செய்திகள்

எங்களை எப்படியாவது வெளியேற்றுங்கள்- ஈரானில் சிக்குண்டுள்ள இந்திய மாணவிகள் கதறல்- தவிக்கும் பெற்றோர் -Coronavirus news

ஈரானின் பல்கலைகழகமொன்றில் சிக்குண்டுள்ள காஸ்மீர் மாணவிகள் தங்களை காப்பாற்றி வெளியேற்றுமாறு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

மருத்துவ விஞ்ஞானத்திற்கான சிராஸ்  பல்கலைகழக மாணவர்களே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

பல்கலைகழகம் வைரஸ் பாதிப்பினால் மூடப்பட்டுள்ள நிலையில் சுமார் 70 மாணவர்கள் அங்கு சிக்குண்டுள்ளனர்.

இதேவேளை தலைநகர் தெஹ்ரானில் 230 இந்திய மாணவர்கள் சிக்குண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் இங்கிருந்து 25 ம் திகதி வெளியேற முயன்றேன் ஆனால் அனைத்து விமானசேவைகளும் இரத்துச்செய்யப்பட்டுவிட்ட நிலை காணப்படுகின்றது, விமானநிலையத்தை இழுத்து மூடிவிட்டனர் நான் சிக்குண்டுள்ளேன் என உமா பெர்வேஸ் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு என்ன செய்வது என தெரியவில்லை நாங்கள் அச்சமடைந்துள்ளோம்,எங்களிற்காக ஏதாவது செய்யுங்கள் நாங்கள் இங்கிருந்து வெளியேற விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஒவ்வொரு நாளும் எங்கள் பதற்ற நிலை அதிகரித்து வருகின்றது என தெரிவித்துள்ள பெற்றோர் ஈரான் குறித்து வெளியாகும் தகவல்கள் எங்களை அச்சப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களின் ஒரேயொரு நம்பிக்கை இந்திய மத்திய அரசே என தெரிவித்துள்ள பெற்றோர் இந்திய மத்திய அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

நான் வங்கியில் பணியாற்றுகின்றேன்,கடந்த சில நாட்களாக நான் வேலைக்கு செல்லவில்லை என  ஈரானில் சிக்குண்டுள்ள மாணவியொருவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

சீனாவில் செய்தது போன்று அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது இரு புதல்விகளும் டெஹ்ரான் பல்கலைகழகத்தின் அறையொன்றிற்குள் முடங்கிக்கிடக்கின்றனர் என தெரிவித்துள்ள தாய் ஒருவர் நான் எனது பிள்ளைகளுடன் பேசினேன் அவர்கள் அச்சத்தின் பிடியில் சிக்குண்டுள்ளனர்,தயவு செய்து அவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுங்கள் என  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை ஆன்மீக சுற்றுலாவிற்கு சென்ற பல இந்தியர்கள் ஈரானில் சிக்குண்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Back to top button