செய்திகள்

யாழ்ப்பாணம், கொழும்பில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரிப்பு : 251 பேர் சந்தேகத்தில் சிகிச்சை

இலங்கையில் கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை இன்று இரவு 7 மணியாகும் போது 151 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு  பகுதிகளில் பதிவான  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

இந்த 151 பேரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன்,  சீன பெண் ஒருவர் உள்ளிட்ட 21 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 127 பேர்  தொடர்ந்து வைத்தியசாலைகளில்  சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில்,  நேற்று  யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்பட்டவர் மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய இருவர் உள்ளடங்குகின்ரனர்.

அரியாலை பகுதியில் உள்ள மத போதகர் ஒருவருடன் தொடர்புகளை பேணிய மத குரு ஒருவரே நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில்  இன்று அந்த மத போதகருடன் மிக நெருக்கமான தொடர்புகளைப் பேணியதாக கூறப்படும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் இருவர்  கொரோனா தொற்று குறித்து அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இலங்கையின் கொரோனா வைரஸை காரணம் காட்டி  முடக்கப்பட்ட முதல் ஊர் யாழ். அரியாலை பிரதேசமாகும்.  கடந்த மார்ச் 21 ஆம் திகதி அந்த ஊர் முடக்கப்பட்டது.

இந் நிலையில் அந்த ஊர் இன்னும் இரண்டு  நாட்களுக்கு முற்றாக முடக்கப்பட்டிருக்கும் என அறிய முடிகின்றது.  அந்த மூன்று நாட்களின்  பின்னர் அந்த ஊர் சாதாரண ஊரடங்கு நிலைமையின் கீழ் கொண்டுவரப்படக் கூடிய சாத்தியங்கள்  இருந்த நிலையிலேயே யாழ்ப்பாணத்தில் 4 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.

இதனைவிட இன்று மட்டும் மொத்தமாக 5 கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவினர் அறிவித்த நிலையில்,  யாழ்ப்பாணத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்ப்ட்டவர்களில் இருவர் கொழும்பு மருதானை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவர்களாவர். இவர்கள் கொரோனாவால் உயிரிழந்த நபரின் மருமகன் மற்றும் பேரப் பிள்ளைகள் என தெரியவந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தகவல்களுக்கு அமைய, நாடளாவிய ரீதியில் 26 வைத்தியசாலைகளில் 4 வெளிநாட்டவர்கள் உட்பட 251 பேர் கொரோனா   வைரஸ் சந்தேகத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 35 ஆகும்.

இலங்கையில் 4 ஆவது மரணம் கொவிட் 19 ஆல் பதிவாகியது !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

அதன்படி கொரோனாவால் இலங்கையில் பதிவான 4 ஆவது மரணமாக அது பதிவு செய்யப்பட்டுள்ளது. 58 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார்.

குறித்த நபர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில், கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக ஏற்பட்ட நியூமோனியா நிலைமை தீவிரமடைந்ததை அடுத்து இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

அதன்படி இதுவரை இலங்கையில் 151 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களில் நால்வர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 21 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் மேலும் 125 பேர் தற்சமயம் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Back to top button