விளையாட்டு

CSK Vs RCB – பெங்களூருவை சூறையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ்: ஒரே ஓவரில் 37 ரன் விளாசிய ஜடேஜா

இந்த முறை திரில்லர் இல்லை. மிக நேர்த்தியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்று உட்கார்ந்திருக்கிறது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்.

இதற்கு முக்கிய காரணம் ஜடேஜா. அதைத்தான் சென்னை அணி கேப்டன் தோனியும் பெங்களூரு அணி கேப்டன் கோலியும் போட்டி முடிந்தபிறகு தங்கள் பேட்டியில் அடிக்கோடிட்டு காட்டினார்கள்.

ஜடேஜா பௌண்டரி அடித்தார், சிக்ஸர் விளாசினார், அரை சதம் கண்டார், சிஎஸ்கேவுக்கு ஃபினிஷராகவும் செயல்பட்டார், பௌலிங் வீசினார், குறைவாக ரன்கள் கொடுத்தார், மெய்டன் கூட வீசினார், அபாயகரமான அதிரடி பேட்ஸ்மேன்கள் இருவரை வீழ்த்தினார், ஃபீல்டிங்கில் ரன் அவுட்டும் செய்தார். இப்படி இன்றைய போட்டியில் எங்கு பார்த்தாலும் ஜடேஜாதான்.

“ஒரே ஒரு மனிதன் ஒட்டுமொத்தமாக எங்களை தோற்கடித்துவிட்டார்”. இப்படிச் சொன்னவர் விராட் கோலி. சேஸிங் செய்யவே பொதுவாக எந்தவொரு அணியும் விருப்பப்படும்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தோனி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்த மைதானத்தில் 165 ரன்கள் என்பது நல்ல இலக்கு.

கூடுதலாக 25 ரன்கள் எடுத்தால் எதிரணி வெற்றி பெற விரைவாக ரன்கள் குவிக்க வேண்டும் என அழுத்தத்தில் விளையாடும். ஜடேஜாவின் அந்த சில ரன்கள் எங்களுக்கு உதவின என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறினார்.

என்னதான் நடந்தது இந்த போட்டியில், பெங்களூரை சென்னை அணி சாய்த்தது எப்படி?

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு இன்றைய தினம் ருதுராஜ் மற்றும் டு பிளசிஸ் மீண்டுமொரு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். டு பிளசிஸ் அதிரடியாக ஆட, ருதுராஜ் பொறுப்பாகவும் நேர்த்தியாகவும் ஷாட்களை ஆடினார், குறிப்பாக பந்தை சரியாக கணித்து விளாசும் டைமிங்கில் சிறப்பாக செயல்பட்டார். இந்த ஜோடியை சாஹல் ஒன்பதாவது ஓவரில் பிரித்தார்.

இந்த சீசனில் ரெய்னா தொடர்ச்சியாக நான்காவது பேட்ஸ்மேனாக களமிறக்கப்ட்டு வந்த நிலையில், இந்த போட்டியில் மொயின் அலி சேர்க்கப்படாததால், ரெய்னா வழக்கம்போல இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறக்கப்ட்டார்.

மிடில் ஓவர்களில் அதிரடி காட்டினார் ரெய்னா. சாஹல், சுந்தர், சைனி என கிட்டத்தட்ட ஓவருக்கு ஒரு சிக்ஸரை விளாசினார்.

Jadeja

அவரை ஹர்ஷல் படேல் வீழ்த்தினார். அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிவந்த டு பிளஸிஸும் அதற்கடுத்த பந்திலேயே பௌண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து ஹர்ஷலின் பொறியில் சிக்கி பெவிலியன் திரும்பினார்.

ஹர்ஷல் வீசிய 14வது ஓவர் ஆர்சிபிக்கு திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஒரு ரன் மட்டுமே கொடுத்திருந்தார் ஹர்ஷல்.

அதன்பின்னர் சுந்தர் பந்தில் ஜடேஜா கொடுத்த கேட்சை டேன் கிறிஸ்ட்டின் தவறவிட்டார். அவர் மட்டும் பிடித்திருந்தால் ஜடேஜா டக் அவுட் ஆகிஇருப்பார். அதற்கடுத்த பந்தையே பௌண்டரிக்கு கோட்டை விட்டார் கிறிஸ்ட்டின்.

அப்போது 15 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி. 16வது ஓவரை ஜெமீசன் வீச 17 ரன்கள் குவித்து மிரட்டியது ராயுடு, ஜடேஜா இணை.

