வெளிநாட்டிலிருந்து வியக்கும் தகவல் வந்து சேரும். வியாபாரம் தொழிலில் புதியவர்கள் வந்திணைவர். எதிரிகளின் பலம் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். நண்பர்களை நம்பி மிகப்பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
சனி-செவ்வாய் பார்வைக்காலம்
(14.4.2019 முதல் 23.6.2019 வரை)
இக்காலத்தில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்படுவது நல்லது. எதைச் செய்தாலும் குடும்பப் பெரியவர்களை கலந்து ஆலோசித்துச் செய்வது நன்மை தரும். நிதானம், பொறுமை ஆகியவற்றை அதிகம் கடைப்பிடிக்க வேண்டிய நேரமிது. வாங்கிய சொத்துக்களை விற்பதும், அதற்கு இணையான சொத்துக்களை வாங்குவதும் வாடிக்கையாகும்.
பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்
கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சந்திரபலம் நன்றாக இருப்பதால் தெளிந்த சிந்தனையோடு செயல்படுவீர்கள். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வீர்கள்.
மூன்றாம் நபரால் ஏற்பட்ட முன்னேற்றத் தடைகள் அகலும். வரவு செலவுகள் திருப்தி தரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
தொழிலில் உங்கள் பெயரை இணைத்துக்கொள்ள குடும்ப உறுப்பினர்கள் சம்மதிப்பர். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
தாய் மற்றும் சகோதர வர்க்கத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பணிபுரியும் பெண்களுக்கு மேலதிகாரிகளின் அனுகூலத்தோடு உயர் பதவிகள் கிடைக்கும்.
இடம் வாங்கும் யோகம் உண்டு. சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை இனி குறையும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு குடும்பத்தில் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். பவுர்ணமி வழிபாடும், நரசிம்மர் வழிபாடும் பலன்களை அள்ளித்தரும்.
வருடம் முழுவதும் வசந்த காலமாக வழிபாடு
திங்கட்கிழமை தோறும் தையல் நாயகி பதிகம் படித்து, வைத்தீஸ்வரர் – தையல்நாயகி வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். பவுர்ணமி தோறும் மலை வலம் வருவதன் மூலம் மகத்துவம் கிடைக்கும்.
– Daily Thanthi
2019 விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் :கடக ராசிக்காரர்களே! விபரீத ராஜயோகம்..வீடுதேடி வருகின்றதாம் 1

Back to top button