விளையாட்டு
		
	
	
ரவீந்திர ஜடேஜா: ’நான் அரைகுறை கிரிக்கெட் வீரனல்ல’ – தோல்வியில் மிளிர்ந்த போராளி
 OLI SCARFF/AFP/GETTY IMAGES
OLI SCARFF/AFP/GETTY IMAGES
2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி கடந்த மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டபோது ஓவ்வொரு வீரரும் எந்த தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர் என்ற விவாதம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் நிபுணர்கள் மத்தியில் எழுந்தது.
மற்ற வீரர்களின் தேர்வு குறித்து வெவ்வேறு கருத்துகள், மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும், ஒரு வீரரின் தேர்வு குறித்து ஒருமித்த கருத்தே நிலவியது. அது ரவீந்திர ஜடேஜாவின் தேர்வுதான்.
தனது சிறப்பான ஃபீல்டிங்கில் குறைந்தது 25-30 ரன்களையாவது அவர் தடுத்து விடுவார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகியவை அவரின் கூடுதல் பங்களிப்பு என்பது ஜடேஜா பற்றி ரசிகர்களின் கணிப்பாக இருந்தது.
பேக்வர்ட் பாயிண்ட் (Backward point) நிலையில் ஃபீல்ட் செய்யும் ஜடேஜா லாவகமாக பாய்ந்து பவுண்டரிக்கு செல்லும் பந்தை தடுக்கும் காட்சி ரசிகர்களுக்கு வாடிக்கையான ஒன்றாக கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.
 SAEED KHAN
SAEED KHAN
ஆனால், ஆல்ரவுண்டராக கருதப்படும் ஜடேஜாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எப்படிபட்டது?
2009-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஜடேஜா, இதுவரை 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 41 டெஸ்ட் போட்டிகளிலும், 40 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
பொதுவாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான வீரராக ரவீந்திர ஜடேஜா கருதப்பட்டாலும், அவர் டெஸ்ட் போட்டிகள் மற்றும் ரஞ்சி போன்ற உள்ளூர் முதல்தர போட்டிகளில் நீண்ட இன்னிங்ஸ் விளையாடியவர்தான்.
தனது 23 வயதுக்குள் முதல்தர போட்டிகளில் 3 முச்சதங்களை எடுத்து சாதனை படைத்தவர் ஜடேஜா.
உள்ளூர் முதல்தர போட்டிகள் பிரிவில், செளராஷ்டிரா அணிக்காக விளையாடி, கடந்த 2011-இல், ஒடிசா அணிக்கு எதிராக 375 பந்துகளில் 314 ரன்கள் எடுத்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த ஜடேஜா, தனது இரண்டாவது முச்சதத்தை குஜராத் அணிக்கு எதிராக 2012-இல் எடுத்தார்.
அதே ஆண்டில் ரயில்வே அணிக்கு எதிராக அவர் மேலும் ஓர் முச்சதத்தை எடுத்தார்.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் எந்த சதமும் எடுக்காத நிலையில், தான் விளையாடிய 41 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதத்தை ஜடேஜா எடுத்துள்ளார்.
2019 உலகக்கோப்பையில் ஜடேஜாவின் பங்கு
ஆல்ரவுண்டரான ரவீந்திரா ஜடேஜா நடப்பு உலகக்கோப்பை தொடரில் தொடக்க போட்டியில் அணியில் இடம்பெறவில்லை. குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகிய இரு சுழல்பந்துவீச்சாளர்களும் தங்கள் இடங்களை தக்கவைத்துக்கொள்ள பந்துவீச்சாளர்களுக்கான மற்ற இடங்களை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சென்றது.
ஆல்ரவுண்டர்களுக்கான இடத்துக்கு விஜய்ஷங்கர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரே கருத்தில் கொள்ளப்பட்டனர்.
ஜடேஜாவை அணியில் சேர்ப்பதால் என்ன பயன்? அவர் எட்டாவதாக பேட் செய்து எடுக்கும் ரன்களை அந்த நிலையில் பேட் செய்யும் யாரும் எடுக்க முடியுமே? சிறப்பாக பந்துவீசும் சுழல்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்க ஜடேஜா தேவைப்படுவாரா என்றெல்லாம் சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடந்தன.
 STU FORSTER-IDI/IDI VIA GETTY IMAGES
STU FORSTER-IDI/IDI VIA GETTY IMAGES
இதனிடையே ஓர் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் யுவேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவுக்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட வேண்டுமா எனும் கேள்விக்கு ”நான் அரைகுறையான வீரர்களுக்கு ரசிகனல்ல. ஜடேஜா டெஸ்ட் போட்டியில் முழு பௌலர். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தேர்வு செய்யவே விரும்புவேன்,” என சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்கு ஜடேஜா ட்விட்டரில் சஞ்சய் மஞ்சரேக்கர் மீது பதிலடி தந்தார்.
”நான் உங்களைவிட இரு மடங்கு போட்டிகள் விளையாடியிருக்கிறேன். இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை மலத்தை போதுமானளவு கேட்டுவிட்டேன்,” என ரவீந்திர ஜடேஜா ட்வீட் செய்தார்.
