விளையாட்டு

தமிழில் பேசிய நடராஜன்: “சொல்ல வார்த்தையே இல்ல, ரொம்ப சந்தோசமா இருக்கேன்” – சிட்னியில் நெகிழ்ச்சி தருணம்

சிட்னியில் செவ்வாய்க்கிழமை நடந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த தொடரில் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது.

ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். இதேபோல, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலியும், டி20 தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதன் பிறகு சோனி தொலைக்காட்சியில் தொடர் குறித்த தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார்.

அப்போது அவர், “ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது முதலாவது பயணத்தின் எதிர்பார்ப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, “நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். நான் நெட் பெளலராகவே வந்தேன். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. சக வீரர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர். அது எனக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது” என்றார் நடராஜன்.

தொடரில் இந்திய அணி வீரராக பெளலிங் திறனை வெளிப்படுத்தச் சென்றபோது ஏற்பட்ட உணர்வு குறித்து கேட்டதற்கு, “நான் எனது யார்க்கர் மீது நம்பிக்கை வைத்து இருந்தேன். விக்கெட்டுக்கு ஏற்றாற்போல கேப்டனிடம் எப்படி பெளலிங் செய்ய வேண்டும் என ஆலோசனை கேட்பேன். கேப்டன், கீப்பர் சொல்வது போல செயல்பட்டேன். முழு ஈடுபாட்டுடன் எனது திறமையை வெளிப்படுத்தினேன். வேறு மாற்றம் எதுவும் செய்யவில்லை. ஐபிஎல் தொடரில் எப்படி ஆடினேனோ அதுபோலவே இங்கேயும் ஆடினேன்” என்று கூறினார் நடராஜன்.

ஆடுகளத்தில் அதுவும் சர்வதேச மைதானத்தில் விக்கெட் எடுக்கும் போதும் சரி, காயம் ஏற்படும்போது சரி, எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமையாக இருக்க எப்படி முடிகிறது என்று முரளி கார்த்தி கேட்டதற்கு, “நான் சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை. மிக ஆக்ரோஷமாக கத்துவது எனக்கு வராது. ஒரு புன்னகை செய்து விட்டு நகர்ந்து விடுவேன். ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படித்தான் என்று தனது இயல்பான புன்னகை மாறாமல் தமிழிலேயே தனது பேட்டியை நிறைவு செய்தார் நடராஜன்.

பெளலிங்கில் சாதித்த வீரர்கள்?

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டி -20 தொடரை ஒயிட் வாஷ் செய்து 2016-ம் ஆண்டு சாதனை படைத்திருந்தது தோனி தலைமையிலான இந்திய அணி.

அப்போது வார்னர், ஸ்மித், பின்ச், மேக்ஸ்வெல், வாட்சன், கவாஜா, ஹாசில்வுட், ஃபால்க்னர், கோல்டர் நயில் என பெரும்படை இருந்தது. 

இந்நிலையில் தற்போது  டி20 தொடரை ஏற்கனவே வென்று விட்ட விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, முன்னணி வீரர்கள் சிலர் இல்லாமல் சற்று அனுபவம் குறைந்த பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியை மூன்றாவது போட்டியிலும் வென்று ஒயிட் வாஷ் செய்யுமா என கேள்வி எழுந்தது. 

ஆனால், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இந்த முறை கவனமாக பந்து வீசி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தனர். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்ற நிலையில், டி 20 தொடரில் இந்திய அணி 2-1 என வென்றுள்ளது. 

இந்த போட்டியில் வென்றதன் மூலம் 10 போட்டிகளில் தொடர்ந்து வென்று வெற்றிநடை போட்டுக்கொண்டிருந்த  இந்தியாவின் பயணத்துக்கு முற்றுப்பள்ளி வைத்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. 

எங்கே சறுக்கியது இந்தியா? எப்படி வென்றது ஆஸ்திரேலியா? இன்றைய தினம் டாஸ் வென்ற இந்திய அணி சேஸிங்கை தேர்ந்தெடுத்தது. ஆரோன் பின்ச் மீண்டும் ஆஸ்திரேலிய அணியை வழி நடத்தினார். 

