விளையாட்டு

T20 World Cup: அதிரடி ஆட்டக்காரர் ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree kaur): சாதிக்குமா இந்திய அணி?

ஹர்மன்பிரீத் கெளர் (harmanpree kaur) உலகக் கோப்பை சிக்ஸர் அடித்தபோது ஊக்கமருந்து சோதனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

2009ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் போட்டியிட்டன. இந்திய அணியின் புதிய மற்றும் இளம் வீராங்கனையான ஹர்மன்பிரீத் கெளர் எட்டாவது அல்லது ஒன்பதாவது இடத்தில் களம் இறங்கவிருந்தார். ஆனால் திடீரென்று ஹர்மன்பிரீத்தை முதலில் அனுப்ப முடிவு செய்தார் அணியின் தலைவர்.

8 பந்துகளில் ஒரு சிக்ஸர் உட்பட 19 ரன்களை அதிரடியாக எடுத்தார் ஹர்மன்பிரீத் கெளர். சிக்ஸர் மிகவும் வலுவாக இருந்தது, போட்டி முடிந்த பின்னர் ஹர்மன்பிரீத்துக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதற்கு காரணம், ஒரு புதிய வீரரால் எப்படி அத்தகைய ஷாட்டை அடிக்க முடியும் என்பதுதான்.

அந்த ஹர்மன்பிரீத் தான் இன்று டி 20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டன். மைதானத்தில் இறங்கினால், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிப்பது அவரது அடையாளமாகிவிட்டது.

பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கும் மகளிர் டி 20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ஹர்மன்பிரீத்தின் கனவு. டி 20 போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை இவர் தான்.

ஹர்மன்பிரீத் கவுர்படத்தின் காப்புரிமை RAVINDER SINGH ROBIN / BBC

1989 மார்ச் எட்டாம் தேதியன்று பஞ்சாபின் மோகாவில் பிறந்த ஹர்மன்பிரீத், சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டை மிகவும் விரும்பினார். ஹர்மனின் தந்தை ஹர்மிந்தர் சிங் புல்லரும் கிரிக்கெட் வீரர். தந்தை பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை அடிப்பதைப் பார்த்து வளர்ந்த ஹர்மன்பிரீத்துக்கும் அது இயல்பாகவே கைவந்தது.

மோகாவில், விளையாட்டு மைதானத்தில் பெண்கள் அதிகம் இருக்கமாட்டார்கள் என்பதால், அவர் ஆண்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார்.

அருகிலுள்ள பள்ளியின் பயிற்சியாளரான கமல்தீப் சிங் சோதி, சிறுவர்களுடன் ஹர்மன் விளையாடுவதைக் கண்டார். அதுமட்டுமல்ல, வீசப்படும் பந்துகளை அவர் அடித்து நொறுக்குவதைக் கண்டு ஹர்மன்பிரீத்தின் திறமையை உணர்ந்துக் கொண்டார். பத்தாவது வகுப்பு முடித்த பிறகு ஹர்மனை தனது பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அங்குதான் கிரிக்கெட் பயிற்சி மற்றும் ஹர்மன்பிரீத்தின் புதிய பயணம் தொடங்கியது.

ஒரு சிறிய நகரத்தில், கிரிக்கெட் விளையாடும் பெண்ணை உற்றார் உறவினர்கள் கடுமையாக விமர்சிப்பது இயல்பானதே. ஆனால் தனது சாதனையால் அனைவரின் வாயையும் அடைத்தார் மகள் என்று ஹர்மன்பிரீத்தின் தந்தை ஓராண்டுக்கு முன்பு பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பஞ்சாப் அணி மற்றும் ரயில்வே அணிக்காக விளையாடிய பின்னர் தனது 19 வயதில் 2009இல் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் ஹர்மன்பிரீத்.

ஹர்மன்பிரீத் கவுர்படத்தின் காப்புரிமை GETTY IMAGES

இன்று, அதிரடியான பேட்டிங்கிற்காக ஹர்மன்பிரீத் அறியப்பட்டாலும், அவர் அணிக்கு வந்தபோது, மெலிந்த உடல்வாகு கொண்டவராகவே இருந்தார்.

மும்பையில் வெஸ்ட்ரான் ரயில்வேயில் பணிபுரியும் போது, ஹர்மன் பேட்டிங் மற்றும் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்தி தன்னை மேம்படுத்திக் கொண்டார். தொடர்ந்து அணியில் இடம் பெற விரும்பினால், ஏதாவது சிறப்பான விஷயம் தன்னிடம் இருக்கவேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்

விரைவில் அவர் இந்திய பேட்டிங் வரிசையின் முதுகெலும்பாக உருவெடுத்தார். அவருக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக். அவரைப் போலவே 2016 ஆம் ஆண்டில், டி 20 அணியின் கேப்டனின் பொறுப்பு ஹர்மனுக்கு வழங்கப்பட்டது.

ஹர்மன், ஒரு கேப்டன் மற்றும் வீரராக, அபாயங்களை எதிர்கொள்ள தயங்கியதில்லை. அது, புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக இருந்தாலும் சரி, தானே பேட்டிங்கில் இறங்குவதாக இருந்தாலும் சரி…

2017ஆம் ஆண்டில், ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா களமிறங்கியது அனைவருக்கும் நினைவிருக்கும்.

