இந்த வார கோலிவுட்: யூட்யூப் சேனல் தொடங்கும் விஜய் – அரசியல் வரவுக்கு அச்சாரமா? Tamil Cinema News
இந்த வாரம் சினிமாத்துறையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பையும், நடிகர்கள் மற்றும் அவர்களின் படங்கள் குறித்த சமீபத்திய செய்திகளையும் இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
அஜித்தின் வலிமை கோடையில் ரிலீஸ்
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் ஷூட்டிங்கை வரும் ஜனவரிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தப் படத்தில் ’ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் சென்னையின் புறநகர் பகுதிகளில் நடைபெற்றது. அதில், அஜித் பைக் ரேசிங் காட்சிகளிலும் நடித்தார். தற்போது, ஹைதராபாத்தில் ஷூட்டிங் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த வருடம் அஜித் படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், அடுத்த வருடம் கோடைகாலத்தில் நிச்சயமாக ‘வலிமை’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது படக்குழு. இதனால், வரும் 2021 ஜனவரிக்குள் படத்தை முழுமையாக முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
யூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய்
பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகளைத் தொடங்குவது போல யூ டியூப் சேனல்களையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உதயமாகவுள்ளது நடிகர் விஜயின் யூ டியூப் சேனல்.
அதிகாரப்பூர்வமாக, விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய். விஜய் தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் இனி அந்த சேனலில்தான் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் கொள்ளையனாக நடிக்கும் யோகி பாபு
அறிமுக இயக்குநர் பிரபு ராம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், மஹத் வட சென்னை இளைஞராகவும், அவரது காதலியாக ஐஸ்வர்யா தத்தாவும் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது. இத்திரைப்படத்தில் யோகி பாபு கடற்கொள்ளையனாக நடித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக யோகி பாபு இந்தப் படத்தில் நடிக்கிறார்.
கே.ஜி.எஃப். இயக்குநர் பிரசாந்த் நீல் – பிரபாஸ் இணையும் ‘சலார்’
கே.ஜி.எஃப். பட இயக்குநர் பிரசாந்த் நீல் – பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை கே.ஜி.எஃப். படத்தை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது ‘கே.ஜி.எஃப் சேப்டர் – 2’ பணிகளில் இருக்கும் பிரஷாந்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார்.
சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு
சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின் வேலைகளை முடித்த கையோடு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் சிலம்பரசன். ஓயாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருந்த வேலையில் சிம்புவின் தாய், உஷா ராஜேந்தர் அவருக்கு ஒரு பரிசளித்திருக்கிறார்.
நீண்ட நாளாக நடிகர் சிம்பு விருப்பப்பட்ட ஒரு காரை அன்பு பரிசாக தனது மகனுக்கு அளித்திருக்கிறார் உஷா. சிம்பு தற்போது அந்தப் புதிய காரில்தான் உலா வருகிறார்.
வாடிவாசலில் சூர்யாதான் நடிக்கிறார்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க வாடிவாசல் என்ற படம் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை தாணு தயாரிக்கவிருந்தார். இந்த நிலையில், தாணு பெயரிலான ட்விட்டர் கணக்கிலிருந்து, இந்தப் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால், தாணு அதை மறுத்திருக்கிறார். தன்னுடைய பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தாணு விளக்கமளித்திருக்கிறார்.”வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் வலம் வரும் வாகை சூடும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் தாணு தெரிவித்திருக்கிறார்.
தனுஷ் நடிக்கும் D43 திரைப்படம்
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகளை ஒதுக்கியுள்ளார் தனுஷ். இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிவிருக்கிறது. இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 43வது படமாகும். தனுஷுக்கு நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் படத்தில் மூன்று பாடல்கள் முடிவடைந்து விட்டதாக ஜி.வி. பிரகாஷ் பதிவு செய்துள்ளார். தற்போது நான்காம் பாடல் கம்போஸ் செய்து வருவதாக பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்யா – பா. ரஞ்சித் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
பா. ரஞ்சித் இயக்கும் படத்தின் பெயர் சார்பட்டா என அறிவித்திருக்கிறது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக இயக்குநர் பா. ரஞ்சித் முறையாக குத்துச் சண்டை கற்றுக்கொண்டு, பின் படப்பிடிப்பில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. நடிகர் ஆர்யா இந்தப் படத்துக்காக தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றிக்கொண்டிருக்கிறார். ஆர்யாவைப் போன்றே நடிகர் சந்தோஷ் பிரதாப்பும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை குத்துச் சண்டை வீரர் போல் மாற்றியிருந்தார்.
வட சென்னையைச் சேர்ந்த பிரபலமான குத்துச்சண்டை வீரர்களைக் கொண்ட குழு சார்பட்டா. 1989வரைகூட பப்ளிக் பாக்ஸிங் எனப்படும் இந்த போட்டிகள் நடைபெற்று வந்தன. பின்னர் வணிகரீதியான குத்துச்சண்டை பிரபலம் அடைந்த பின்பு பப்ளிக் பாக்ஸிங் எனப்படும் முறை அழிந்துவிட்டது. அந்த கதைக்கருவை மையமாக கொண்டு பீரியட் படமாக சார்பட்டா பரம்பரை உருவாகியுள்ளது.