ஆனால் 17,18வது ஓவர்களை சிராஜும், ஹர்ஷலும் சிறப்பாக வீசினர். ஒரு பௌண்டரி கூட அடிக்கப்படவில்லை. இடையில் ராயுடு விக்கெட்டையும் ஹர்ஷல் வீழ்த்தி இருந்தார். 19வது ஓவரில் 9 ரன்கள் எடுத்தது தோனி – ஜடேஜா இணை.

அப்போது 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தது சென்னை அணி.

அதுவரை மிகச்சிறப்பாக பந்துவீசி வந்த ஹர்ஷல் கடைசி ஓவரை வீசினார். அப்போதுதான் அந்த மேஜிக் நிகழ்ந்தது, சென்னை 160 ரன்களை கடந்தது, 170 ரன்களை கடந்தது, 180 ரன்களையும், 190ஐயும் தொட்டது.

இதற்கெல்லாம் காரணம் ஜடேஜா. ஒரே ஓவரில் ஐந்து சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி என வெளுத்து வாங்கினார் ஜடேஜா.

டு பிளஸிஸ்
படக்குறிப்பு,டு பிளஸிஸ்

ஒரே ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து பரிதாபமாக காட்சியளித்தார் ஹர்ஷல்.

ஜடேஜாவின் மிரட்டலான இன்னிங்சால் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து தோனியுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Jadeja

சேசிங்கில் முதல் பந்தையே பௌண்டரிக்கு விளாசினார் கோலி, முதல் ஓவரில் 10, இரண்டாவது ஓவரில் 18, மூன்றாவது ஓவரில் 16 என சென்னைக்கு சற்றும் சளைக்காமல் முன்னேறியது பெங்களூரு.

குறிப்பாக படிக்கல் சாம்கரனை சிக்ஸர்களிலும், சஹரை பௌண்டரிகளிலும் டீல் செய்தார்.

மூன்று ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் எடுத்திருந்தது பெங்களூரு.

அப்போது நான்காவது ஓவரை வீச மீண்டும் சாம் கரணை அழைத்தார் தோனி. அவர் வீசிய பந்து நன்றாக எகிற, அதை கட் செய்து விளையாட முயன்றார் கோலி. பந்து நன்றாக எட்ஜாக தோனி வலது புறம் நகர்ந்து கேட்ச் பிடித்து கோலியை வெளியேற்றினார்.

அதற்கடுத்த ஓவரில் படிக்கலை வெளியேற்றினார் தாக்கூர். மேக்ஸ்வெல் தான் சந்தித்த முதல் இரண்டு பந்துகளை பௌண்டரிக்கு விரட்டினார். பவர்பிளேவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 65 ரன்கள் குவித்திருந்தது பெங்களூரு அணி.

பவர்பிளே முடிந்த பிறகு சுழற்பந்து வீச்சாளர்களை களமிறங்கினார் தோனி. அதன் பின்னர் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தன.

முதலில் ஜடேஜா பந்தில் சுந்தர் வீழ்ந்தார், பின்னர் ஜடேஜா பந்தில் மேக்ஸ்வெல் போல்டானார், அதற்கடுத்த தாஹீரின் ஓவரில் கிறிஸ்ட்டின் ஜடேஜாவில் துல்லியமான த்ரோவில் வீழ்ந்தார். அதைத்தொடந்து ஜடேஜா வீசிய ஓவரில் டிவில்லையர்ஸும் போல்டானார்.

டிவில்லியர்ஸ் விக்கெட்டை கைப்பற்றியது மட்டுமின்றி 11வது ஓவரை மெய்டனாகவும் வீசினார் ஜடேஜா.

ஜடேஜாவின் ஆட்டத்தால் ஆர்சிபி பேட்டிங் முற்றிலும் சரிந்தது. அதன் பின்னர் அந்த அணியின் வீரர்கள் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது.

69 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது சென்னை அணி.

ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

கடந்த சீசனில் அடி மேல் அடி வாங்கிய சென்னை அணி, இந்த சீசனில் டெல்லியிடம் முதல் போட்டியில் தோற்றாலும், அடுத்தடுத்து நான்கு வெற்றிகள் மூலம் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறது.

அது மட்டுமின்றி நெட் ரன்ரெட்டை சிறப்பாக வைத்திருக்கிறது. பிளே ஆஃப் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை மெல்ல மெல்ல பிரகாசமாக்கிக் கொண்டுள்ளது சென்னை அணி.

Back to top button