115 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மன்பிரீத் ஆட்டமிழக்காமல் 171 ரன்கள் எடுத்தார், அதில் ஏழு சிக்ஸர்கள் மற்றும் 20 பவுண்டரிகள் அடங்கும். அப்போது ஹர்மன்பிரீத் கபில் தேவ் உடன் ஒப்பிடப்பட்டார். ஒரே இரவில் நட்சத்திர வீராங்கனையாக உருவெடுத்தார். இந்த சமயத்தில் காயம் காரணமாக விரல், மணிக்கட்டு மற்றும் தோள்பட்டையில் பிரச்சனையையும் ஹர்மன்பிரீத் எதிர்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் ஆடுகளத்தைத் தவிர, கிரிக்கெட் வீராங்கனைகளால் என்ன செய்ய முடியும் என்பதை ஹர்மன்பிரீத் செய்து காண்பித்தார். பல பெரிய பிராண்டுகள் அவரைத் தூதராக்கின.

ஹர்மன்பிரீத் கவுர்படத்தின் காப்புரிமை TWITTER / IMHARMANPREET

2018 ஆம் ஆண்டில் முதன்முறையாக, சியாட்டில் நிறுவனம், ஒரு கிரிக்கெட் வீராங்கனை ஒருவரை தனது முகமாக மாற்றியது.

சாதனைப் பதிவுகளை உருவாக்குவதில் வல்லவர் ஹர்மன்பிரீத். ஹர்மன்பிரீத் 2018 ஆம் ஆண்டில் டி 20 அணியின் கேப்டனாக ஐசிசியால் தேர்வு செய்யப்பட்டார்.

ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக்கில் கையெழுத்திட்ட முதல் இந்திய கிரிக்கெட் முகம் ஹர்மன்பிரீத். இதில் இந்தியாவின் ஆண் கிரிக்கெட் நட்சத்திரங்கள் கூட அதுவரை இணைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2017 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற சூப்பர் லீக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் ஹர்மன்பிரீத் ஆவார்.

2018 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில், நியூசிலாந்திற்கு எதிராக ஹர்மன்பிரீத் அடித்த சதம் தான் டி 20 போட்டியில் இந்தியப் பெண் ஒருவர் அடித்த முதல் சதமாகும்.

இருப்பினும், ஹர்மனைப் பற்றிய பல சர்ச்சைகளும் உள்ளன. மித்தாலி ராஜ் உடனான வாக்குவாதம், போலி பட்டம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாப் காவல்துறை அவரை டி.எஸ்.பி பதவியில் இருந்து நீக்கியது என பல சர்ச்சைகளும் அவரை தொடர்கின்றன. தனது கல்வி இளங்கலை பட்டம் போலியானது என்ற குற்றச்சாட்டை ஹர்மன்பிரீத் மறுக்கிறார்.

அண்மை சில மாதங்களாக டி20 போட்டிகளில் விளையாடும் ஹர்மன்பிரீத்தின் உடற்தகுதி குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

2018 ஆம் ஆண்டில், டி20 போட்டிகளில் 103 ரன்கள் எடுத்த ஹர்மன்பிரீத்தின் செயல்திறன் அதன்பிறகு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இருந்தாலும், கடந்த மாதம் நடைபெற்ற டி 20 போட்டியில் 42 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்தார்.

கிரிக்கெட்டுக்கும் அப்பால், கார்கள், மொபைல் மற்றும் ப்ளே ஸ்டேஷன் போன்றவை ஹர்மன்பிரீத்துக்கு மிகவும் விருப்பமானவை.

பிபிசிக்கு ஹர்மன்பிரீத் கெளர் சகோதரி ஹேம்ஜீத் அளித்த ஒரு பேட்டியில், “அவருக்கு மொபைல் மற்றும் பிளே ஸ்டேஷன் மிகவும் பிடிக்கும். ஒரு புதிய மொபைல் சந்தைக்கு வந்தால், அதை உடனே வாங்கவேண்டும் என்று ஆசைப்படுவார். வீட்டிற்கு வந்தால், இரவு இரண்டு மணி வரை கிரிக்கெட்டைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாள். பலமுறை அது எங்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும்” என்று கூறினார்.

ஹர்மன்பிரீத் கவுர்

பந்து வீச்சாளர்களை தூங்க விடாமல் கவலை கொடுக்கும் ஹர்மன்பிரீத்துக்கு தூங்குவது மிகவும் பிடிக்கும். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “என்னால் எப்போது வேண்டுமானாலும் தூங்க முடியும். விளையாட்டில் சலிப்பு ஏற்பட்டால், எனக்கு தூக்கம் வந்துவிடும்” என்று தெரிவித்திருந்தார்.

மார்ச் 8ஆம் தேதி ஹர்மன்பிரீத்தின் 31 வது பிறந்த நாள். அன்று நடைபெறும் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றிவாகை சூடவேண்டும் என்பதே அவரது விருப்பம்.

Back to top button