ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் மற்றும் ரிஷப ராசி பலன்கள் இதோ… நல்லகாலம் பிறந்தாச்சாம்!

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் அவரது சஞ்சார பலன், பார்வை பலன் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி விடும் என்பதால் இந்த பலன்கள், பரிகாரங்கள் எழுதுகிறோம். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவான் பத்தாம் வீட்டில் அமர்கிறார். இது தொழில் ஸ்தானம். பத்தாம் இடம் கர்மஸ்தானம் என்பதால் இதை கர்மசனி என்றும் சொல்லலாம். இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு, தொழில், திருமணம், வேலைவாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.
சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் நிலை, தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பலன்களைப் பார்த்து பயப்பட தேவையில்லை. கடவுள் இருக்கிறார் கை விட மாட்டார் என்று நம்புவோம். பலன்தரும் பரிகாரங்களும் இருக்கின்றன.
சனி பார்வை என்ன செய்யும்
சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு என்றாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது சனிபகவான் பார்வை விழுவதால் அதற்கேற்ப இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும்.
ஜீவன சனி
பத்தாம் அதிபதி பத்தில் அமர்வது பாதகமில்லை. தொழில் ஸ்தான அதிபதி அவரது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு பாதகமில்லை. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படும் கவனம் தேவை.
லாபம் அதிகரிக்கும்
இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான். காரணம் சனிப்பெயர்ச்சியோடு குருவின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. அடுத்தடுத்து நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சியும் அற்புதமாக உள்ளது. செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பாக்கெட்டில் பணம் அதிகரிக்கும். அதே நேரத்தில் யாருக்கும் கடன் தர வேண்டாம். திரும்ப வரும் என்ற உத்தரவாதமில்லை.
தோள் மீது சுமை
வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். எனவே கவலை வேண்டாம் கணபதியை வணங்க, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும்.
மரியாதை அதிகரிக்கும்
இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும்.
பேச்சில் கவனம் தேவை
பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பொழுது தான் வீண் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது.
புது வீடு வாகனம் வாங்க வாய்ப்பு
அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் கவனமாக செய்யவும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை. மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும்.
தடைகள் நீங்கும்
திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். புதிய நட்புகளால் எதிர்பார்த்த நன்மைகளும் அமையும்.
மாணவர்களுக்கு வெற்றி
மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும்.
தாய்மாமனால் நன்மை
நான்காம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மையேற்படும். உறவினர்களுக்கு கர்மகாரியம் செய்ய வேண்டியிருக்கும் வேலை பார்க்கும் இடத்தில் சுமை கூடினாலும் அதை எளிதில் கையாளுவீர்கள். தந்தையால் விரைய செலவு ஏற்படும். பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகரிக்க காக்கைக்கு எள் சாதம் வைக்கவும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் தங்கத்தினால் ஆன சொர்ண சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது, பத்தாம் அதிபதி. தர்ம கர்மாதிபதி சனி பகவான், இந்த முறை மகரம் ராசியில் உங்களின் தர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த 5 ஆண்டுகாலமாக அதாவது கண்டச்சனி, அஷ்டமத்து சனியால் அவதிப்பட்ட நீங்கள், நிம்மதி பெறுமூச்சு விடும் நேரம் வந்து விட்டது.
சனிபகவான் மகரத்தில் அமரும் 30 மாத காலம் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. உங்களின் பிரச்சினைகள் தீரப்போகின்றன. உடல் நலப்பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படப்போகிறது.
ஆட்டி வைத்த சனிபகவான்
எட்டில் அமர்ந்த சனியால் கடந்த 2017ஆம் ஆண்டு முதலே அவதிக்கு ஆளாகி வந்தீர்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை இருந்தது. எப்படா நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கியிருப்பீர்கள். அதற்கான பொன்னான நேரம் தை மாதம் முதல் வரப்போகிறது. அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து விடுபடப்போகிறது.
வருமானம் எப்படி
இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு பணவருவாய் அதிகமாக இருந்தாலும் உங்களின் நிதியை நிர்வாகம் செய்வதில் கரெக்டாக இருங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் வரிசைகட்டி நிற்கும். புதிய முதலீடுகளை 2020 முடிய தவிர்த்து விடுங்கள். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு செய்யக் கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. காரணம் குருபகவான் உங்க அஷ்டம ஸ்தானத்திற்கு வந்து கேது உடன் அமர்கிறார். 2021ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டும். குருவும் சனியோடு இணைந்து 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்.
சம்பள உயர்வுடன் புது வேலை
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தம் 30 மாதங்கள் சனி பகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வதோடு நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.
பிரச்சினைகள் சரியாகும்
உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவானால் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். தற்சமயம் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் மகரம் ராசிக்கு இடம் பெயர்ந்து ஆட்சி பெற்று அமர்ந்து அதிக நன்மைகளை தருவார்.
சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
இந்த சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும்.
பொன் பொருள் சேர்க்கை
பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.
வெளிநாடு வாய்ப்பு வரும்
இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும்.
உயர்கல்வி யோகம்
ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். இதனால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.
திருநள்ளாறு சனிபகவான்
இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்துடன் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும் இனி வரும் காலமெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த காலமே.
சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் மற்றும் ரிஷப ராசி பலன்கள் இதோ... நல்லகாலம் பிறந்தாச்சாம்! 1

Back to top button