ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள்: மகர ராசிக்காரங்களே இந்த ஏழரை சனியில் உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி?

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழைரை சனியில் இது ஜென்மச்சனி காலமாகும். இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் மருத்துவ செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார்.
உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி அவரே இரண்டாம் அதிபதி. உங்கள் ராசி அதிபதி உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் நடைபெறும்.
ஜென்ம சனி என்றாலே பாதிப்பு வருமே என்று மகரம் ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம்.எல்லோருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும். அவரவர் தசாபுத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும். அதையும் தவிர சனிபகவான் உங்கள் ராசி அதிபதி உங்களுக்கு நன்மைகளையே செய்வார். சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து கொண்டு ராசிக்கு மூன்றாம் இடம், ஏழாம் இடம், பத்தாம் இடத்தைபார்வையிடுவதால் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைபட்டு வந்த திருமண சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் ஊதிய உயர்வு கிடைக்கும்.
போராட்டமே வாழ்க்கை
மனமும் உடலும் கொஞ்சம் ஒத்துழைக்காது. சோம்பல் அதிகரிக்கும். உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும். மனம் இனி அறிவு சொன்னபடி வேலை செய்யாது. மனசு சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவ்வப்போது குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொதப்பலாகத்தானே முடியும். இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு,தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு இருக்கு.
தொழில் லாபம்
உங்கள் ராசியிலே சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து வேலை செய்யுங்கள். ஒரு சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் கிட்டும். பத்தாம் வீட்டை சனி பார்ப்பதால் போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விருப்பமான வேலையை தேர்வு செய்தல் வேண்டும். சம்பள உயர்வு சிலருக்கு சாதகமாக இல்லை என்றாலும் தொடர்ந்து வேலை இருக்கும். சிறு தொழில்கள் சிக்கலின்றி நடைபெறும்.
உடலை கவனியுங்கள்
பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம். நெருப்பால் கண்டம் இருக்கு. அவமானம்,பழிசொல் ஏற்பட வாய்ப்பிருக்கு. புதிய ஆட்களிடமும் பழைய நட்புகளாக இருந்தாலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் கெடும். எனவே கவனமாக செயல்படுங்கள். உடலுக்கும்,மனதுக்கும்,உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிருங்கள் எடுக்கும் முடிவுகளை பத்து முறை அலசியபின் செயல்படுத்துங்கள்.
வெற்றி மீது வெற்றி
போராட்டமே வாழ்க்கை என்று கவலை வேண்டாம். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். மன சஞ்சலங்கள், குழப்பங்கள் குறைந்து தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் எனவே எச்சரிக்கையுடன் பேசுங்கள்.
சகோதரர்களால் நன்மை
அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவைநெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் பின்னர் சரியாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும். பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
கல்வியில் தடை
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். உயர்கல்வியில் தடை ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்து எதையும் நன்கு சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். உற்சாகமாக இருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருங்க நல்லதே நடக்கும்.
சுப காரிய நிகழ்வுகள்
உங்களின் களத்திர ஸ்தானத்தின் மீது சனிபகவான் பார்வை விழுகிறது. இதுநாள்வரை தடைபட்ட சுபகாரியங்கள் உற்சாகமான நடைபெறும். குடும்பத்தில் புது வரவு ஏற்படும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்லும்.
கடனும் நோயும்
பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள் வருவதில் சற்று கால தாமதமாகும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. அடிக்கடி அசதி, சோர்வு இரத்த அழுத்தம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் என்பதால் சிறு பிரச்சினைகளுக்கு கூட மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
பெண்களுக்கு நிம்மதி
சம்பாதிக்கிற பணமெல்லாம் செலவாகுதே கையில் நிக்கலையே என்று கவலைப்பட்ட உங்களுக்கு இனி சற்றே நிம்மதி பெருமூச்சு விடும் காலம் வந்து விட்டது. விரும்பி இடத்தில் வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். கணவரிடரும், குடும்பத்தினரிடமும் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள். 30 மாதத்தில் ஜென்மசனியை சிக்கலின்றி கடந்து விடலாம்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்: மகர ராசிக்காரங்களே இந்த ஏழரை சனியில் உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி? 1

Back to top button