இது சமூகவைலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் நியூசீலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியில் ஜடேஜாவின் பேட்டிங் சமூகவலைதளங்களில் மிகவும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரையிறுதி போட்டியில் ரவீந்தர ஜடேஜாவின் பங்களிப்பு குறித்து கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் ரகுராமன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ”ஜடேஜா சச்சின், திராவிட் போன்ற நுணுக்கமான பேட்ஸ்மேன் அல்ல. விராட் கோலி, ரோகித் சர்மா போன்று அதிரடி வீரருமல்ல. ஆனால் அவருக்கென்று ஒரு தனி பாணியுள்ளது” என்று கூறினார்.
 DIBYANGSHU SARKAR
DIBYANGSHU SARKAR
”களத்தில் இருக்கும் ஓவ்வொரு நிமிடமும், அது பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என்று எந்த அம்சமாக இருந்தாலும், ஒரு லைவ்வயர் (Livewire) போல துடிப்பாக இருப்பவர் ஜடேஜா”
”ஒருநாள் போட்டிகள் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் ஜடேஜா இந்தியாவின் வெற்றிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். இந்திய ஆடுகளங்களில் அஸ்வினோடு இணைந்து அவர் எடுத்த விக்கெட்டுகள், குவித்த ரன்கள் மட்டுமல்ல இங்கிலாந்தில் 2018-இல் நடந்த டெஸ்ட் தொடரிலும் அவரின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது” என்று அவர் மேலும் கூறினார்.
”அரையிறுதி போட்டியில் ஜடேஜாவின் இன்னிங்க்ஸ் வரும் ஆண்டுகளில் மிகவும் பேசப்படும் ஓர் அம்சமாக இருக்கும். தோல்வியுற்ற போதிலும் இந்த இன்னிங்க்ஸை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வெகு நாட்கள் நினைவில் கொள்வர்” என்றார்.
 CLIVE MASON/GETTY IMAGE
CLIVE MASON/GETTY IMAGE
”முன்பு ராபின்சிங் அணியில் நம்பத்தகுந்த வீரராக இருந்தார். தற்போது ஜடேஜா அந்த நிலையில் உள்ளார். அவரை அணியின் கேப்டன் சரியான முறையில் பயன்படுத்தினால் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்” என்று ரகுராமன் மேலும் குறிப்பிட்டார்.
ஜடேஜாவின் போராட்ட கதை
தனது பதின்மவயதில் ஒரு விபத்தில் தனது தாயை பறிகொடுத்த ஜடேஜா, அந்த சூழலை கடக்க மிகவும் சிரமப்பட்டதாக பலமுறைகள் பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார்.
அந்த காலகட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை தொடர்வதே சந்தேகமாக இருந்தது. கிரிக்கெட்டை விட்டுவிடுவது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன் என்று அவர் குறிப்பிட்டார்.
கடுமையாக போராடியே அவர் செளராஷ்டிரா அணியில் இடம்பெற்றார். ஏராளமான போட்டிகளுக்கு மத்தியில் அவர் இந்திய அணியில் இடம்பெற்றது தளராத போராட்டம் மற்றும் தன்னம்பிக்கையாலும்தான்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியிலும் அப்படி ஒரு போராட்டத்தை முன்னெடுத்த ஜடேஜாதான், அரை இறுதியில் கண்டிப்பாக வெற்றி என்று விளையாடிய நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு அச்சறுத்தலாக இருந்தார்.
 NATHAN STIRK
NATHAN STIRK
77 ரன்களில் ஜடேஜா அவர் ஆட்டமிழந்தவுடன் நியூசிலாந்து அணிக்கு வெற்றி எளிதானது. 19 ரன்களில் வென்ற நியூசிலாந்துக்கு ஜடேஜாவின் விக்கெட்டை வீழ்த்துவதே ஒரே நோக்கமாக இருந்தது.
போராளி ஜடேஜா
சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள ஜடேஜாவை நகைச்சுவையாக சிஎஸ்கே அணியின் சகவீரர்களான தோனி, ரெய்னா, அஸ்வின் போன்றோர் `சர்` ரவீந்திர ஜடேஜா என குறிப்பிட அது ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டது.
ஜட்டு, சர் ரவீந்திர ஜடேஜா, ராக்ஸ்டார் என பல செல்லப்பெயர்களில் ஜடேஜா அறியப்படுகிறார்.
”ஓர் அணியில் நட்சத்திர வீரர்கள் அல்லது சாதனையாளர்கள் பலர் இருக்கலாம். அவர்களை வீழ்த்துவதைவிட கடுமையாக போராடும் ஒரு வீரரை ஆட்டமிழக்க செய்வதே எனக்கு முக்கியம். ஏனெனில் போராளிகள் எப்போதும் ஆபத்தானவர்கள்” என்று பாகிஸ்தான் அணியின் வசீம் அக்ரம் ஒருமுறை கூறியிருந்தார்.
அப்படி ஒரு போராளியாக மிளிர்ந்த ரவீந்திர ஜடேஜா, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக இன்று இருந்தார். போட்டிகளில் வெற்றி தோல்விகள் இயல்பு. ஆனால் ஒவ்வொரு தோல்வியிலும் ஒரு பாடம் இருக்கும், ஒரு புதிய நம்பிக்கை பிறக்கும்.
புதன்கிழமையன்று நடந்த போட்டியில், அந்த நம்பிக்கையை இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் ரவீந்திர ஜடேஜா விதைத்துள்ளார்.
 
					



