செய்திகள்

தாக்குதலுக்கு 90 நிமிடங்களுக்கு முன்னர் சரிக்காமுல்ல வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற வெள்ளை வாகனம்!

source :- SBS Tamil
கொழும்பு தொடர்பு குண்டுவெடிப்புக்களில் வெடித்துச்சிதறிய தற்கொலைக்குண்டுதாரிகளில் நால்வர் சரிக்காமுல்ல பிரதேசத்தில் அமைதியான பகுதியில் கடந்த சில வாரங்களாக வீடொன்றில் தங்கியிருந்ததாகவும் சம்பவம் இடம்பெற்ற ன்று ஒன்றரை மணித்தியாலத்துக்கு முன்னர் அங்கிருந்து வெள்ளை சுசூக்கி வாகனம் ஒன்றில் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் பிரிட்டிஷ் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு ஹோட்டல்களில் வெடித்துச்சிதறிய இரண்டு தற்கொலைக்குண்டுதாரிகளும் சகோதரர்கள் என்றும் அவர்களின் பெயர் மற்றும் பட விரங்களும் வெளியாகியுள்ளன.
இன்சாவ் அகமட் இப்ராஹிம் (வயது 33) மற்றும் அவரது இளைய சகோதரர் இல்ஹாம் ஆகியோரே முறையே சினமன் கிரான்ட் ஹோட்டல் மற்றும் ஷங்கரிலா ஹோட்டல் ஆகியவற்றில் வெடித்து சிதறியுள்ளார்கள் என்றும் இவர்கள் சிறிலங்காவின் மிகமுக்கியமான – செல்வாக்குமிக்க – தனவந்தர்களில் ஒருவரான மொஹமட் இப்ரஹிமினுடைய மகன்கள் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது. 
முகமட் இப்ரஹிம் ஜே.வி.பி.யின் மிக முக்கிய ஆதரவாளர்களில் ஒருவர் என்றும் 2006 ஆம் ஆண்டு முதல் சிறிலங்காவிலிருந்து மிளகாய்தூள் ஏற்றுமதி வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் மிகப்பிரபலமான நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவரது மூத்த மகனும் சினிமன் கிரான்ட் ஹோட்டலில் வெடித்து சிதறியவருமான இன்சாவ் அகமட், மிளகாய்தூள் ஏற்றுமதி நிறுவனத்தின் முகாமையாளர்களில் ஒருவராக பணியாற்றி தகப்பனுக்கு உதவிவந்த அதேவேளை, சொந்தமாக செப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு மொஹமட் இப்ரஹிம் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவருக்கான ஜனாதிபதி விருது பெற்றபோது தனது மூத்த மகனோடு இணைந்துதான் அந்த விருதைப்பெற்றுக்கொண்டார் என்று அந்த புகைப்படமும் இப்போது வெளியாகியுள்ளது.
இன்சாவ் மொஹமட், சிறிலங்காவின் செல்வந்தர்களில் ஒருவரான நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் மகளை திருமணம் செய்து அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன என்றும் கடந்த மூன்று வருடங்களாவே பிரித்தானியா உட்பட சில வெளிநாடுகளுக்கு அடிக்கடி பயணம் செய்துவந்த இன்சாவ், சம்பவம் இடம்பெற்ற தினத்துக்கு முதல் வெள்ளிக்கிழமை தான் ஸாம்பியாவுக்கு போகவுள்ளதாகக்கூறி புறப்பட்டு சென்றதாகவும் மனத்திடத்தோடு இருக்கும்படியும் மனைவிக்கு கூறினார் என்றும் கூறப்படுகிறது.
தற்கொலைக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற பின்னர், இன்சாவினுடைய கொழும்பு பங்களாவுக்கு பொலீஸார் சென்றபோது அங்கு அவரது மனைவி குண்டை வெடிக்கவைத்து பிள்ளைகளுடன் உயிரிழந்ததாகவும் இந்த சம்பவத்தில் மூன்று பொலீஸாரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும்போது இன்சாவின் மனைவி பாத்திமா கர்ப்பிணியாக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இன்சாவின் இளைய சகோதரரான இல்ஹாம் கடந்த சில வருடங்காகவே தனது மூத்த சகோதரருடன் முன்பிலும்விட நெருக்கமாக பழகத்தொடங்கியருந்தார் என்று கூறப்படுகிறது. இவர்களது இளைய சகோதரர் குறித்தும் பொலீஸார் தற்போது விசாரணை செய்து வருகிறார்கள்.
தாக்குதலுக்கு 90 நிமிடங்களுக்கு முன்னர் சரிக்காமுல்ல வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற வெள்ளை வாகனம்! 1

Back to top button