இம்முறை இரண்டாவது ஓவரிலேயே சுந்தர் பந்தில் பின்ச் டக் அவுட் ஆனார். வேடுடன் ஜோடி சேர்ந்த ஸ்மித் பொறுப்பாக விளையாடினார். ஆனால் சுந்தரின் கடைசி ஓவரில் ஸ்மித்தும் அவுட் ஆனார்.

நடராஜன்

10  ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. ஒரு பக்கம் மேத்யூ வேடு அதிரடியாக விளையாடி அரை சதமடித்து முன்னேறினார். ஸ்மித் அவுட் ஆன அடுத்த ஓவரிலியே நடராஜன் வீசிய பந்தில் வெளியேறி இருக்கவேண்டும் ஆனால் அப்படி நடக்க வில்லை. ஆம். 11வது ஓவரை நடராஜன் வீசியபோது நான்காவது பந்தில் வேடுக்கு எல்பி தரப்படவில்லை.

இதன் பின்னர் இந்தியா ரிவ்யூ கோரியது. ஆனால் கேப்டன் கோலி தாமதமாக ரிவ்யூ கோரியதால் அது நிராகரிக்கப்பட்டது. பின்னர் அந்த பந்து லெக் ஸ்டம்பை பதம் பார்த்ததும், ரிவ்யூ சரியான நேரத்தில் கோரியிருந்தால் வேடு வெளியேறி இருக்க நேரிட்டிருக்கும் என்பது தெரியவந்தது. 

இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொண்ட வேடு 53 பந்துகளில் 80 ரன்கள் குவித்து அசத்தினார். இதுவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது அதிகபட்சமாகும்.

களத்தில் கலக்கிய நடராஜன், சுந்தர்

வேடு மேக்ஸ்வெல் இணை ஷர்துல் வீசிய 19வது ஓவரில்தான் பிரிந்தது. நடராஜனின் கடைசி ஓவரில் மேக்ஸ்வெல் போல்டானார். அந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் இரண்டு பௌண்டரிகளை அடித்தது ஆஸ்திரேலியா. 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

நடராஜன், ஷர்துல் தலா ஒரு விக்கெட்டையும், சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்திய வீரர்கள் பீல்டிங் செய்யும்போது கேட்சுகளை கோட்டை விட்டனர், அதே சமயம் ரன்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகவும் செயல்படவில்லை. மேலும் உதிரியாக 12 ரன்கள் கொடுத்தனர். 

இந்திய அணி சேசிங் செய்யவந்த முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது, மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் டக் அவுட் ஆனார் கே எல் ராகுல். பின்சை போலவே இவரும் 2 பந்துகளை சந்தித்து ரன்கள் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். ஆஸ்திரேலியா போலவே 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது இந்தியா. அதற்கடுத்த ஐந்து ஓவர்களில் ஆஸ்திரேலியா ஆட்டத்தை தன் பக்கம் கொண்டு வந்தது. ஸ்வெப்சன் வீசிய 13வது ஓவரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. 

ஹர்திக் பாண்ட்யாவும் கோலியும் இணைந்தநிலையிலும் ஆண்ட்ரூ டை முக்கியமான 15வது ஓவரை சிறப்பாக பந்து வீசி வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்த 5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி வெறும் 29 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் கடைசி ஐந்து ஓவர்களில் வெற்றிக்கு 76 ரன்கள் தேவைப்பட்டது. 16வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு 20 ரன்களை எடுத்தது கோலி – பாண்டியா இணை. 

அதற்கடுத்த ஓவரில் 13 ரன்கள். கடைசி மூன்று ஓவர்களில் 43 ரன்கள் எடுக்க வேண்டும் எனும் நிலை இருந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் கோலி – பாண்ட்யா அவுட் ஆயினர். இறுதியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அவரே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

ஹர்டிக் பாண்ட்யாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கபப்ட்டது. தோனி சாதனையை கோலி முறியடிக்க தவறினாலும் வேறெந்த இந்திய கேப்டனும் சாதிக்காத ஒருவிஷயத்தை சாதித்திருக்கிறார். 

ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று பார்மெட்டிலும் தொடரை வென்ற  ஒரே  இந்திய கேப்டன் கோலிதான். சர்வதேச அளவில் இதை இரண்டு கேப்டன்கள் மட்டுமே சாதித்திருக்கிறார்கள். ஒருவர் டு பிளசிஸ், இன்னொருவர் விராட் கோலி. 

Back to top button