ஆன்மிகம்

சனிப்பெயர்ச்சி பலன்கள் : விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை! துலாம் ராசிக்கு இந்த சனியாம்

விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் : விருச்சிகம் ஏழரை சனியிலிருந்து விடுதலை! துலாம் ராசிக்கு இந்த சனியாம் 1
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: மேஷம் முதல் கன்னி வரை

துலாம்

சனிபகவான் இதுவரை துலாம் ராசிக்கு 3ஆம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ஆம் இடத்தில் மகரம் ராசியில் 30 மாதங்கள் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ அச்சமோ படத்தேவையில்லை. வேலை, கல்வி, திருமணம், வருமானம் ஆகியவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.
நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.
வேலையை காதலியுங்கள்
4 ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார். அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்யுங்க. உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வேலையை விட வேண்டியிருக்கும்.
வெளிநாட்டு வாய்ப்பு
வேலைக்கு அடிக்கடி லீவு போடாதீங்க. அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்பட்டாலும் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார்.
வீடு வண்டி வாகனம்
நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும். சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும். இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும்.
கடன்கள் அதிகரிக்கும்
ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். சரியான, சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும். கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும்.
தலையிட வேண்டாம்
எதிரிகள் அதிகமாக வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பிரகாசிக்க முடியும். ஜெயிக்கவும் முடியும். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள்.
உழைத்தால் வெற்றி
மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சோதனையான காலகட்டமாகும். உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருந்தால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களை பெற முடியும், விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும். விளையாட்டுகளில் கவனம் தேவை. கல்விக்கடன் கிடைப்பதில் இழுபறி ஏற்படும். தேவையற்ற நண்பர்களை வெட்டி விடுங்கள். சோம்பலை விரட்டி சுறுசுறுப்பாக இருங்க படிப்பில் ஜொலிக்கலாம்.
பெண்களுக்கு மதிப்பு
பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், பதவி உயர்வும் தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும். கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்க. வயிறு பிரச்சினைகள் வராமல் இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்க.
சனிபகவானை சரணடையுங்கள்
அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: மேஷம் முதல் கன்னி வரை

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். விரையச்சனி, ஜென்மசனி, குடும்பசனி என உங்களை கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கும்மியடித்து வந்த சனி பகவான் இனி மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடிவுகாலம் பிறக்கப்போகிறது.
உங்கள் ராசிக்கு மூன்று, நான்காம் அதிபதியான சனிபகவான் இனி மூன்றாம் வீட்டில் அமர்வதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும் ஊலாலா என்று பாடுவீர்கள். தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். சிறு பயணங்களினால் பலன் கிடைக்கும்.
சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.
சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும் சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் 30 மாதகாலமும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்,வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
ஏழரை சனி முடிஞ்சுபோச்சு
என்னா கஷ்டம்… என்னா கஷ்டம் எங்களுக்கு விடிவு காலமே இல்லையே, கஷ்டத்திற்கு விமோசனமே கிடையாதா என்று விருச்சிக ராசிக்காரர்களை புலம்ப வைத்து விட்டார் சனிபகவான். அவர் வேலை முடிந்து விட்டது கிளம்பி விட்டார். இத்தனைய ஆண்டுகாலமாக சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். சிலர் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருப்பீர்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்கி விட்டாலும் நீங்கள் படித்த பாடங்களைக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.
முயற்சிகளில் வெற்றி
நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். உங்களின் தசாபுத்தி எப்படியிருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற தொழிலை தொடங்குங்கள். அவசரப்பட வேண்டாம். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
புதிய வேலை கிடைக்கும்
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை தளர்ந்து நற்பலன் உண்டாகும். வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: மேஷம் முதல் கன்னி வரை
பணம் பாக்கெட்டில் நிறையும்
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலை என்று பாடிக்கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களே… உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, நல்ல லாபகரமாக அமையும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
திருமணம் சுபகாரியம்
காதல் இனிக்கும் சிலருக்கு கல்யாணத்தில் முடியும். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும். பிள்ளைபாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும். அதற்காக சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள். சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும்.
கடன் கொடுக்க வேண்டாம்
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம் பிறக்கும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம். யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. யாருக்கும் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
மாணவர்கள் கவனம்
மாணவர்களுக்கு படிப்பில் அதிகக் கவனம் தேவை. மூன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக மறதியை ஏற்படுத்துவார். சோம்பலை அதிகபடுத்துவார். தொடர்ச்சியாக டியூசன் சென்று வருதல் நலம். தேவையற்ற விஷயங்களில் மனைதைச் செலுத்தக் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர நினைக்கும் உங்களுக்கு நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23: மேஷம் முதல் கன்னி வரை
பெண்களுக்கு வெளிநாடு யோகம்
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நீரிழிவு, ரத்தகொதிப்பு இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் அமையும். குடும்பத்தில் புதுவரவு உண்டு. உறக்கம் கெடும் உற்சாகத்தோடு செயல்படுங்கள் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.

Back to top button